முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் அங்கிள் என்று அழைத்தில் தவறு இல்லை என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் உணவகம் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில், “படையப்பா படத்தை ரீ ரிலீசுக்கு தயார் செய்து வைத்துள்ளோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் ரஜினி தான். அவர் தான் படத்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.
படையப்பா படம் வெளியாகி 27 வருடம் ஆகிவிட்டது. அவ்வை சண்முகி, தெனாலி, தசவதாரம், வில்லன், வரலாறு போன்ற பல படங்களை ரீ ரிலீசுக்கு கேட்கிறார்கள். படங்களை ஒரு கேப் பார்த்து தியேட்டர்களில் மறுபடியும் ரிலீஸ் செய்தால், ஓரளவு கலெக்சன் வரும்.” என்றவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் அங்கிள் என அழைத்துக் குறித்து கேள்வி எழுப்பட்டது.
அதற்கு, “எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அதில் எனக்கு அனுபவமும் இல்லை. ஆனால் விஜய் பேசியது எனக்கு தப்பாக தெரியவில்லை. அவர் நேரில் பார்க்கும்போது ‘அங்கிள்’ என்றுதான் அழைப்பார். இப்போது மேடையில் அப்படியே பேசிவிட்டார். அதை வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொண்டு அவரை பலரும் திட்டி வருகிறார்கள். இது தேவையில்லாதது. அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ‘விஜய் பேசியதை விட்டுவிட்டு நாட்டுக்கு என்ன நல்லதோ… மக்களுக்கு எது நல்லதோ... அதை போய் பண்ணுங்க.” என்றார்.