ஹரீஷ்பேரடி
ஹரீஷ்பேரடி

நடிகன் மொழி நடிப்புதான்!

நாடக அனுபவம் திரைப்பயணத்தை வளமாக்கும்!

ஆண்டவன் கட்டளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹரீஷ்பேரடி முறையான நடிப்புப் பயிற்சி பெற்றவர். மேடை நாடகம், நவீன நாடகம், சீரியல், சினிமா என தன் நடிப்புப் பயணத்தை அமைத்துக் கொண்ட ஹரீஷ்பேரடியுடன் எழுத்தாளர் ஷாஜி  சென் அந்திமழைக்காக நடத்திய நேர்காணலில் இருந்து சிலபகுதிகள்.

“இந்த பயணம் தொடங்கியபோதே ஒரு நோக்கம் இருந்தது. இப்போது நடப்பது முன்னரே கனவு கண்டதுதான். அது நனவானதில் மகிழ்ச்சிதான்,' என்று சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கும் ஹரீஸ்பேரடி மலையாள, தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப் படும் நடிகர். தன் நடிப்பு பயணத்தை ஆரம்பத்திலிருந்து சொல்லத்தொடங்கினார்.

“ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது நாடகம் நடிக்கத் தொடங்கினேன். அதற்கு காரணம் என்னுடைய நண்பன் தாஜுதீன் தான். அவர் நாடகத்தின் ஸ்கிரிப்ட்ரைட்டர். ஜýன் மாதம் பள்ளி தொடங்கும்போதே, செப்டம்பர் மாத இளைஞர் விழாவில் நாடகம் அரங்கேற்றுவதற்கு ஒத்திகை பார்க்கத்தொடங்கிவிடுவோம்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் நிறைய நாடகங்களில் நடித்தேன். ஜெயபிரகாஷ் குளூருவைப் பார்த்த பிறகுதான், நாடகம் பற்றிய பார்வை மாறியது. அவர்தான் என்னுடைய குரு. அவர் வீட்டில் தங்கித்தான் நாடகம் படித்தேன். நடிப்பு மட்டுமல்ல; வாழ்க்கைப்பாடத்தையும் அங்குதான் கற்றுக்கொண்டேன் ஜெயபிரகாஷ் குளூரின் ‘அப்புண்ணிகளோட ரேடியோ', ‘அப்புண்ணிகளோட நாளை' ,இரண்டு நாடகமும் மூவாயிரத்து ஐந்நூறு மேடைகளில் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகத்தில் லைட், மியூசிக், செட் என எதுவும் இல்லை. நடிப்பை மட்டுமே பிரதானப்படுத்தும் நாடகம். ஒரு வருடம் ஒத்திகை பார்த்தோம். இரண்டே பேர் நடிக்கும் நாடகம்.

மற்றொரு வித்தியாசமான நாடகம் ‘சதானந்தம்'. அதில் பள்ளி ஆசிரியராக நடித்தேன். அந்த நாடகத்தில் பார்வையாளர்களும் நடிகர்கள்தான். அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால்தான் நாடகம் தொடங்குவோம்.  அவங்களை எழுந்து நிற்கச் சொன்னால் நிற்கணும். அட்டெண்டன்ஸ் கூப்பிட்டா எஸ் சார் சொல்லணும்.

அந்த நாடகத்தில் ஒரு காட்சி. மகாத்மா காந்தி இறந்ததுக்கு இரண்டு நிமிடம் பார்வையாளர்களை அமைதியாக இருக்க சொல்லுவோம். ஆனால், அது இருபது நிமிடங்கள் மாதிரி தோணும். அனைவரையும் உட்காரச் சொல்லிட்டு ' இப்ப அமைதியாக இருந்தப்ப உங்க மனசுல என்ன தோணுச்சு...சொல்லுங்க'  என கேட்பேன். அமைதியாக இருப்பாங்க. ‘அச்சச்சோ.. இது எப்பதான் முடியுமோ' என்று அவர்கள் நினைத்துக் கொண்டு தவிப்பார்கள். 

‘சொல்லுங்க' எல்லாம் அமைதியாக  இருப்பாங்க. அப்ப, ‘எதுவும் சொல்லவேணாம்.

நீங்க என்ன யோசிச்சீங்களோ, அதான் நீங்க... அதை தாண்டி  நீங்க ஒண்ணுமே இல்லை..' என்று சொல்வேன்.

மேடை நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, கலாபவன் மணி நாயகனாக நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்தேன். அந்த படம் வெளியாக தாமதமானதால் சீரியலுக்கு நடிக்க வந்தேன்.

‘காயங்குளம் கொச்சுண்ணி' என்ற சீரியலில்  ஒரே ஒரு எபிசோட்டில் நடிக்க கூப்பிட்டார்கள். நூறு எபி சோடுகளைத் தாண்டி போய்க்கொண்டிருந்த சீரியல் அது.  காக்க சங்கரன் என்பதுதான் என்  பாத்திரத்தின் பெயர். படப்பிடிப்பு தளத்தில் என் நடிப்பை வேடிக்கை பார்த்தவர்கள் கை தட்டினார்கள். ஆனால் காமிராமேனுக்கு குழப்பம். திரைக்கதை ஆசிரியர் என்கிட்ட வந்து ‘சேட்டா நல்லா நடிக்கிறீங்க... ஆனால் நடிப்பில் கொஞ்சம் ட்ராமா வரணும்' என்றார். நான் ஒரு எபிசோட் நடிக்கத்தானே போயிருந்தேன், அதனால் கவலையே படாமல், ‘கதையை கொஞ்சம் மாத்தி எழுதிக்கொடுங்க' என்றேன். அவருக்குப் பிடிக்கவில்லை. ‘கோபப்படாதீங்க...

