சங்கர் ஜிவால் - ஏ.ஆர்.ரகுமான்
சங்கர் ஜிவால் - ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி: விசாரணை நடத்த டி.ஜி.பி. உத்தரவு!

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் காவல் ஆணையர் அமல் ராஜுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பனையூர் அருகேயுள்ள ஆதித்யா ராம் மைதானத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைக் காண சென்ற ரசிகர்கள் போதுமான ஏற்பாடுகள் செய்து தரவில்லை என்று சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டினர். அதன் பிறகுதான், நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்த ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமானும் தனது ட்விட்டர் பக்கத்தில், நிகழ்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், யாரையும் குற்றம் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், ”நானே பலிகடாவாக இருந்துவிட்டுப் போகிறேன்; பாதிக்கப்பட்ட ரசிகர்களுக்கு ஆச்சரியமளிப்பேன்.” என்றும் பதிவிட்டிருந்தார்.

எனினும், இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு வருமாறு, ஏசிடிசி ஈவண்ட்ஸ் ஏற்பாட்டாளர்கள் ஹேம்நாத், அவரது மனைவி யாழினி, பூங்கொடி ஆகியோருக்கு, சென்னையை அடுத்த கானாத்துர் காவல் ஆய்வாளர் சதீஸ் அழைப்பு ஆணை அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com