யதார்த்தத்தை மீறிய கற்பிதங்கள் நிறுவப்படும் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு முழுமையான இடதுசாரியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. அவரின் முதல் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. தற்போது இரண்டாவது படமாக ‘தண்டகாரண்யம்’ எடுத்திருக்கிறார். இந்த படம் குறித்து அவரிடம் உரையாடினோம்.
இரண்டாம் படத்துக்கு ஏன் இவ்வளவு தாமதம்?
’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ 2019-இன் இறுதியில் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உடனே, இரண்டாவது (தண்டகராண்யம்) படத்துக்கான கதையையும் எழுதி முடித்து, பெரிய ஹீரோக்கள் சிலருக்கு கதை சொன்னேன். அப்போது, யாரும் எதிர்பார்க்காத கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டிருந்த பணிகள் தள்ளிப்போயின.
இந்த படத்தின் கதையை பெரிய ஹீரோக்கள் சிலருக்கு சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் நடிக்க பயந்து பின்வாங்கி விட்டதாக கேள்விப்பட்டோம். எதனால்?
அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அது பேசும் அரசியலுக்காக நடிக்க தயங்கினர். ஐந்து பெரிய நடிகர்கள் இப்படி ஒதுங்கிக் கொண்டார்கள். பிறகு இயக்குநர் அமீர் நடிக்க ஒத்துக் கொண்டார். ஒருசில காரணங்களால் அது நடக்கவில்லை. பிறகுதான் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் படத்திற்குள் வந்தனர்.
ரப்பர் பந்து திரைப்படத்துக்கு பிறகு தினேஷ் நடிப்பில் தண்டகாரண்யம் வெளியாக இருக்கிறது என்பதால் எதிர்பார்ப்பு உள்ளதே?
எனக்கும் தினேஷுக்கும் பதினைந்து ஆண்டுகால நட்பு. அட்டக்கத்தியில் தொடங்கி கபாலி, குண்டு திரைப்படம் வரை தொடர்ந்து அவருடன் பணியாற்றி வருகிறேன்.
என்னுடைய அரசியல் மற்றும் கதை தேர்வுகள் குறித்து அவருக்கொரு புரிதல் உண்டு. அதேபோல், அவரின் அணுகுமுறை, நடிப்பு குறித்து எனக்கொரு புரிதல் உள்ளது. அதனால், தண்டகாரண்யம் படத்தின் கதை சொன்னதுமே நடிக்க ஒத்துக் கொண்டார்.
உண்மையில் தண்டகாரண்யம் படப்பிடிப்பு முடித்த ஐந்தாவது நாளில்தான் லப்பர் பந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அந்த படத்தில் வரும் தினேஷின் ’லுக்’ தண்டகாரண்யம் படத்தின் ’லுக்’தான். அவருக்கு இந்த படம் முக்கியமானதொரு படமாக இருக்கும்.
தண்டகாரண்யம் எதைப் பேசுகிறது?
இது ஒரு தீவிரமான காதல் கதை. அம்மா - மகன்களுக்கும், அண்ணன் – தம்பிகளுக்கும் இடையிலான பாசத்தைப் பேசக்கூடிய எல்லாம் கலந்த கலவையான ஒரு படம். காதலோடு வீரத்தையும் பேசுகிறது. அரசியலாக பார்த்தால், அதிகாரத்தின் வன்முறைக்கு எதிரான எளிய மக்களின் போராட்டம். அதற்குள் காதல் தீவிரமாக இருக்கும்.
காதல் கதைக்கு தண்டகாரண்யம் என்கிற பெயர் ஏன்?
தண்டகாரண்யம் என்பது ஒரு காட்டின் பெயர். ஐந்தாறு மாநிலங்களின் எல்லைகளை தொட்டு இருக்கும் மிக அடர்த்தியான காட்டுப் பகுதியை குறிக்கும். இங்குதான் அதிக அளவில் கனிமவளங்கள் இருக்கின்றன. அதை கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாட, அதற்கு எதிராக அம்மண்ணின் மக்கள் போராடுவதை குறியீடாக இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். எந்த அமைப்பையும் படத்தில் குறிப்பிட்டு சொல்லவில்லை.