நீங்க எழுதியிருப்பதை இப்படித்தான் நடிக்கமுடியும். மாத்தினால்தான் வேறமாதிரி நடிக்கமுடியும்' என்றேன்.  அப்ப இயக்குநர் வந்தார். ‘இல்ல நீங்க நடிச்சது ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அப்படியே இருக்கட்டும்.. பார்ப்போம்' என்றார். அந்த எபிசோட் வெளியானதும் என் நடிப்புக்கு பயங்கர வரவேற்பு கிடைத்தது.

பின்னர் ‘குருவாயூரப்பன்' என்ற சீரியலில் நடித்தேன். அதனுடைய தயாரிப்பாளர்தான் ராஜபுத்திரா ரஞ்சித். அவர் அப்போது மோகன் லாலை வைத்து ‘ரெட் சில்லி' என்ற படம் எடுத்தார். அதில் என்னை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்துக்குப் பிறகு, நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அப்படி அமையவில்லை. பின்னர் 2011ஆம் ஆண்டு மீண்டும் ராஜபுத்திரா ரஞ்சித் தயாரிப்பில் ‘லெப்ட் ரைட் லெப்ட்' படத்தில் நடித்தேன். அதன் பிறகு தான் வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்த படம் பார்த்துவிட்டு இயக்குநர் மணிகண்டன்  ‘ஆண்டவன் கட்டளை' தமிழ்ப் படத்தில் நடிக்க அழைத்தார்.

தமிழில் நடிக்க வந்தபோது மொழி பெரிய தடையாக இல்லை. நடிகனுக்கான மொழி நடிப்புதான். ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்ததுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் விக்ரம்வேதா.

சேட்டா கதாபாத்திரம் செம ஹிட்! அதன் பிறகு ‘மெர்சல்', ‘ஆண் தேவதை' என சென்றது.

கொரோனா ஊரடங்கின் தொடக்கத்தில் கொஞ்சம் புத்தகம் படித்தேன். அது அலுத்துவிடவே, பிறகு சினிமா பார்க்க தொடங்கினேன். அதுவும் அலுத்துவிட்டது. அந்த சமயத்தில் நாடக நடிகர்கள் கஷ்டத்தில் இருப்பதைக் கேள்விப்பட்டு நானும் மகனும் சேர்ந்து நாடகம் ஒன்று நடித்தோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு நடிப்பு குறித்த அனுபவம் வேண்டும். நாடகம் என்றால், ஒருவனை நடிகனாக உருவாக்க நேரம் இருக்கும். சினிமாவில் அதற்கு வாய்ப்பு இல்லை. குறுகிய நேரத்தில் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும். அனுபவம் இல்லையென்றால் சினிமாவில் ஒன்றுமே செய்ய முடியாது. நிறைய நாடகங்கள் நடித்து சினிமாவுக்கு வந்தால்தான் படத்தின் கதையை சீக்கிரமாகப் புரிந்து கொள்ளலாம்,' என்றவரிடம் அவரின் குடும்பப் பின்னணி பற்றி கேட்டோம்.

‘என்னுடைய அப்பா வங்கி ஊழியர். சுதந்திரப் போராட்ட வீரர்.  எனக்கு 25 வயது இருக்கும்போது இறந்துவிட்டார். நான் நாடகம் பண்ணுவது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவர்தான் என் நாடகத்தைப் பார்க்க முதலில் வருவார். மற்றவர்களிடம் எல்லாம் என் நாடகத்தைப்பற்றி பெருமையாகப் பேசுவார். ஆனால், அதை என்னிடம் சொல்லமாட்டார்.

என் திருமணம் காதல் திருமணம். நாடகம் இல்லாத நேரத்தில் ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றில் வேலை பார்த்தேன். மாதம் எழுநூறு ரூபாய்தான் சம்பளம் என்றாலும் நூறு ரூபாய் டிப்ஸ் கிடைக்கும். இருந்தாலும், நான் பார்த்த வேலை என் உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை. பின்னர் குடோன் மேனேஜர் வேலைக்கு சென்றேன். அந்த சமயத்தில் அவசரமாகத் திருமணம் செய்யவேண்டியிருந்தது. என்னுடைய திருமணத்துக்காக நண்பர் ஒருவரிடம் நூறு ரூபாய்க் கடன் வாங்கித்தான் திருமணத்தைப் பதிவு செய்தேன். எங்களைப் பார்க்க வந்த நண்பர்களும்உறவினர்களும் ஆளுக்கும் கொஞ்சம் என பணம் கொடுத்தார்கள். அதன் மூலம் ஆயிரம் ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை வைத்துத்தான் என் திருமண வாழ்க்கையைத்தொடங்கினேன். என் மனைவியும் ஒரு நடன கலைஞர்,' என்றவர்.  தனக்கு பிடித்த மலையாள நடிகர் சங்கராடி என்றும் சிவாஜியின் நடிப்பை தன் குரு ஜெயபிரகாஷ் குளூரிடம் ஒரு பாடமாகவே படித்தேன் என்றபடி மலர்ந்த முகத்துடன் நேர்காணலை நிறைவு செய்தார் ஹரீஷ் பேரடி.

 நடிகரும் எழுத்தாளருமான ஷாஜி சென், ஹரீஷ் பேரடியுடன் நிகழ்த்திய இந்த உரையாடலை ANDHIMAZHAI TV யூட்யூப் சானலில் காணொலி வடிவில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com