’உங்க ‘ட்ரெயின்’ ஸ்டேஷனை விட்டு எப்பதான் கிளம்பும் மிஸ்டர் மிஷ்கின்?

’உங்க ‘ட்ரெயின்’ ஸ்டேஷனை விட்டு எப்பதான் கிளம்பும் மிஸ்டர் மிஷ்கின்?
Published on: 

விழா மேடைகளில் ஓவராக உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் இயக்குநர் மிஷ்கினின் ‘ட்ரெயின்’ படம் ஒருவழியாக டிசம்பர் 4 அன்று ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அப்போதெல்லாம் வராத படம் இந்த டிசம்பருக்காவது வந்துவிடுமா என்பதுதான் சாட்சாத் மிஷ்கினுக்கே இருக்கும் சந்தேகம்.

விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, கமலின் வாரிசு ஸ்ருதி கவுரவத்தோற்றத்தில் நடிக்க, மிஷ்கினே இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கும் படம் ’ட்ரெயின்’. தயாரிப்பாளர் எஸ். தாணு.

2023ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்படம் மிஷ்கின் வழக்கமான ஆர்வக்கோளாறுகளால் கொஞ்சம் தாமதமாகி 2024 இறுதியில் முடிவடைந்து, 2025ன் பல மாதங்களில் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாரானது. ஆனால் தயாரிப்பாளர் எதிர்பார்த்தபடி படம் வியாபாரமாகவில்லை. முழுப்படத்தையும் ரசித்துப் பார்த்த தாணுவுக்கு சொந்தமாக ரிலீஸ் செய்யவும் துணிச்சலில்லை.

தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா, பத்தா ஆகிய இரு படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகியுள்ளதால் இப்படம் ரிலீஸை நோக்கி நகரத்துவங்கியுள்ளது.

இதே மிஷ்கின் இயக்கத்தில் 2020ல் துவங்கப்பட்ட ‘பிசாசு2’ படமும் இன்னும் திரைக்கு வராமல் முடங்கிக் கிடக்கிறது. இப்படி இரு படங்களும் முடங்கிக்கிடப்பதால் மனமுடைந்த சமீபத்திய விழா மேடை ஓன்றில், ‘என் கனவில் இறந்துகிடந்த இரு யானை குட்டிகளைக் கண்டேன். கூகுளில் அந்தக் கனவுக்கான காரணத்தைத் தேடியபோது அவை இரண்டும் ரிலீஸாகாத என் இரு படங்கள்’ என்று அந்த குட்டிகள் சைஸில் ஒரு குண்டைப்போட்டார்.

பலகோடிகள் முதலீடு செய்து தான் தயாரித்த படத்தை இறந்துபோன யானைக்குட்டி என்று சொன்னதால் மிஷ்கின் மேல் கொலவெறி கோபத்தில் இருக்கும் தயாரிப்பாளர் தாணு, அதற்கு பதிலடியாக மிஷ்கினுக்கு சம்பள பாக்கியை செட்டில் செய்யப்போவதில்லையாம்.

அப்ப டிசம்பர்லயும் ஸ்டேஷனை விட்டுக் கிளம்ப மாட்டீங்களா ?

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com