லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
லியோ படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் வெளியாகியுள்ளது. விஜய் பாடியுள்ள இப்பாடலில் அவருடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர். மேலும் இப்பாடலுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் ஆன்லைன் மூலமாக லியோ பட பாடலுக்கு எதிராக புகார் மனு அளித்துள்ளார். போதைப்பொருள் பழக்கம், ரௌடிசத்தை ஊக்குவிக்கும் வகையில் லியோ பட நா ரெடி பாடல் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.