ராஜீவ் மேனனுடன் ஷாஜி
ராஜீவ் மேனனுடன் ஷாஜி

என்னை மாட்டிவிட்டவர் ஏ.ஆர். ரஹ்மான்!

ராஜீவ் மேனன், இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களின் முன்வரிசையில் இருப்பவர். ஆயிரக் கணக்கான விளம்பரப்படங்களை எழுதி இயக்கியவர். திரைப்பட இயக்குநர், வனவிலங்கு புகைப்படக் கலைஞர், செவ்வியல் இசை ஆர்வலர், பாடகர், திரைக்கலை ஆசிரியர், திரைப்பட நடிகர் எனப் பல முகங்கள் கொண்டவர். அவருடன் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி சென் நிகழ்த்திய உரையாடலில் பகிரப்பட்ட விஷயங்களின் சுருக்கமான எழுத்து வடிவம் இதோ.

‘என்னோட அப்பா ஒரு கடற்படை அதிகாரி. அந்தச் சூழலில்தான் வளர்ந்தேன். இசைத்திறன் வாய்ந்த என் அம்மாவுக்கு ஒரு பாடகியாகவேண்டும் என்ற அளப்பரிய ஆசை. அவங்களுக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக் கிடைக்கணும் என்பதற்காக  சென்னைக்கு வேலை மாற்றம் வாங்கி வந்தார் அப்பா. ஆனால் வந்த இரண்டு மாதத்தில் ஹார்ட் அட்டாக்கில் இறந்துட்டார். அப்போது எனக்கு 15 வயது. அம்மாவுக்கு 37 வயது. என் அப்பாவும் அம்மாவும் ஒற்றைப் பிள்ளைகளாகப் பிறந்தவங்க. அதனால் எனக்கு அங்கிள்னு சொல்றதுக்கு யாரும் இல்லை. சின்ன வயதிலேயே தந்தையின் மரணம் என்னை ரொம்ப பாதித்தது. இந்த உலகில் எதுவுமே நிலையானது இல்லை என்கிற உணர்வு ஏற்பட்டது.

தமிழ்ப்படங்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா என்று ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்த காலகட்டம். அதைப் பார்த்து எனக்கும் திரைப்படக் கலைமீது ஆர்வம் ஏற்பட்டது. அப்போ வீட்டுக்குப் பக்கத்துல ஒரு புகைப்படக்காரர் இருந்தார். அவரிடம் இருந்த அரதப் பழைய கேமிராவில் கருப்பு வெள்ளைப் புகைப்படம் எடுத்துப் பார்த்தேன். அதிலேயே எனக்கு என் மேலேயே நம்பிக்கை வந்து விட்டது. உண்மையில் எனக்கு அப்போது ஒண்ணுமே தெரியாது. ஆனாலும் நான் எல்லாம் தெரியும்னு நினைச்சிகிட்டேன்.

 ராஜீவ் மேனன்
ராஜீவ் மேனன்ராஜீவ்மேனன் புரடக்‌ஷன்ஸ்

அடையாறு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படிக்க விண்ணப்பித்தேன். இடம் கிடைத்தது. அங்கே ஆபாவாணன், ஆர் வி உதயகுமார், ரமேஷ்குமார் போன்றவர்கள் என் சீனியர்கள். அர்ச்சனா, ரகுவரன், நாசர் எல்லாரும் எனது சக மாணவர்கள். முதல் ஆண்டு படிச்சப்போ ஏழாவது மனிதன் படத்தில் நடிக்க ரகுவரனை ஹரிஹரன் சார் தேர்வு செய்தார். நானும் போய் அந்த படத்துல உதவியாளரா வேலை செய்தேன்.

ஓர் ஆவணப்படத்துல வேலை பார்த்தபோது அதுல படம் எடுக்க ஒரு ஸ்டெடிகாம் கொண்டுவந்தாங்க. அக்காலத்தில் அது ஓர் அதிசயக் கருவி. ஆனால் அது ஒர்க் ஆகல. அதை வெச்சி ஷூட் பண்ணமுடியாதுன்னுட்டாங்க. நான் அதை மாட்டிகிட்டு சும்மா சில காட்சிகள் எடுத்தேன். அந்தக் காட்சிகளைப் பார்த்த அதன் உரிமையாளர் ரமேஷ் பிரசாத் ‘என்னோட ஸ்டெடிகாம் ஒர்க் ஆகலையே, எப்படி இதை எடுத்தார் என்று கேட்டார். அது நான்தான் செய்ததாக என்னப் பத்தி சொல்லிருக்காங்க. பின்னர் நான் ஸ்டெடிகாம் பத்தி விரிவா படிச்சி, மிகப்பெரிய கேமிரா கலைஞர் மார்கஸ் பார்ட்லே கிட்ட போய் ஆலோசனை கேட்டு, ஏன் இந்தியாவில் அது சரியா ஒர்க் ஆகலைன்னு விரிவா ரிப்போர்ட் எழுதிக் கொடுத்தேன்.

