தமிழ்நாடு அரசு சார்பில் நாளை இளையராஜாவுக்கு பாராட்டு விழா… ரஜினி, கமல் பங்கேற்பு!

இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா
Published on

திரையுலகில் பொன்விழா காணும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

இசையமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி அரங்கேற்றினார்.

லண்டனில் இருந்து இளையராஜா திரும்பியபோதே, அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்தப் பாராட்டு விழாவின் தொடக்கத்தில் இளையராஜாவின் சிம்பொனி-இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார்.

நிகழ்வின் அழைப்பிதழ்
நிகழ்வின் அழைப்பிதழ்

நடிகர்கள் கமல்ஹாசன் எம்.பி., ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார்கள். இதில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், திரைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழ்த் திரையுலக முக்கிய பிரமுகர்கள் முதலானோரும் பங்கேற்கிறார்கள்.

நிறைவாக இசைஞானி இளையராஜா எம்.பி., ஏற்புரை வழங்குகிறார். இறுதியில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி கூறுகிறார்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக சிம்பொனி கலைஞர்கள் 86 பேர் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்று சென்னை வந்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com