கன்னட சினிமா மற்றும் மலையாள சினிமாவில் இளைஞர்களின் உலகம், காதல், மொழி, குரல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழில் அப்படிப் பேசப்படவில்லை என இயக்குநர் வசந்த பாலன் கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'மார்கன்'. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார்.
தற்போது விஜய் ஆண்டனி தயாரிக்கும் 'பூக்கி' படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்குகிறார். விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் இயக்குநர் வசந்த பாலன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது மேடையில் பேசிய அவர், "சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டைப் பார்த்தேன். அந்த மாநாட்டைப் பார்த்தபோது மாநாட்டிற்கு வந்த இளைஞர்கள் அரசியல் படுத்தப்படாமல் இருக்கிறார்கள். காலையிலிருந்து வெயிலில் கருகிச் சாகிறார்கள். மேடையிலிருந்து தூக்கி வீசப்படுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் கவலை அளிக்கும் படியாக இருந்தது. ஏதோ ஒரு விதத்தில் இந்த இளைஞர்களை நாம் கவரத் தவறி விட்டோம் என்று தோன்றியது. அந்த இளைஞர்களை அரசியல்படுத்தத் தவறிவிட்டோம், அவர்களின் குரலைப் பேசத் தவறி விட்டோம் என்று தோன்றியது. அவர்களின் குரல் பேசப்பட வேண்டும், அவர்களின் மனது என்ன? அவர்களின் உலகம் என்ன? அவையெல்லாம் பேசப்பட வேண்டும் என்று எனக்குள் யோசனை வந்து கொண்டே இருந்தது.
கன்னட சினிமா மற்றும் மலையாள சினிமாவில் இளைஞர்களின் உலகம், காதல், மொழி, குரல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
தமிழில் அப்படிப் பேசப்படவில்லை. நீண்ட காலமாக காதல் படங்கள் வரவில்லை. இளைஞர்களின் உணர்வுகள் படமாக்கப்படாமலே இருந்து வருகிறது.இப்படி நான் யோசித்துக் கொண்டு இருக்கையில்தான் 'பூக்கி' படம் உருவாகிறது" என்று பேசியிருக்கிறார்.