நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004ஆம் நடைபெற்ற அவர்களின் திருமண பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நடிகா் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வா்யாவை கடந்த 2004-இல் நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவா்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், ஐஸ்வா்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிவதாக, 2022இல் அறிவித்தனா்.
தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேரில் ஆஜராக மூன்று முறை உத்தரவிட்டும் இருவரும் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு, கடந்த நவம்பர் 21ஆம் தேதி நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி, தனித்தனியாக விசாரணை நடத்தினார். பின், இந்த விவகாரத்தில் சுயமாக சிந்தித்து, ஒரு முடிவை எடுக்கும் வகையில், உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீா்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என கேட்டார்.
அதற்கு இருவரும், எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை; பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்தனா். மேலும், நீதிமன்ற ஆவணங்கள், பதிவேட்டில் கையொப்பமிட்டனர். இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் நவம்பர் 27-இல் (நேற்று) உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தாா்.
அதன்படி இந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்வதாகவும் நீதிபதி நேற்று தீா்ப்பளித்தாா்.