
மனைவி பிரசவத்துக்கு வைத்திருந்த பணத்தை இணைய மோசடியால் எப்படி இழந்தேன் என்பதை பகிர்ந்து கொண்ட நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி, ஏபிகே பைல் வந்தால் ஓப்பன் தொட்டுக்கூடப் பார்க்காதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.
‘பேய் இருக்க பயமேன்’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்த கார்த்தீஸ்வரன் இயக்கி நடிக்கும் திரைப்படம் ’நிர்வாகம் பொறுப்பல்ல’. இந்த படத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிளாக் பாண்டி பேசியதாவது, “என்னுடைய இரண்டாவது மகள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருக்கிறோம். பிரசவ செலவுக்கென்று அக்கவுண்டில் 27 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தேன். நான் ஒரு காரிலும் மனைவி வேறு காரிலும் சென்றுக் கொண்டிருகிறோம். நான் போன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய மனைவிக்கு வங்கியில் இருந்து போன் வந்துள்ளது. ஆதார் கார்டு சரிபார்ப்பு என்று பேசியிருக்கிறார்கள். பிறகு வாட்ஸ் செயலியில் வந்த ஒரு பைலை க்ளிக் செய்து உள்ளே போயிருக்கிறார். உடனே வங்கி கணக்கிலிருந்து 27 ஆயிரம் ரூபாயும் வேறு ஒரு வங்கி கணக்குக்கு சென்றுவிட்டிருக்கிறது. பணம் போனதை எண்ணி கோபப்படுவதா, மனைவிக்கு ஆறுதல் சொல்வதா என்று தெரியாமல் மருத்துவமனைக்கு சென்றோம்.
பிறகு போலீசில் புகார் கொடுத்தோம். விசாரிக்கிறோம் விசாரிக்கிறோம் என சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த சம்பவத்தையே மறக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. வாழ்க்கையில் நிறையப் பேர் இப்படி பணத்தை இழந்திருப்பார்கள். எல்லோரும் போன் வைத்திருக்கிறோம். வாட்ஸ் செயலிக்கு ஏபிகே பைல் (APK file) வரும். அந்த பைல் வந்தால் தொட்டுக்கூடப் பார்க்காதீர்கள்” என்றார்.