2010ம் ஆண்டு வெளியான ‘அசல்’ படத்துக்குப்பின்னர் கடந்த 16 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத அஜித், சொந்தப்படம் எடுக்கும் நிலையிலாவது சந்திப்பாரா என்பதுதான் கோடம்பாக்கத்தின் 500 கோடி மதிப்புள்ள கேள்வி.
’குட்பேட் அக்லிக்குப் பின்னர் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வந்த அஜித், மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். படத்தலைப்பு ’டேர் டெவில்’. அவர் கேட்ட 200 கோடி சம்பளத்துக்கு தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராத நிலையில் அவரது மனைவி ஷாலினியே இப்படத்தைத் தயாரிக்கிறார். தயாரிப்பு நிறுவனத்துக்கு, துணிச்சலான முடிவு எடுத்ததற்காக, ’பிரேவ் ஹார்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. மிக மிக சுமாரான ‘குட் பேட் அக்லி’யை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க, சவுண்ட் பாய் அனிருத் இசையமைக்கிறார்.
2010 ‘அசல்’ படம் வரை பத்திரிகையாளர்களுடன் மிக நெருக்கமாகப் பழகி வந்த அஜித், அதன் பின்னர் அவர்களுடன் அன்னம் தண்ணி புழங்குவதை அடியோடு நிறுத்திக்கொண்டார். அடுத்து வெளியான அவர் படங்களுக்கு பத்திரிகையாளர் சந்திப்புகள் நிகழ்ந்ததே இல்லை.
இந்நிலையில் சொந்தப்படம் என்னும் ரிஸ்கில் இறங்கியிருப்பதால், முக்கியமாக அனைத்து ஃபைனான்ஸ் டாகுமென்ட்களிலும் அவரது மனைவி ஷாலினியே கையெழுத்திட்டிருப்பதால் இப்படத்தின் வெற்றி என்பது அஜித்துக்கு கார் ரேஸ் வெற்றியை விட முக்கியமானது. எனவே இம்முறை பட ரிலீஸுக்கு முன்னர் பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளில் நிச்சயம் அஜித் தல காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க மாட்டேன் என்று அஜித் ஸ்டைலில் பிடிவாதம் பிடித்து வந்த நடிகை நயன்தாரா, தானே தயாரிப்பாளரான பிறகு டெண்டு கொட்டகைகள் வரை விசிட் அடித்தது இங்கே நினைவுகூரத் தக்கது.