தீபாவளி பாக்ஸ் ஆபிஸ்… மூக்குடைபட்ட மூக்குத்தி அம்மன் !

தீபாவளி பாக்ஸ் ஆபிஸ்… மூக்குடைபட்ட மூக்குத்தி அம்மன் !
Published on: 

தீபாவளி ரிலீஸ்களில், படத்தின் பட்ஜெட்டில் பத்து சதவிகிதத்தைக்கூட வசூலிக்கமுடியாமல் திணறிவருகிறது நயன்தாரா, சுந்தர்.சி கூட்டணியின் மூக்குத்தி அம்மன். உடன் ரிலீஸான ராமாயணமும், சூர்யாவின் ’சீன்’ம் வசூல் ரீதியாக தீபாவளிக் கொண்டாட்டங்களாக மாறியுள்ளன.

வழக்கமாக தீபாவளிப் பண்டிகை தினங்களில் குறைந்தது அரைடஜன் படங்களாவது ரிலீஸ் ஆகும். இம்முறை வெளியானவை மூக்குத்தி அம்மன், இந்தி டப்பிங்கான ராமாயணம், சூர்யா, இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியின் ‘சீன்’ ஆகிய 3 படங்கள் மட்டுமே.

இம்மூன்று படங்களில் அதிக எதிர்பார்ப்புக்குரிய படமாக முதல் இடத்தில் இருந்தது மூக்குத்தி அம்மன். இப்படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது ஒருபுறமிருக்க,சுந்தர்.சி, நயன்தாரா, குஷ்பு கூட்டணியினர் செமையாக ஒரு படம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் எதிர்ப்புக்கு எதிராக படம் படுதோல்வி. சுமார் 85 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தீபாவளி தினத்தில் கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் முதல் மூன்று தினங்களில் சுமார் 4 கோடிவரைதான் வசூல் செய்துள்ளது.

இப்படத்தின் வசூலோடு ஒப்பிடுகையில் டப்பிங் படமான ராமாயணமே மேல். அதே மூன்று தினங்களில் இந்தியா முழுக்க சுமார் 300 கோடிவரை வசூல் செய்துள்ள ‘ராமாயணம்’ தமிழில் மட்டும் எட்டுகோடியை எட்டியுள்ளது.

மூன்றாவது படமான ‘சீன்’ சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றிப்படம். கருப்பு, விஸ்வநாதன் அன் சன்ஸ் வெற்றிகளைத் தொடர்ந்து சூர்யா இன்னொரு வெற்றியைத் தொட்டுள்ளார். இப்படத்துக்கு ஆஹா ஓஹோ பாராட்டுகள் கிடைக்காவிட்டாலும் வேறு சாய்ஸே இல்லாத நிலையில் முதல் மூன்று நாட்களில் 55 கோடி வசூலித்துள்ளது. கொஞ்சம் கைக்காசைப் போட்டு, இந்த வார இறுதியில் இப்படத்தையும் நிச்சயம் 100 கோடி கிளப்பில் சேர்த்து சீன் காட்டுவார்கள் பாருங்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram