எறும்பு திரைப்பம்
எறும்பு திரைப்பம்

எறும்பு: திரைவிமர்சனம்!

எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்படுத்தும் நெருக்கடியை, அதே எதிர்பாராத நிகழ்வுகள் தீர்த்து வைத்தால் அது தான் எறும்பு திரைப்படம்.

கூலி தொழிலாளியான சார்லிக்கு இரண்டு மனைவிகள். மூன்று பிள்ளைகள். முதல் மனைவி இறந்துவிட, இரண்டாவது மனைவி சூசன் ஜார்ஜ்ஜூடன் வாழ்ந்து வருகிறார். குத்தகைக்கு நிலம் பிடித்து விவசாயம் செய்யும் சார்லி கடனாளியாக, அவருக்கு பணம் கொடுத்த எம். எஸ். பாஸ்கர் நெருக்கடியைக் கொடுக்கிறார். இதனால், தனது மனைவியுடன் வெளியூருக்கு கரும்பு வெட்ட செல்கிறார் சார்லி. அந்த சமயத்தில் மூத்த மனைவியின் மகனான சக்தி, தனது தம்பியின் (சித்தி மகன் ரித்விக்) மோதிரத்தை அணிந்து கொள்கிறான். அது எதிர்பாராத விதமாக தொலைந்து விடுகிறது. சித்தி வந்து கேட்டால் என்ன செய்வது என்று திகைத்து நிற்கிறார்கள் சக்தியும் அவனுடைய அக்கா மோனிகாவும். தனது சித்தி வீட்டிற்கு வருவதற்குள் அவர்கள் மோதிரத்தை கண்டுபிடித்தார்களா? சார்லி கடனை திருப்பி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

அறிமுக இயக்குநர் சுரேஷ் ஜி இயக்கியுள்ள இத்திரைப்படம், ஒரு எளிய குடும்பத்தின் வாழ்க்கை போராட்டத்தையும், சிற்றன்னையின் கீழ் வாழ நேர்ந்த சிறுவர்களின் மன நெருக்கடியும் பேசுகிறது. வலிந்து திணிக்காத, மிக இயல்பான, அதே சமயம் யூகிக்க முடியாத காட்சிகள் படத்தின் பலம். முழுப்படமும் சீரான வேகத்தில் சென்றாலும், இறுதிக் காட்சி புல்லரிக்க வைக்கிறது.

வெள்ளந்தியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சார்லி, கிராமத்து மனிதராகவே வாழ்ந்துள்ளார். பணமின்றி அவரடையும் தவிப்பு, நம்மையும் தொந்தரவடைய செய்கிறது. சார்லி மனைவியாக நடித்திருக்கும் சூசன் ஜார்ஜ் பார்வையாலேயே கொன்றாலும், அவருக்கு கிராமத்து பெண் போன்று புடவை கட்டத்தான் வரவில்லை! சக்தி, மோனிகா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவர்களின் நடிப்பில் எங்கும் குறை காண முடியவில்லை. பேய் நடிப்பு!. ’இப்படியொரு கதாபாத்திரமா’ என்று வாய்பிளக்கும் அளவிற்கு உள்ளது சிட்டு கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன், கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். சிட்டு ஜார்ஜ்க்கு விருது கொடுக்கலாம்! கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் இந்தப் படத்தின் பலம்!

 படத்தின் இசை அருண் ராஜ். காட்சியின் உணர்வுகளுக்கு ஏற்ற இசையைக் கொடுத்துள்ளார். பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது. காட்டுமன்னார்கோவில் பகுதியின் பசுமை, கரும்பு தோட்டம், கிராமத்தின் தெருக்களை அழகாக காட்சிப் படுத்தியுள்ளார்.

‘தானம் கேட்டவனுக்கு மூக்கு மயிரைக் கொடுத்த மாதிரி இருக்கு’, ‘வெட்டுக்காச்சு போ, குத்துக்காச்சு போ’ என்பது போன்ற வசனங்கள் கதையின் போக்கிற்கு பலம் சேர்கிறது.

எறும்பு -கரும்பாக இனிக்கிறது!

logo
Andhimazhai
www.andhimazhai.com