
இயக்குநர் ஷங்கர் நடிகர் தனுஷிடம் வேள்பாரி நாயகனாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.
அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில், ராம் சரண் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது.
தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டு அதற்கான எழுத்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2026, ஜூன் மாதம் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், நாயகனாக நடிகர் சூர்யா நடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய திருப்பமாக இயக்குநர் ஷங்கர் இக்கதையை நடிகர் தனுஷிடம் சொன்னதாகவும் தனுஷ் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனுஷுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசையில் இருப்பதால் ஷங்கருடன் இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு இணையலாம் எனத் தெரிகிறது.