அமெரிக்காவில் ஸ்டெடிகாம் நிறுவனத்தின் நிர்வாகி ஒருத்தர் இந்தியாவில் மேலும் ஸ்டெடிகாம் விற்கணும்னு நினைச்சு ரமேஷ் பிரசாத் கிட்ட பேசி இருக்கார். அவரோ ஏற்கெனவே வாங்கின ஸ்டெடிகாமே ஓடலை. அது ஏன் ஓடலைன்னு ஒரு பையன் பத்து பக்கம் ரிபோர்ட் எழுதி இருக்கான்னு  சொல்லி இருக்கார்.

அந்த நிர்வாகி என்னைக் கூப்பிட்டுப் பேசினார். நீங்க சொல்லி இருக்கிற பிரச்னைகள் எல்லாம் ஸ்டெடிகாம் 3ல சரி பண்ணிட்டோம். நீங்க அமெரிக்காவுக்கு வந்து இந்த கருவியை உருவாக்கினவர்கிட்ட பயிற்சி எடுத்துக்க முடியுமான்னு கேட்டாங்க. நியூ யார்க் சென்றேன். நன்றாகப் பயின்று திரும்பி வந்து இங்கே ஓர் ஒளிப்பதிவாளராக வேலை செஞ்சேன். அப்போ சென்னையிலும் விளம்பரப் படப்பிடிப்புகள் தொடங்கின. அதில் என்னால் நுழையமுடிந்தது. சுமார் 30 ஆண்டுகள் அதில் பயணம் செய்தேன்,' ராஜீவ் மேனன் விளம்பரத் துறையில் தீவிரமாக இயங்குபவர். திரிஷா, தீபிகா படுகோன் போன்றவர்கள் பிரபலம் ஆவதற்கு முன்பே இயக்கியவர் இவர். ஆர். ரகுமானை இசையமைப்பாளர் ஆக்கியதிலும் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

ராஜீவ்மேனன்

‘எனக்கு ஒரு ப்ளேட் உடையற சத்தம் தேவைப்பட்டது. அப்ப இளையராஜாவுடன் பிரசாத் ஸ்டூடியோவில் ரஹ்மான் இசைக்கலைஞரா வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கம்ப்யூட்டர்ல அந்த ஒலியை உருவாக்கித் தந்தார். பின்னர் நான் வெறும் சத்தங்கள் மட்டும் இல்லை; இசையும் பண்ணுவேன் என்று என்னிடம் சொன்னார். கேசட் ஒண்ணை ஹெட்போன் போட்டு கேளுங்கன்னு கொடுத்தார். மிக வித்தியாசமா இருந்துச்சு. இதற்கு அடுத்து எனக்கு தொழில்துறை டாகுமெண்டரி ஒண்ணு வந்துச்சு. அதுக்கு இசையமைக்க முடியுமா என்று கேட்டேன். தாராளமா பண்றேன் என்றார். இரவு ஒன்பது மணிக்கு மேல் வரச் சொன்னார். அது வரை அவர் திரைப்படங்களுக்கான வேலைகளில் இருப்பார். இரவு 2 மணி வரை வேலை செய்வோம். அதன் பிறகு நிறைய விளம்பரங்கள் அவருடன் செய்தேன்.

 கிரிஷ் கர்னாட், ஷ்யாம் பெனகல் போன்றவர்கள் சென்னைக்கு வரும்போது இங்கே படம் எடுக்க கேமிரா மேனாக என்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஷயாம் பெனகலுக்காக எடுத்த சில காட்சிகளைக் காண்பித்துதான் எனக்கு மும்பைல ஆசியன் பெயிண்ட்ஸ் விளம்பர வாய்ப்பு கிடைத்தது.

