
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பயணத்தை தொடக்கிய இந்த டைட்டானிக், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ரிலீஸ் தேதிகளை அறிவித்துவிட்டு ஒரு வழியாக இந்த வாரம் திரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
7 வருடங்களுக்கு முன்பே சிந்திக்கப்பட்ட கதை என்பதால் கொஞ்சம் பழசாகத்தான் இருக்கும். சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்கிற முடிவோடு போனால் 70 வருடப் பழைய கதை ஒன்றை ரயிலில் வைத்து ஓட்டுகிறார்கள்.
கலையரசன், காளிவெங்கட், புதுமுகம் ராகவ் விஜய் மூவரும் பெங்களூர் நோக்கிய ரயிலில் ஒரே கம்பார்ட்மென்டில் பயணிக்கிறார்கள். ராகவுக்கு அடுத்த நாள் திருமணம். காளி வெங்கட் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குப் போன மனைவியை அழைக்கப்போகிறார். கலையரசன் 6 வருடங்களுக்கு முன்பு பிரேக் அப் சொன்ன காதலியைத் தேடிப்போகிறார். மூவரும் பரஸ்பரம் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் தங்கள் காதல் கதைகளை எடுத்துவிடுகிறார்கள். மூன்றுமே காதல் கப்பல் கவுந்துபோன கதைகள். இதில் டைரக்டர் வைத்திருக்கும் ட்விஸ்ட். முதல் இருவர் காதலித்த கயல் ஆனந்தியைத்தான் அடுத்த நாள் ராகவ் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பது.
அடடே அயங்கரமான ட்விஸ்ட்டாக இருக்கிறதே என்று தோணும். இதை திரைக்கதையாக்கிய வகையில், காட்சிப்படுத்திய வகையில் மொத்தப்படத்திலும் நம்மைப்படுத்தி எடுக்கிறார் இயக்குநர் ஜானகிராமன்.
இசை நிவாஸ்.கே.பிரசன்னா. ஒளிப்பதிவு பல்லு. இருவரும் சவ்வான கதையிலிருந்து நம்மைக் காப்பாற்றப்படாத பாடு படுகிறார்கள். நோ யூஸ்.
நடிப்பில் கலையரசன், காளிவெங்கட், புதுமுகம் ராகவ் மூவருமே என்னத்துக்குடா இப்பிடி ஒரு படத்துல கமிட் ஆனோம் என்றே தடுமாறுகிறார்கள். கயல் ஆனந்தி, ஆஸ்னா ஜவேரி என இரு கதாநாயகிகள். இவர்களும் படத்தில் இம்சைகள்தான்.
தயாரிப்பு சி.வி.குமார். சில வருடங்களுக்கு முன்பு ‘அட்டகத்தி’ பிட்சா’,’சூது கவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற விவரமான படங்களை எடுத்தவர். சமீபகாலமாக கதை, இயக்குநர் தேர்வுகளில் தொடர்ந்து தடுமாறி வரும் வகையில் இதுவும் சேர்ந்துகொள்வது கொஞ்சம் வருத்தம்தான்!