ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்
ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன்எஸ்.சரவணன்

பாலா, ஆர்யா, நான் - உயிர் தப்ப ஓடினோம்!

"ஒரு படத்தில் கதையைத் தாண்டி இரண்டு ஷாட்கள் எக்ஸ்ட்ரா இருந்தால் கூட அது அப்படத்துக்கு இழைக்கப்படும் அநீதி. கதையைத் தாண்டி பார்வையாளர்களுக்கு ஒளிப்பதிவாளர் தென்படவே கூடாது'' என்று சொற்களுக்கு வலிக்காமல் மெல்லப் பேசுகிறார் ஆர்தர் வில்சன். தமிழ் சினிமாவின் வின்டேஜ் ஒளிப்பதிவாளர்.

  ‘96 ல் சுந்தர புருஷன் தொடங்கி ‘சொல்லாமலே’, ‘வானத்தைப் போல’, ‘ஆனந்தம்’ சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘இரவின் நிழல்’. ‘என் சுவாசக்காற்றே’, ‘நான் கடவுள்’களின் வழியாக லேட்டஸ்ட் ஹிட்டான ‘கருடன்’ வரை 28 வருடங்களில் 35 சிக்ஸர்கள் அடித்தவர் ஆர்தர். அவருடன் அந்திமழைக்காக ஒரு பிரத்யேக சந்திப்பு.

“சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி என்கிற சிறிய கிராமம் என்னுடையது. என் குடும்பம் மட்டுமல்ல, உற்றார் உறவினர்கள் அத்தனை பேருமே ஆசிரியர்கள். ஆகவே நானும் நன்கு படித்து ஆசிரியர் பணிக்கு செல்லவேண்டும் என்பதே என் பெற்றோரின் விருப்பம். அப்போதைக்கு சினிமா பற்றிய கனவு துளிகூட இல்லாததால் நானும் மனதளவில் ஆசிரியர் பணிக்குச் செல்லத் தயாராகவே இருந்தேன்.

இந்த சமயத்தில் என் மனதில் பதிந்த ஒரு சித்திரம்தான் என் வாழ்க்கையை மாற்றியது என்று சொல்லவேண்டும். எங்கள் ஊர் மத்தியில் ஒரு டீக்கடை உண்டு. அந்தக் கடையை கடக்கும்போதெல்லாம் ஒரு சிறிய கூட்டம் நாளெல்லாம் ஒரு வேலையும் செய்யாமல் அரட்டை அடித்துக்கொண்டே இருந்தார்கள். அக்கூட்டத்தில் ஒரு சில ஆசிரியர்களையும் பார்க்க நேர்ந்தது. அவர்கள் டீக்கடையுடன் சேர்த்து அசைவற்ற சித்திரமாய் என் மனதில் பதிந்து போனார்கள். வாழ்வில் இவர்களைப்போல் ஒரே ஒருநாள் கூட இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். ஆசிரியராகும் எண்ணத்துக்கு எண்டு கார்டு விழுந்தது அங்கேதான்.

அடுத்து?

என் அக்கா கணவர் சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சியில் சேர்ந்திருந்தார். அவரிடம் பேசி, அவரது முயற்சியில் அதே கல்லூரியில் சினிமாடோகிராபி கோர்ஸுக்கு விண்ணப்பித்தேன். சர்ப்ரைஸாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உண்மையைச் சொல்வதானால் அக்கல்லூரியில் சேருவதற்கு முன்பு நான் ஒரு ஸ்டில் கூட எடுத்ததில்லை. ஒளிப்பதிவு குறித்து ஆனா ஆவன்னா கூட தெரியாது.

இன்ஸ்டிடியூட் படிப்பு முடித்து உதவி ஒளிப்பதிவாளராக சுமார் 8 வருடங்கள் பணியாற்றினேன். அப்படி பணியாற்றிய படங்களில் பார்த்திபன் சாரின் ‘சரிகமபதநி’ ‘புள்ளகுட்டிக்காரன்’ ‘உள்ளே வெளியே’ முக்கியமானவை. அதே நேரம் ‘இதயம்’ படத்தை இயக்கிக்கொண்டிருந்த இயக்குநர் கதிருடன் அப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். ஆனால் உதவி இயக்குநர் பணி ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. மூன்றே மாதங்களில் அப்படத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

ஆனால் கதிர் சாருடனான நட்பு மிக நெருக்கமாகத் தொடர்ந்தது. அவருடன் சேர்ந்து உண்டு உறங்கி, கதை விவாதங்களில் ஈடுபட்டு என்று 24 மணி நேரமும் அவருடன் சுற்றினேன்.

இதயம் படத்துக்குப்பின்னர் மெகா பட்ஜெட்டில் அடுத்து ‘காதல் தேசம்’ படத்தை இயக்குவதாக இருந்தவர் அப்படத்துக்கு என்னைத்தான் ஒளிப்பதிவாளராக நியமித்திருந்தார். திரையுலகம் முழுக்க பரபரப்பான செய்தியாக அது பரவியிருந்தது.