கிரிஷ் கர்னாடுக்கு என்னுடைய பணி புரியும் விதம் பிடித்து என்னை அவருடைய ஒரு திரைப்படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிய அழைத்தார். கர்நாடகாவில் ஓரிடத்தில் படப்பிடிப்புக்கு இடம் எல்லாம் பார்த்து தயார் ஆனோம். அதன் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான ஷங்கர் நாக், கார் ஓட்டிட்டு அங்கே வரும்போது விபத்து ஏற்பட்டு இறந்துட்டார். அந்தப் படம் தொடங்காமலே கைவிடப்பட்டது. அதற்கு அடுத்து நான் வேலை பார்த்த இரண்டு படங்களும் ஆரம்பித்து அப்படியே கைவிடப்பட்டன. நான் ஒரு ராசி இல்லாத ஒளிப்பதிவாளர் என்றுசொல்ல ஆரம்பித்தனர் திரைப்படத் துறையினர்.

பிரதாப் போத்தனுக்கு பி சி ஸ்ரீராம் ஒரு தெலுங்குப் படம் பண்ண வேண்டியது. ஏதோ காரணத்தால் அவரால் பண்ண முடியல. அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்தார் பி சி ஸ்ரீராம். நான் பண்ணின முதல் படமா அது அமைந்தது. ஆனால் படம் வெளியாகி நல்லா போகல.அக்னிபுத்திரன் என்று ஒரு  படம்  வேலை ஆரம்பித்தேன். அதுவும் கைவிடப்பட்டது. என் மேல ராசி இல்லாதவன் என்ற முத்திரை பலமாகக் குத்தப்பட்டது. ஆனால் அந்த சமயம் என்னை நடிக்க பலர் கூப்பிட்டாங்க. நான் முடியவே முடியாது. என் மேல இருக்கிற ராசி இல்லாத ஒளிப்பதிவாளர் என்ற முத்திரையை உடைக்கணும்னு தீவிரமா இருந்தேன்.

மணி ரத்னம் ஒரு படத்துக்கு ஊட்டில படப்பிடிப்பில் இருந்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. என்னை அவருக்கு ஒரு முன்னேறிக்கொண்டிருக்கும் சினிமா கேமிரா மேனாகத் தெரியும். அத்தோட என்னுடைய விளம்பரத்துறை வேலைகளைத் தெரிஞ்சு வெச்சிருந்தார். மட்டுமல்லாது ரோஜால அரவிந்த் சாமி நடித்த வேடத்துக்கு என்னைக் கூப்பிட்டிருந்தார். நடிக்க மாட்டேன் என்று நான் மறுத்துட்டேன்.

பிறகு அவரது பம்பாய் படத்தில் ஒளிப்பதிவு செய்தேன். அந்த படம் நல்லா போனது. எனக்கும் பெரிய பெயர் கிடைத்தது. தேவையில்லாத விளக்குகளைத் தவிர்த்து, இயற்கையான வெளிச்சத்தைப் பயன்படுத்தணும் என்கிற அணுகுமுறையுடன் நான் செய்த படம் அது.

 ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தாருடன் எனக்குப் பழக்கம் உண்டு. அவங்க இளைஞர்களைக்கவரும் விதத்தில் ஒரு படம் எடுக்க விரும்பினாங்க. அது அவர்களின் ஐம்பதாவது ஆண்டு. பிரபுதேவாவை ஒப்பந்தம் பண்ணி இருந்தாங்க. இசைக்கு எ ஆர் ரஹ்மான் கிட்ட அணுகினாங்க. அவர் ஷங்கர் மணிரத்னம் போன்ற இயக்குநர்களை வெச்சுப் பண்ணலாமேன்னு சொன்னார். ஆனா அவங்கல்லாம் வேற வேலைகளில் இருக்கிறாங்கன்னு ஏவிஎம்ல சொல்ல, ‘அப்போ ஏன்  நீங்க ராஜீவை வெச்சு இந்தப் படம் பண்ணக்கூடாது?' ன்னு என்னை மாட்டி விட்டதே ரஹ்மான் தான். அப்படித்தான் நான் மின்சார கனவு படம் இயக்கினேன்.

ஸ்கிரிப்ட் இருக்கான்னு ஏவிஎம் சரவணன் சார் என்கிட்டே கேட்டாங்க. ஒரு திரைக்கதை கொடுத்தேன். அது கிறித்துவ கன்னியாஸ்திரி ஒருத்தங்க காதலில் விழுந்து கல்யாணம் பண்ணிக்கிற கதை.

