சினிமா பத்திரிகையாளர்களுக்கும் – நடிகர் ரோபோ ஷங்கருக்குமான வார்த்தை மோதல் அவ்வப்போது வெடிப்பதை பார்க்க முடிகிறது. இன்று அப்படி சம்பவம் நடந்தேறியுள்ளது.
ஆதி, ஹன்சிகா நடிப்பில் மனோஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பாட்னர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
விழாவில் பேசிய ரோபோ ஷங்கர், “படத்தில் ஒரு முத்தக் காட்சி இருக்கிறது. தனிமையில் பார்ப்பதற்கான ஆவலைத் தூண்டக் கூடிய காட்சி அது.
ஹன்சிகாவை பத்தி சொல்லனும்னா, அவங்க மெழுகு பொம்மை. மைதா மாவைப் பிசைந்து, உருட்டி அதை சுவரில் அடித்தால் ஒட்டிக்கொள்ளும் பாருங்க, அந்த மாதிரி தான் அவங்க.
படத்தில் ஒரு காட்சி எடுக்க நானும் இயக்குநரும் படாதபாடு பட்டோம். ஒரு பொருளைத் தேடுவதற்காக முட்டிக்கு கீழே ஹன்சிகா காலை நான் தொட வேண்டும். அவங்க ஒத்துக் கொள்ளவே இல்லை. ’கட்டை விரலாவது தடவிக்கிறேங்க’ என்று சொன்னால் கூட ஒத்துக் கொள்ளவில்லை. ஆதி மட்டும் தான் என்னை தொடவேண்டும், மற்றபடி வேறு யாரும் கூடாது என்று சொல்லிவிட்டார்.
அப்போதுதான் தெரிந்து கொண்டேன், ஹீரோ ஹீரோ தான் என. இது ஒரு காமெடிக்காகத்தான் சொன்னேன்.” என பேசி முடித்தவர் உடனடியாக மேடையை விட்டு இறங்கி சென்றுவிட்டார்.
பின்னர், படக்குழுவினர் அனைவரும் பேசி முடித்த பிறகு, பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர், “இந்தக் கேள்வியை ரோபோ ஷங்கர் மேடையில் இருக்கும்போதே கேட்டிருக்க வேண்டும். ஒரு சபை நாகரீகம் என்பது தெரியலனா, அது கேவலம். நடிக்க தெரியாததற்கே லாக்கி இல்லாத ஆட்களை மேடை ஏற்றாதீர்கள். மேடையில் ஒரே ஒரு பெண் தான் இருங்காங்க. நாளைக்கு இதே மேடையில் வேறு பெண்கள் மேடையேற வேண்டும். இந்த மாதிரி பேசுவதையெல்லாம் நான்கு சுவருக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்” என கடுமையாகப் பேசினார்.
இதற்கு ஜான் விஜய், படக்குழு சார்பாக மன்னிப்புக் கேட்டு கொண்டார்.
இதேபோல், மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அர்த்தம்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. நிகழ்வில் படத்தின் நாயகி ஷர்த்தா தாஸ் ஆங்கிலத்தில் பேசினார். அதை மொழிபெயர்க்க வந்த ரோபோ ஷங்கர், கிறிஸ்துவ மதபோதகர் மாதிரி பேசியதால் கடுப்பான பத்திரிகையாளர்கள், ‘எங்களுக்கு ஆங்கிலம் தெரியும். ரோபோ ஷங்கர் நீங்க உட்காருங்கள்’ என கடுமையாகப் பேசியதால், ரோபோ ஷங்கர் அமைதியாக சென்று உட்கார்ந்துவிட்டார்.
ரோபோ ஷங்கர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், அதை பத்திரிகையாளர்கள் கண்டிப்பதும் வடிக்கையாகிவிட்டது.