“அமரன்கள் செய்த அநீதியை தண்டகாரண்யம் பேசும்” என சொல்கிறீர்கள்?
நாம் சொல்வது அதிகாரத்தில் இருப்பவர்கள் மிகுந்த பொறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைத் தான்.
அதிகார வர்க்கத்தினர் எளிய மக்கள் மீது நடத்திய போரில், அதிகார வர்க்கத்தின் நல்ல பக்கங்கள் மட்டுமே காட்டப்படுவதோடு, அவர்களின் செயல் புனிதமானதாக கற்பிக்கப்படுகிறது.
அதேபோல் இங்குள்ள அரசுகள் கார்ப்பரேட்டுகளை அதிகார வர்க்கத்தினரின் நலன்களை மட்டுமே பாதுகாப்பவையாக உள்ளதே தவிர, எளிய மக்களுக்கானதாக இல்லை. அதிகாரத்திலிருப்பவர்கள் ஒரு எளிய மனிதனின் கனவை,காதலை எப்படி நசுக்கினார்கள் என்பதே தண்டகாரண்யம்.
‘குண்டு’ திரைப்படம் முடிந்ததும் தண்டகாரண்யம் படத்தின் கதையை எழுதிவிட்டேன். அதை இயக்குநர் பா. ரஞ்சித்திடம் படிக்கக் கொடுத்தேன். வாசித்துவிட்டு, “இந்த மாதிரியான கதைகள் எனக்கு ஏன் தோணலைன்னு தெரியல. இந்த கதை ஒரு முக்கியமான படமாக இருக்கும். நீலத்திலேயே இந்த படத்தை தயாரிக்கலாம்” என்றார்.
கூழாங்கல், ஜமா போன்ற படங்களை தயாரித்த 'Learn and Teach Productions' நிறுவனத்துடன் சேர்ந்து அவர் இப்படத்தை தயாரித்துள்ளார்.
நீங்கள் ஒரு தீவிர வாசிப்பாளர், கவிஞரும் கூட. இதுவரை வாசித்த நாவல்கள், சிறுகதைகள் எதையாவது படமாக்க நினைத்ததுண்டா?
இதுவரை அப்படி தோன்றவில்லை. அது ஏன் என்று கூட தெரியவில்லை. நாம் கதைகளுடன் தான் வாழ்க்கையை தொடங்குகிறோம். நான் வாழ்ந்த, வளர்ந்த சூழலில் என என்னிடமும் நிறைய கதைகள் இருக்கிறது.
மற்றவர்கள் சொல்ல தயங்கும் கதைகளை இச்சமூகத்தில் சிறு விளைவையேனும் தூண்டும் படியாக சொல்ல விரும்புகின்றேன்.
நான் ஒரு இடதுசாரி என்பதால், இடதுசாரி பார்வையில் இச்சமூகத்தின் பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பதை ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியாக சொல்ல நினைக்கிறேன்.
சினிமா பெரும் முதலீட்டில் இயங்கக்கூடிய துறை. இந்த துறையில் உள்ள நீங்கள் உங்களை அதிகார வர்க்கத்துக்கு எதிரானவர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். இது முரணாக தெரியவில்லையா?
என் படங்கள் தாமதமாவதற்கு இதுவும் ஒரு காரணம். நாம் முயன்றவரை போராட வேண்டும். மொத்தமாக அவர்களின் சட்டகத்திற்கு உள் இல்லாமல் சிறு சிறு சமரசங்களுடன் புதிய கதைகளை நோக்கி நகரவேண்டும். நான் எப்போதும் எந்த சூழலிலும் அதிகார வர்க்கத்துக்கு ஆதரவாக படம் எடுக்க மாட்டேன்.