ராஜீவ்மேனன் புரடக்‌ஷன்ஸ்

அதைச்  சொன்னவுடன் சாந்தோம் ஆர்ச் பிஷப் கிட்ட அனுமதி வாங்கிடுங்கன்னு தயாரிப்பாளர் சொல்லிட்டாங்க. கதையைக் கேட்டதும் இதுல கிறித்துவத்துக்கு எதிரா எதுவும் இல்லைன்னு சொன்னாங்க. படப்பிடிப்பின்போது சில காட்சி அமைப்புகளுக்கு உதவியும் செய்தாங்க. இந்த படத்துக்காக ஐஸ்வர்யா ராய்கிட்ட பேசினேன். அப்போதான் இருவர் படத்துக்கு மணிரத்னம் கூப்டிருக்கிறதா சொன்னார். அந்த வாய்ப்பை விட்ராதீங்கன்னு சொன்னேன். பிறகுதான் கஜோல் அந்த வேடத்துக்கு வந்தார்.

அடுத்ததா பண்ணின படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இதில் ஐஸ்வர்யா ராய் வேடத்துக்கு முதலில் போய் கேட்டது மஞ்சு வாரியர் கிட்ட. அவங்க பதில் சொல்லல. அப்புற  சௌந்தர்யா... அதன் பிறகுதான் ஐஸ்வர்யா ராய் கிட்ட சொன்னேன். அவங்க கதை கேட்டு அழுதுட்டாங்க. அஜீத் அப்போது ஒரு விபத்துல மருத்துவமனையில் இருந்தார். அங்கே போய் பேசிதான் ஒப்பந்தம் பண்ணினோம். பின்னர் மம்மூட்டி வந்தார். அந்த படத்துல நடிச்ச எல்லாரும் பெரிய நடிகர்கள். அது அமையறதுக்கு ஒரு பெரிய லக் வேணும். அப்படத்தில் அது இருந்தது.

இதன் பின்னால் பல திரைக்கதைகள் எழுதினேன். ஆனால் என்னவோ எதுவும் தொடங்கப்படல. அடுத்தபடம் எடுக்க 19 ஆண்டுகள் ஆயிடுச்சு. இப்போ விடுதலை படத்துல வெற்றிமாறன் கேட்டதால் நடிக்க ஒப்புகிட்டேன். அந்த பாத்திரம் பிடித்திருந்தது. எனக்குப் பிடிச்சமாதிரி பாத்திரங்கள் கிடைச்சா செய்வேன்.'ராஜீவ் தன்னுடைய நீண்ட கலைப்பயணத்தில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். ஏழு திரைப்படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனால் இந்த மிகக்குறைவான அளவு பணிகளிலேயே அவர் மிகவும் புகழ் பெற்றதுடன் நாட்டின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர் என அறியப்படுகிறார். இது பற்றிப் பேசியபோது புன்னகைக்கிறார். ‘கொஞ்சம் தான் பண்ணி இருக்கிறேன். ஆனால் பின்னாளில் நினைத்து வருத்தப்படும்படியான எந்த படைப்பையும் உருவாக்கி விடவில்லை என்பதே பெரும் நிம்மதி' எனச் சொல்கிறார்.

வெற்றி என்பது ஒரு காற்றைப் போல. அதை நாம் கட்டுப்படுத்துவது இல்லை. எந்த திசையிலிருந்தும் வரலாம் என்கிற ராஜீவ் மேனன் கடவுளும் நானும் என்ற தனியிசைப்பாடலையும் பாடி உருவாக்கி இருக்கிறார். அவரது தாயாரும் பாடகியுமான கல்யாணி மேனன், இந்தப் பாட்டைக் கேட்டு இன்னும் உன் குரல் இளமையாக இருக்கிறதே என்று சொன்னதை நினைவுகூர்கிறார். தாய் இறந்தபோது அந்த வருத்தத்தில் தன் தாய்க்காக ஒரு பாடலை இசையமைத்துப் பாடி வெளியிட்டார்.

 கருவின் காரிருள்

உருளும் ஓர் பொருள்

உனக்குள் நான் எனத் தோன்றியதும்

வெளியில் நான் விழ

ஒளியில் நான் அழ

எனை நீ மார்பினில் ஏந்தியதும்

எனத் தொடரும் அந்தப் பாடலை உணர்ச்சிகரமாகப் பாடினார். நன்றி சொல்லி விடைபெற்றோம்.

(படங்கள் உதவி: ராஜீவ்மேனன் புரடக்‌ஷன்ஸ்)

இயக்குநர் ராஜீவ் மேனன் - உடன் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜியின் உரையாடல் காணொலி:

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com