
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரிய அளவுக்குப் பேசப்பட்ட படம், பராசக்தி. கலைஞர் கருணாநிதியின் வசனத்தால் இன்றைக்கும் பேசப்படும் இந்த டைட்டில், சிவகார்த்திகேயனுக்கு வித்தியாசமான வரவேற்பைக் கொடுத்தது.
மொழிப் போராட்டத்தைப் பற்றிய இந்தப் படம், ஜென் சி இளைஞர்களை பழங்காலத்துக்கு இழுத்துச்சென்று வரலாற்று நிகழ்வுகளை அறியத் தூண்டிவிட்டது. இதை வைத்து, அப்போது ஒரே கூட்டணியில் இருந்த தி.மு.க.வினரும் காங்கிரசாரும் அடித்துக்கொள்ளாத குறையாக சமூக ஊடகங்களில் திட்டித் தீர்த்துக்கொண்டனர்.
அந்தப் பிரச்னை தேர்தல் அறிவிப்பு வந்தகையோடு மறைந்துபோக... தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்துள்ள நிலையில், புதிய பராசக்தியின் இயக்குநர் சுதா கொங்கரா ஒரு பிரச்னையை முன்வைத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் ஆம் கடந்த ஆட்சியில் அதிக செல்வாக்காக பல படங்களைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனம்தான், பராசக்தி படத்துக்கு சம்பள பாக்கியைத் தரவில்லை என்று சுதா பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளார்.
தனக்குப் பேசிய சம்பளத்தில் பாக்கி 8.39 கோடி ரூபாயைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்திருக்கிறார்.
இதே நிறுவனம் தயாரித்துள்ள இதயம் முரளி படத்தை ஜூலை 10ஆம் தேதி வெளியிடக்கூடாது என்றும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பராசக்தி படத்தின் சேட்டலைட் வெளியீட்டையும் ஜூலை 8வரை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.