“தப்பா நினைக்காதீங்க.. தயவு செஞ்சு மன்னிச்சுடுங்க..” – படவா கோபி

படவா கோபி
படவா கோபி
Published on

தெரு நாய் தொடர்பான சர்ச்சை விவகாரத்தில் நடிகர் படவா கோபி மன்னிப்பு கேட்டுள்ளார்.

நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் Vs தெரு நாய்களுக்கும் நகரத்தில் உரிமை உள்ளது என்ற தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் ஒருங்கிணைத்த நீயா நானா விவாத நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 31) ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெரு நாய்களை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு தரப்பினர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் படவா கோபி, “வழக்கமாக வந்து செல்பவர்களை நாய் கடிக்காது. ஆனால் இரவு 9 மணிக்கு பிறகு புதிதாக தன்னுடைய இடத்திற்கு யாரோ ஒருவர் வருகிறார் என்றால் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக நாய்கள் குரைக்கும். எதற்கு இரவு 11 மணிக்கு இதுபோன்ற இடங்களுக்குச் செல்கிறீர்கள். அப்படி சென்றால் உரிய பாதுகாப்போடு செல்லுங்கள்” என்றார்.

அதற்கு கோபிநாத், “நான் எங்கு செல்ல வேண்டும். எந்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நான் தான் முடிவு எடுக்க வேண்டுமே தவிர, நாய் முடிவு செய்யக் கூடாது” என்றார்.

இந்த நிலையில் படவா கோபியின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற படவா கோபி தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நீங்கள் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு.. இதை இப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. முடிந்தால் விஜய் டிவி நிர்வாகத்திடம் எடிட் செய்யப்படாத வீடியோவை ஒளிபரப்ப வேண்டும் என்று கேளுங்கள்.

அதேசமயம் பொது மக்கள் யாரும் தயவு செய்து என்னை தவறாக நினைக்காதீர்கள். என்னுடைய பேச்சால் பாதிக்கப்பட்டவர்கள் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் அந்த மாதிரியான எந்த வித எண்ணத்திலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மனிதர்கள் மீது உள்ள அன்பிலும், நாய்கள் மீது உள்ள அன்பிலும் இதற்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் அந்த நிகழ்ச்சிக்கு போனேன். நான் போன எண்ணம் வேறு. அங்கு நடந்தது வேறு. நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com