குழந்தைப் பருவம்
குழந்தைப் பருவம்

சீரியல் கில்லர்களும் தமிழ் சினிமா இயக்குநர்களும்! எப்புடிங்க இப்படி?

சமீபத்திய தமிழ் திரைப்படங்கள் ஒரே நேர்கோட்டில் இணைவதைப் பார்க்க முடிகிறது. புறச்சூழலின் பாதிப்பால் தனது இயல்பான ஆசைகளைக் கைவிட நேரும் குழந்தைகள், பெரியவர்களின் பிரச்சனைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள், பிறப்பிலேயே குறைப்பாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாகிறார்கள் என்பதை சமீபத்தில் வெளியான போர் தொழில், மாமன்னன், அநீதி, கொலை ஆகிய நான்கு படங்களும் பிரதிபலிக்கின்றன. இதற்கு முன்பு வெளியான காதல் கொண்டேன், சந்திரமுகி, நந்தா, ஜித்தன், திருட்டு பயலே, நந்தலாலா, ராட்சசன், நவம்பர் ஸ்டோரி, நானே வருவேன், மாஸ்டர் போன்ற பல படங்களை இந்த பட்டியலில் சேர்க்க முடியும்.

இவை மூலம் தமிழ் இயக்குநர்கள் திடீர் குழந்தை உளவியல் நிபுணர்கள் ஆகிவிட்டிருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட படங்களில் நாயகனோ, வில்லனோ அவர்கள் குற்ற செயலில் ஈடுபடுவதற்கு அல்லது மனம் பிறழ்ந்து இருப்பதற்கு சொல்லப்படும் முக்கிய காரணம், அவர்களின் ‘சிதைவுற்ற குழந்தைப் பருவம்’என்பதாகக் காட்டப்படுகிறது.

கதாபாத்திரங்களின் மன உலகை, விருப்பங்களை, கனவுகளைத் துல்லியமாக காட்சிப்படுத்துவதன் வழியாக அவர்களின் இருப்பு எப்படியானது என்பதை வரையறுக்க முடியும். ஆனால் அப்படி இல்லாமல், தாங்கள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் செய்யும் குற்றத்திற்கு குழந்தை பருவத்தின் துயர சம்பவத்தை துணைக்கு அழைக்கின்றனர் இயக்குநர்கள். தாங்கள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்கு, வலிந்து ஒரு கண்ணீர் கதையை உருவாக்குகிறார்கள்.

தன்னுடைய திரைப்படங்களில் கதாபாத்திரங்களை எப்படி உருவாக்குகிறேன் என ஒரு முறை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் "நான் எழுதும்போது கதாபாத்திரமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. அதற்கு நிறைய முயற்சிகளும் பயிற்சிகளும் தேவை. அந்த இடத்தை அடையத் திரும்பத் திரும்ப ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதினேன். ஆமாம், எழுதுவது மிகவும் கடினமானது. நான் மகேஷாக, வினோத்தாக, கதிராக, கொக்கி குமாராக, கணேஷாக, முத்துவாக, கார்த்திக் சுவாமிநாதனாக மாற வேண்டி இருந்தது". என்கிறார்.

சினிமாவில் கதாபாத்திரங்களை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதாக இல்லை என்றாலும், அவை கவனமாகவும் பொறுப்புடனும் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஏற்கெனவே இயக்குநர்களின் விநோத கற்பனையில் தொழிலாளர்கள், பெண்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள், திருநங்கைகள் பற்றிய தவறான மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் குழந்தை பருவம் இயக்குநர்களுக்கு கிடைத்துள்ளது.

ஒருவர் பெரும் குற்றம் செய்வதற்கு அவர்களின் குழந்தைப் பருவம் தான் காரணமா? என சிறார் எழுத்தாளர் உதயசங்கரிடம் கேட்டோம்,“ சிறுவயதில் ஏற்படும் பாதிப்பு சீரியல் கில்லர் அளவுக்கு போகுமா என்று தெரியாது. ஆனால், அவர்களின் எதிர்கால ஆளுமையில் பாதிப்பை ஏற்படுத்தும். சிறுவயதில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன. அது குணாதியசியத்தை மாற்றக்கூடியது அவ்வளவுதான்.

ஏறக்குறைய இந்திய சிறார்களின் குழந்தைப் பருவம் சிறப்பானது என்று சொல்லிவிட முடியாது. எல்லா குழந்தைகளுக்கும் சிறப்பான பால்யகாலம் இல்லை; அதேபோல், எல்லாரும் குற்றச்செயலில் ஈடுபடக்கூடியவர்களாகவும் மாறவில்லை. சினிமா இப்படியான கதாபாத்திரங்களை உருவாக்குவது தவறான வழிகாட்டலுக்கு வழி வகுக்கும். சினிமா மட்டுமில்லை, கலை இலக்கிய பிரதிகளும் இப்படி கதாபாத்திரங்களைப் படைக்கக் கூடாது.” என கலைப்படைப்புகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை எழுத்தாளர் சுட்டிக்காட்டினார்.

“இந்த கண்ணோட்டம் அவ்வளவு சரி கிடையாது. இந்தியாவில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, சமூக நலத்துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறரால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வந்தது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் பத்தில் ஒருவர் சீரியல் கில்லராக இருக்க வேண்டும். சினிமாவில் ஏன் இப்படி காட்டுகிறார்கள் என்றால், அவர்கள் உருவாக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.

உளவியல் ஆலோசகர்- வில்லவன் ராமதாஸ்
உளவியல் ஆலோசகர்- வில்லவன் ராமதாஸ்

ஒரு செயல் செய்வதன் மீதான குற்ற உணர்வு தான் குற்றத்திலிருந்து ஒருவரை தடுக்கும். இயல்பிலேயே குற்ற உணர்வு இல்லாதவர்கள் தான் தொடர் கொலைகாரர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிகிச்சைப் பெறும் அளவுக்கு இருக்கும் மனநோயாளிகள் (clinical psychopath) பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் இப்படி பாதிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள். சிறு வயதில் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் இப்படி செயல்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இது தொடர்பான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே என் கருத்து.

தமிழ் சினிமா இந்த விசயத்தை கையாள்வதில் மிக மோசமாக இருக்கின்றனர். குறைந்தபட்சம் ஆய்வுக் கூட செய்யமாட்டார்கள்.” என்கிறார் உளவியல் ஆலோசகரான வில்லவன் ராமதாஸ்.

இயக்குநர்கள் கதாபாத்திரங்களை உருவாக்கும் போது வணிக நோக்கத்தை தாண்டி சிந்திக்க வேண்டும். குற்றம், மனப் பிறழ்வு போன்றவற்றை கொஞ்சம் அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது சமூத்திற்கு நல்லது!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com