படம் துவங்குவதற்கு சில தினங்கள் முன்னதாக என்னைத் தூக்கிவிட்டு கே.வி ஆனந்தை ஒளிப்பதிவாளராக நியமித்திருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிர்வாகி மூலமாக தெரிய வந்தது. இயக்குநர் கதிர் கூட முறைப்படி அதை என்னிடம் சொல்லவில்லை என்பதால் மிகவும் நொந்துபோனேன். ஆசிரியர் பணி வேண்டாம் என்று சொல்லிவிட்டு சினிமாவுக்கு ஓடி வந்ததால் அதுநாள் வரை என்னிடம் பேசாமல் இருந்த அப்பாவின் ஞாபகம் வந்துபோனது.

ஆனால் நான் கொஞ்சமும் மனம் தளரவில்லை. சினிமாவில் நிச்சயம் சாதிப்பேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு எப்போதும் இருந்தது. அடுத்த சில தினங்களில் நண்பன் எஸ்.டி சபாவிடமிருந்து ‘சுந்தர புருஷன்’ படத்துக்கு அழைப்பு. உண்மையைச் சொல்லவேண்டுமானால் காதல் தேசத்தைவிட சுந்தர புருஷன் அமைந்ததே நல்லது என்று நினைத்தேன். காதல் தேசத்தில் நான் நினைத்த ஒளிப்பதிவு வசப்பட்டிருக்காது. ஆனால் சுந்தர புருஷன் நான் மிக மிக சுதந்திரமாக பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு.

ஆனால் அங்கேயும் ஒரு சிக்கல் இருந்தது. அப்படத்தின் தயாரிப்பாளர் சவுத்ரி சாரைப் பற்றி, அவரது சிக்கனத் தயாரிப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். படத்தை முடிக்க எங்களுக்கு 60 நாட்களே அவகாசம் கொடுத்த அவர், ‘எக்ஸ்ட்ரா செலவானா நீங்கதான் கைக்காசைப் போட்டு படத்தை முடிக்கணும்’ என ஸ்ட்ரிக்டாக சொல்லியிருந்தார்.

ஆனால் ஒரு அசட்டு நம்பிக்கையில் நாங்கள் முதல் பாடலை மட்டுமே 12 நாட்கள் ஷூட் பண்ணினோம். எடிட் செய்து அந்தப் பாடலை அவருக்குப் போட்டுக் காட்டியபோது ஒரு புன்னகையுடன் ‘இஷ்டத்துக்கு ஷூட் பண்ணிக்கங்க’ என்று பட்ஜெட் விலக்கு அளித்தார். வெற்றியின் வாசனையை நுகர்ந்த முதல் நாளது.

படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி. அடுத்து அதே சபாவுடன் ‘வி.ஐ.பி’ இயக்குநர் சசியுடன் ‘சொல்லாமலே’ விஜயகாந்துடன் ‘வானத்தைப்போல’ என்று நாலுகால் பாய்ச்சலில் என் பயணம் துவங்கியது அப்படித்தான்.

இந்தப் பயணத்தில் லிங்குசாமியுடன் ‘ஆனந்தம்’ செய்தது, பாலாவுடன் ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’, அஜித்துடன் ‘பூவெல்லாம் உன் வாசம்’ விஜய்யுடன் ‘ஷாஜஹான்’ பார்த்திபனுடன் ‘இரவின் நிழல்’ வடிவேலுவின் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, கமலுடன் ‘பஞ்ச தந்திரம்’ பம்மல்.கே.சம்பந்தம்’ , ‘அன்பே சிவம்’ என்று அடுத்தடுத்து மூன்று படங்கள் செய்தது என்பது எனக்குப் பெருமையான தருணங்கள்.

இவை போக ‘என் சுவாசக் காற்றே’ நான் மிகவும் ரசித்து செய்த படம். ஆனால் நீளம் காரணமாக படம் சரியாகப் போகவில்லை. அடுத்த சில நாட்களில் ஏ.ஆர். ரஹ்மானைச் சந்தித்தபோது, ‘நாம எவ்வளவு நல்லா பண்ணினாலும் அது ஹிட் ஆனாதான நமக்குப் பேரு?’ என்று அவர் ஆதங்கப்பட்டது மறக்க முடியாதது. அதேபோல் இளையராஜா சாரின் பாடல்களைப் படமாக்குவது நமக்கு பெரும் சவால். ‘நான் கடவுள் பின்னணி இசைக் கோர்ப்பு நடந்தபோது, ‘எதுக்கெடுத்தாலும் என்னைத் திட்டிக்கிட்டெ இருப்பாரு. அதனால நீங்க போங்க வில்சன்’ என்று பாலா என்னை அனுப்பி வைத்தார். அப்படத்தின் பல காட்சிகளை ராஜா சார் பாராட்டியபோது நெகிழ்ந்துதான் போனேன்.

