பராசக்தி ரிலீஸ் டென்ஷனிலும் மாணவிக்கு செமஸ்டர் பீஸ்... கட்டி உதவிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனுடன் இயக்குநர் சரவணன்
நடிகர் சிவகார்த்திகேயனுடன் இயக்குநர் சரவணன்
Published on

பராசக்தி வெளியீட்டில் பரபரப்பாக இருந்தபோதும் நடிகர் சிவகார்த்திகேயன் மாணவி ஒருவருக்கு செமஸ்டர் பீஸ் கட்ட நிதியுதவி செய்தது தொடர்பாக இயக்குநரும் எழுத்தாளருமான இரா. சரவணன் பேஸ்புக்கில் எழுதியிருக்கும் உருக்கமான பதிவு கவனிக்க வைத்துள்ளது.

முகநூலில் அவர் எழுதியது...

“தம்பி சிவகார்த்திகேயனை எத்தனையோ முறை பார்த்தாலும், பேசி இருந்தாலும் அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது இல்லை. இந்த முறை எடுக்கத் தோன்றியது. அதற்குக் காரணம் இருந்தது.

‘சங்காரம்’ நாவல் குறித்து அறிந்திருந்த சிவா, “எனக்கும் அறிவு இருக்குண்ணே… நாங்களும் புக் படிப்போம்” எனக் குறுந்தகவல் அனுப்பி என்னைச் சீண்டி இருந்தார். நேற்று ஒரு தனித்திரையிடல் நிகழ்விற்கு சிவா வருவதாகச் சொல்ல, சந்திக்கப் போயிருந்தேன்.

தம்பி வந்ததும் கைக்குலுக்கி, தகப்பனைப் பறிகொடுத்த ஒரு மகளின் படிப்பு செலவை ஏற்று உதவிய அவருடைய அக்கறைக்கு நன்றி கூறினேன்.

“மொட்டை தலை கெட்டப் அருமையா இருக்குண்ணே… சின்ன புள்ளை மாதிரி ஆகிட்டீங்களே”

“அந்தப் பொண்ணு இப்போ நல்லா படிக்கிறாங்க தம்பி. கடைசி நேரத்துல ஃபீஸ் கட்டி அவங்களை நெகிழ வைச்சுட்டீங்க…”

“வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாண்ணே?”

“அந்த மாணவியோட குடும்பத்துக்கே நீங்கதான் இப்போ பெரிய நம்பிக்கை. எல்லா வகையிலும் கைவிடப்பட்ட ஒருத்தருக்கு நீங்க துணையா நிற்கிறது வியக்க வைக்குது”

“பட வேலைகள் எப்படிண்ணே போகுது?”

“அந்தப் பொண்ணும் அம்மாவும் குடும்பத்துல தவறிப்போன ஒருத்தரே சிவா வடிவில் வந்துட்டதா நினைச்சு உங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னாங்க…”

“சங்காரம் புக் ரிலீஸ்க்கு ஒரு தகவல்கூடச் சொல்லலை?”

“நெல் ஜெயராமன் குடும்பம் தொடங்கி கல்வி உதவி வாங்கியிருக்க பொண்ணோட குடும்பம் வரை பல பேருக்கு பெரிய நம்பிக்கையா இருக்கீங்க…”

“சங்காரம் புக் நாவலா இல்லை திரைக்கதையாண்ணே?” மறுபடியும் டாபிக் மாற்றிய சிவகார்த்திகேயனை முதன் முறையாய் கெட்டியாய்க் கட்டிக்கொண்டேன். நன்றியை ஏற்காத அவர் குணமும், நமக்குப் போக்குக் காட்டும் அவர் சேட்டையும் வழக்கமானதுதான்.

‘பராசக்தி’ ரிலீஸ் நேரம்… சென்ஸார் உள்ளிட்ட பல சிக்கல். அந்த நேரத்தில் எனக்கு ஓர் அழைப்பு. கேட்கையிலேயே நெஞ்சு அடைத்து மீண்டது. ஒரு கல்லூரி மாணவியின் கண்ணீர். “சமஸ்டர் ஃபீஸ் கட்ட இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் சார்…” அந்த மாணவி சொல்லி முடிக்கும்போதே, சிவகார்த்திகேயன்தான் கண்ணில் வந்தார். ஆனால், ‘பராசக்தி’ ரிலீஸ் நேரமாயிற்றே… வேறு ஆட்களை அணுகலாம் எனப் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு போன் பண்ணியும் பலனில்லை. தம்பி சிவாவிற்கே குறுந்தகவல் அனுப்பினேன். மின்னலென தம்பி நவனீதன் தொடர்புக்கு வந்தார். “நாளைக்கு படம் ரிலீஸ்ணே… இப்போ சொல்றீங்களே” என்றவர் அந்த மாணவியின் எண் வாங்கி, பேசி, டி.டி எடுத்து கல்லூரிக்கு அனுப்பி இரவு 11:30 மணிக்கு எனக்கு போன் பண்ணினார். உதவி கேட்ட நானே தூங்கிவிட்டேன். அந்த நேரத்தில் நவனீதன் அழைத்து ஃபீஸ் கட்டிவிட்ட விவரத்தைச் சொன்னார். “நன்றி அண்ணா…” என ஃபீஸ் கட்டப்பட்ட விவரத்துடன் அந்த மாணவி அனுப்பிய குறுந்தகவலும் வந்திருந்தது.

மிக நெருக்கடியான நேரத்தில் சட்டென உதவிய சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாய் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினேன். “அண்ணே…” என என் கைகளை அழுந்தப் பிடித்துக் கொண்டார் சிவா. அவர் கைகளின் வழியே அந்தக் குடும்பத்தின் ஆத்மார்த்த நன்றியைக் கடத்தினேன். நெகிழ்ந்திருந்த சிவாவிடம்,

‘சங்காரம்’ நாவல் கொடுக்க விரும்பாமல், நிறைவோடு கிளம்பினேன்.

சிவா செய்தது கோடி ரூபாய் உதவி அல்ல… ஆனால், அடுத்த நாள் பட ரிலீஸை வைத்துக்கொண்டு ஒருவரின் கவலை குறித்துக் கேட்கிற மனம் நிச்சயமாகக் கோடிக்குச் சமம்!” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com