சினிமா தயாரிப்பாளர்கள் முடிவால் படப்பிடிப்புகள் நிறுத்தம்!

சினிமா தயாரிப்பாளர்கள் முடிவால் படப்பிடிப்புகள் நிறுத்தம்!
Published on

தமிழ்நாட்டில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எடுத்த முடிவால் இன்று மாநிலம் முழுவதும் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கடந்த 26 ஆம் தேதி அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மீடியம், பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் இனி வரும் காலங்களில் வருவாய்ப் பகிர்வு ( Revenue Sharing) முறையில் நடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ”ஆந்திராவில் தயாரிப்பாளர்கள் நடிகர்களால் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு திரைப்படம் தோல்வி அடையும்போது, அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் உடனடியாக தயாரிப்பாளருக்கு அடுத்த திரைப்படம் நடித்து கொடுக்க உறுதி அளிக்கிறார். அதே போல அந்த படத்தின் இயக்குநர் தயாரிப்பாளரை அணுகி அடுத்த படம் இயக்கி தர உறுதி அளிக்கிறார். தயாரிப்பாளரின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் திரைப்படம் தயாரிக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய தயாரிப்பாளர்கள் கூட இனி திரைப்படம் தயாரிப்பாளர்களா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் பங்கு கொள்ள வேண்டும் என்று கடந்த 3 ஆண்டு காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நேரிலும், கடிதம் மூலமாகவும், பத்திரிகை வாயிலாகவும் பல முறை தெரிவித்துள்ளோம். அவர்கள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். மேலும், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துவருகின்றனர்.

ஆகவே, இந்த விஷயம் திரைத்துறையில் உள்ள அனைவரின் கவனத்துக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் 2.5.2026 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவுக்கு வந்தோம்.” என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் தெரிவித்துள்ளார்.

இந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி, நிர்வாகிகள், அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com