பாலா குறித்து பலரும் விதவிதமாக விமர்சிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவரைப்போல் ஒரு அர்ப்பணிப்பான இயக்குநரைக் காண்பது அரிது. ரிஸ்க் எடுப்பதில் அவருக்கு இணை யாரும் இல்லை.

நான் கடவுள் துவங்கிய சமயம். அலகாபாத்தில் ஒரு முக்கியமான கும்பமேளா நடக்கவிருக்கிறது. அங்கே போனால் ஒரிஜினல் அகோரிகளைப் படம் பிடிக்கலாம் என்று கேள்விப்பட்டவர் சிறிய அளவில் படப்பிடிப்பு குழுவினரை அழைத்துப்போனார். உள்ளூர் சாமியார் ஒருவரை கன்வின்ஸ் செய்து ஒரிஜினல் அகோரிகளுக்கு மத்தியில் உடம்பு முழுக்க சாம்பலைப் பூசிக்கொண்டு ஆர்யாவையும் கூட்டத்தில் நடக்கவிட்டுப் படம் பிடித்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களில் ஆர்யா வேற்று மதத்துக்காரர் என்பது அந்த அகோரிகளுக்குத் தெரிந்துவிட்டது. உடனே பெரும் களேபரமாகி மைக்கில் அறிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். எங்களுக்கு உதவிய உள்ளூர் சாமியாருக்கு ரத்தக்காயங்கள் வருமளவுக்கு அடி உதை. சுதாரித்துக்கொண்ட ஆர்யாவும் நாங்களும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டோம். அன்று நாங்கள் சிக்கியிருந்தால் கொலைகள்கூட நடந்திருக்கலாம். அந்த அகோரிகள் கொலை செய்தால் அது குற்றக் கணக்கிலே கூட வராது என்று பின்னர் தெரிந்துகொண்டபோது உடல் சிலிர்த்தது.

நடுவில் சில ஆண்டுகள் வனவாசம் போல் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே பணியாற்ற நேர்ந்தது குறித்து நண்பர்கள் விசாரித்ததுண்டு. அப்படி என்னை ஆந்திரா பக்கம் கொண்டுபோன படம் ‘வானத்தைப்போல’. அப்படத்தை கொண்டாடித்தீர்த்த ஆந்திரத் திரையுலகம் என்னை ஒரு கட்டத்தில் அள்ளி அணைத்துக்கொண்டது. பாலகிருஷ்ணாவின் ‘சிம்ஹா’ என்கிற ஒரே ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்யப்போய் அங்கே தொடர்ந்து பத்துப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். கொஞ்சம் தெலுங்கு கற்றுக்கொண்டேன். நிறைய சம்பாதிக்கவும் செய்தேன்.

திரைத்துறையில் பத்தாண்டுகளைக் கடந்தபிறகு நான் எப்போதும் எதிர்கொள்கிற ஒரு கேள்வி... எப்ப  படம் இயக்கப் போறீங்க? என்பது. அதிக ஒளிப்பதிவாளர்களை இயக்குநர்களாகக் கண்ட, தமிழ் சினிமாவில் இது தவிர்க்க முடியாத கேள்விதான்.

ஆனால் மிக ஆச்சரியமாய் இப்போது வரை எனக்கு படம் இயக்கவேண்டும் என்கிற எண்ணமே எழுந்ததில்லை. அதற்கு முழு முதற்காரணம் நான் பணியாற்றிய இயக்குநர்கள்தான் என்று நினைக்கிறேன். எல்லோருடனும் என் விருப்பத்தை எங்கும் விட்டுக்கொடுக்காமல் மனநிறைவுடனேயே பணியாற்றியிருக்கிறேன் என்பதால் தனியாக படம் இயக்கும் எண்ணம் வரவில்லை என்றே நினைக்கிறேன்.

மனநிறைவு என்பது எந்த அளவுக்கு என்றால் நான் பணியாற்றிய படங்களில் ஒன்றில் கூட ‘ஏண்டா இந்தப் படத்தில் கமிட் ஆனோம். பாதியில் ஓடிவிடலாம் என்றோ ஒருநாளும் எண்ணியதில்லை. எத்தனை படங்கள் செய்தோம். எவ்வளவு சம்பாதித்தோம் என்பது எப்போதும் முக்கியமல்ல. நாம் பண்ணிய படங்களில் பத்து நல்ல படங்களாவது இருக்கின்றனவா என்பதே முக்கியம். அது எனக்கு சாத்தியமாகியிருக்கிறது என்றே நம்புகிறேன்.’’ என முடிக்கிறார் வில்சன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com