அம்மா மாவு விற்கிறார்; மகன் திரைப் பட இயக்குநர்!
சில நல்ல படங்களை தியேட்டர்களில் காத்தாட விட்டுவிட்டு, அதையே ஓ.டி.டியில் பார்க்கும்போது ஓவராய் ‘உச் ‘ கொட்டி சமூக வலைதளங்களில் மாய்ந்து மாய்ந்து எழுதுவது லேட்டஸ்ட் வியாதிகளில் ஒன்று. அவ்வாறு தமிழ் சனங்களால் சமீபத்தில் கைவிடப்பட்ட படம் ‘மொத ராத்திரி’. உறவினர்களால் திடீர் மணமகன், மணமகள் ஆக்கப்பட்ட ஜோடி ஒன்றின் முதல் இரவை ரணகளத்திலும் செம கலகலப்பாய் படமாக்கியிருந்தார் அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி. அந்திமழை நேர்காணலுக்காக அவரை சந்தித்து உரையாடினோம்.
“என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி. அம்மா, தம்பி மட்டும்தான். சென்னைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. அம்மா மாவு விற்றுவருகிறார். தம்பி உள்ளூரில் போட்டோகிராபராக உள்ளார்,” என்ற சுய அறிமுகத்துடன் தொடங்கியவரிடம் சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள் எனக் கேட்டோம்.
“லயோலாவில் சினிமா தொடர்பான பகுதிநேர டிப்ளமோ ஒன்றை ஒரு வருடம் படித்தேன். பின்னர் டக்கர் என்ற படத்தில் 6 மாதகாலம் பிரி – பூரடக்சன் வேலையை செய்துவந்தேன். முதன்முதலாக, பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்த ‘கே-13’ என்றப் படத்தில் அசோசியேட் இயக்குநராகப் பணியாற்றினேன்.
பிருந்தா மாஸ்டர் இயக்கிய ‘ஹே சினாமிகா’, ‘தக்ஸ்’ ஆகிய இரண்டு படங்களில் வேலை பார்த்தேன்.
இந்தி சீரிஸ்களில் வேலை பார்த்து வந்தேன். அப்போது ஃபீரிலேன்சிங்காக நிறைய இடங்களில் வேலை செய்துள்ளேன்.
‘மொத ராத்திரி’ பட வாய்ப்பு எப்படி வந்தது?
நானும் ரிஷிகாந்த்தும் இந்தப் படத்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே குறும்படமாக தயாரிக்க ஆரம்பித்தோம். பின்னர் தான் இது திரைப்படமாக முன்னேறியது. முதலில் இந்தப் படத்திற்கு ஒரு முகம் தெரிந்த கதாநாயகனை நடிக்க வைக்கலாம் என்றார்கள். ஆனால், நானும் ரிஷிகாந்த்தும் ஒன்றில் உறுதியாக இருந்தோம். அது என்னவென்றால், நான் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ அவர்தான் என்றும், ரிஷிகாந்த் நடிக்கும் முதல் படத்தின் இயக்குநர் நான்தான் என்பதுதான்.
பின்னர் லவ் டுடே, மகாராஜா ஆகிய படங்களில் கேமராமேனாக பணியாற்றிய தினேஷ் புருஷோத்தமன், இந்தக் கதை பிடித்துபோனதால், தெரிந்தவர்களிடம் கூறினார். அவர் மூலமாகத்தான் மைத்ரி மூவி மேக்கர்ஸ் எங்களுக்கு அறிமுகமானார்கள். கதை கேட்டவுடன் அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. 6 ஆண்டுகளாக அலைந்த எங்களுக்கு ஒரே மாதத்தில் அனைத்தும் கூடியது. இவ்வாறுதான் ‘மொத ராத்திரி’ பட வாய்ப்பு அமைந்தது. நடப்புஆண்டு மார்ச் மாதத்தில்தான் படப்பிடிப்பை தொடங்கினோம்.
இந்தப் படத்தில் திரும்ப ஒரு பாக்யராஜை பார்த்ததுபோல் இருந்தது... எங்கிருந்து இந்த இன்ஸ்பிரேஷன் வந்தது?
இந்தக் கதையை எழுதத்தொடங்கும்போது எதுவும் தெரியவில்லை. கதையை எழுதத் தொடங்கியதும், டைட்டில்கார்ட் போடும் இடம் ஹிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பொதுவாக பாக்யராஜ் சார் படங்களுக்கு வரும் டைட்டில்கார்ட்கள் ஹைலைட்டாகத் தெரியும். அவரின் சின்னவீடு போன்ற படங்களில் நாம் கவனித்திருப்போம். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கதையை கையாண்ட விதமும் இதற்கு ஒரு காரணம்.
பாக்கியராஜ் ஸ்டைல் என்று சொல்வது கதையில் வரும் காமெடியைத் தாண்டி, படத்தில் வரும் கதாநாயகன், அனைவரும் கனெக்ட் பண்ணிக்கொள்ளும் வகையில் இருப்பார். மேலும், அனைவரையும் அடிக்கும் ஒரு பெரிய ஆளாக கதாநாயகன் இல்லாமல், கிண்டல்களை வாங்கிக்கொள்ளும் ஒரு வீக்கான நபராக வருவார். இதைதான் அனைவரும் பாக்கியராஜ் ஸ்டைல் என்று குறிப்பிடுவதாக நான் நினைக்கிறேன். வி.சேகர், விசு., பாலசந்தர், பாலுமகேந்திரா ஆகியவர்களும் என் இன்ஸ்பிரேஷன்.
இந்தப் படத்தில் ஒரு சாதாரண 2கே கிட், ஜென்சி கிட் போல மெட்சூரிட்டி இல்லாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளீர்கள். நீங்களே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?
முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு பலரைத் தேடினோம். அதில் சிலர் அதிகமாக கலாய்க்கப்படும் பாத்திரமாக இருப்பதாக தவிர்த்தார்கள். சிலர் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க தயாராகவும் இருந்தார்கள். ஆனால், பட்ஜெட், கால்சீட் கிடைக்காதது ஆகியவற்றால் நானே ஏற்று நடித்தேன். ஒரு புதுமையான முகத்தை கொண்டுவருவோம் என்று சிந்தித்தோம். நான் குறும்படங்களில் நடித்துள்ளேன். படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை.
எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டர்களில் இந்தப் படம் ஹிட் ஆகவில்லையே.... இயக்குநராக இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
கொஞ்சம் வருத்தமாக உள்ளது. ஆனால், ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் ஏதோ ஒரு இடைவெளி இருப்பதாக நினைக்கிறேன்.
அதேபோல, படங்களின் போஸ்டர்களை ஒட்டும்போது, போஸ்டர் வேல்யூ என்ற ஒன்றை ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக தெரிகிறது. எங்களின் போஸ்டரை எத்தனை பேர் திரும்பி பார்த்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு பெரிய நடிகரின் பட போஸ்டர் என்றால் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
இந்தப் படத்தின் டைட்டிலே இந்த பின்னடைவுக்கு காரணமோ என்று தோன்றுகிறது. சிலர் இந்தப் படத்தின் டைட்டிலை வரவேற்கிறார்கள்; சிலர் இதுவா என்கிறார்கள். ஆனால், பெரிய பெரிய படங்களுக்குப் பிறகும் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர்கள் நிரம்பி வருகின்றது.
எங்களுடைய தயாரிப்புத் தரப்பை பொறுத்தவரை இந்தப் படம் லாபம்தான். விரைவில் மக்களிடம் சென்று, பெரிய வெற்றியைத் தரும் என்று எதிர்பார்க்கிறோம்.
