அருள்நிதி
அருள்நிதிகழுவேர்த்தி மூக்கன்

உதய் அண்ணா கூட சேர்ந்து ஒரு டபுள் ஹீரோ சப்ஜெட்!

’அப்பா உட்பட எனது குடும்பத்தைச் சேர்ந்த யாருமே நான் நடிப்புத் துறைக்குள் வருவேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த முடிவுக்கு முழுக்க முழுக்க அண்ணன் உதயநிதிதான் இன்ஸ்பிரேஷன்' பெரிய இடத்துப்பிள்ளை என்பதற்கான அறிகுறிகள் எதுவுமின்றி மிக சகஜமாக தோழமை உணர்வுடன் பேசுகிறார் அருள்நிதி.

‘திருவின் குரல்' படம் மூலமாக வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக தனது நடிப்பில் இன்னொரு பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கும் அருள்நிதிக்கு அடுத்தடுத்து ‘கழுவேர்த்தி மூர்க்கன்', ‘டிமாண்டி காலனி 2' என்று ரிலீஸுக்குப் படங்கள் கியூ கட்டி நிற்கின்றன.

‘அந்திமழை'க்காக பேட்டி என்றதும்  ‘அப்பாயின்ட்மெண்ட் கேக்குற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய  நடிகன்லாம் இல்ல. நினைச்ச நேரத்துக்கு கிளம்பி வாங்க சார்' என்கிறார்.

உரையாடல், சுமார் 6 மாத காலத்துக்குள் தொடர்ந்து அடுத்தடுத்து 6 படங்கள் ரிலீஸானது குறித்து ஆரம்பமாகிறது.

 ‘என்னடா இந்த அருள்நிதி ஓவர் சுறுசுறுப்பாகி, வரிசையா படங்கள் நடிச்சுத்தள்ளிக்கிட்டேயிருக்கானேன்னு தானே நினைக்கிறீங்க. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. இதுல 4 படங்கள் கொரோனாவுக்கு முந்தி ஆரம்பிச்சது. அப்படியே பெண்டிங்ல கிடந்து இப்ப வரிசையா ரிலீஸாகுது' என்றவர் தனது தொடக்ககால  பயணத்துக்குப் போனார்.

‘நான் சினிமாத் துறைக்குள் வருவேன். அதிலயும் நடிகனாக வருவேன்னு என் குடும்பத்துல யாருமே எதிர்பார்க்கலை. குறிப்பா அப்பாவுக்கு பயங்கர ஷாக். ‘நடிகனா ஜெயிக்கிறது சாதாரண விஷயம்னு நினைக்கிறியா? உன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனாலும், சமாளிப்பியா?'ன்னுதான் முதல்ல கேட்டார். அந்தக் கேள்வியில என் மேல இருக்கிற  சந்தேகத்தை விட அக்கறைதான் அதிகம் இருக்கிறதைப் புரிஞ்சிக்கிட்டேன்.

அப்பா துவக்கத்துல நான் அவரோட பிசினஸ் லைன்ல சப்போர்ட்டா வந்து நிப்பேன்னு நினைச்சிருக்கார்ங்குறதை கொஞ்சம் லேட்டாத்தான் புரிஞ்சிக்கிட்டேன். ஆனா என் விருப்பம் நடிகனாகுறதுன்னு தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்சாகப்படுத்தினர். என் முடிவுகள்ல எப்பவுமே தலையிடுறதில்லை. என் படங்கள் சம்பந்தமா அவர்கிட்ட நானா ஷேர் பண்ணிக்கிட்டாத்தான் உண்டு. அடுத்து யார் படத்துல நடிக்கப்போறங்குற மாதிரி ஒரு கேள்வி கூட கேட்கமட்டார் என் சினிமா கேரியருக்கு என்னை நம்பி முதல் படம் கொடுத்த பாண்டிராஜ் சாரை நான் எப்பவுமே நன்றியோட நினைச்சுக்குவேன், ஆக்சுவலா உதய் அண்ணன் நடிக்க வேண்டிய படம் அது. பாண்டிராஜ் சார் ‘வம்சம்‘ பட கதை கேட்ட அண்ணன், ‘இந்தக் கதையில லுங்கி கட்டி நடிக்கணும். தாடி வளர்க்கணும். மாடு மேய்க்கணும். இதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன். மாடு மேய்க்கிறதுக்கு ஒரு சரியான ஆள் நம்மகிட்ட இருக்கான்னு சொல்லி பாண்டிராஜ் சார்கிட்ட என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்.

அந்த வகையில முதல் படமே எனக்கு முக்கியமான படமா அமைஞ்சது. பாண்டிராஜ் சார் ரொம்ப பொறுமையா, அக்கறையா எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தார். அந்தப் படத்தோட இசைவெளியீட்டுவிழா என் வாழ்நாள்ல மறக்கமுடியாத அனுபவம்.

கலைஞர் தாத்தா முதல்வராக இருந்த சமயம் அது. பிரமாண்டமான இசைவெளியீட்டு விழாவா ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. நடிகர்கள் விஜய், சூர்யாவுல தொடங்கி பெரும் நட்சத்திரப்பட்டாளம் தாத்தாவோட தலைமையில திரண்டு வாழ்த்தினாங்க. எப்ப நினைச்சாலும் கூஸ்பம்ப்ஸ் நிகழ்வுதான். ஒரே குறை அந்தப் பட வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித்தந்த உதய் அண்ணா அந்த நிகழ்ச்சியில கலந்துகொள்ள முடியாமல் போனது.

வம்சத்துக்கு அப்புறம் ஒரு டஜன் படங்களுக்கு மேல நடிச்சுட்டேன்னாலும் இன்னொரு படம் பாண்டிராஜ் சார் கூட சேர்ந்து பண்ணணும்னு ஒரு ஆசை. இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் நான் என் நடிப்புத்திறமையை ஓரளவுக்கவது வளத்திருக்கேனான்னு அவர் வாயால கேக்கணும்னு ஆசை. அந்த வாய்ப்பு இடையில ஒண்ணுரெண்டு தடவை வந்துவந்து மிஸ் ஆயிடுச்சி. ஆனா கூடிய சீக்கிரம் நடக்கும்.

‘டைரி', ‘தேஜாவு', ‘திருவின் குரல்'ன்னு தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் படங்கள்லயே நடிக்கிறீங்களேன்னு கேக்குறாங்க. நான் கதை கேக்குறதுக்கு முந்தி என்ன ஜானர் கதைகளை வச்சிருக்கீங்கன்னு யார்கிட்டயும் கேக்குற வழக்கம் இல்லை. மனசுக்குப் பிடிச்சிருந்தா ஓ.கே  சொல்லி நடிக்கிறேன். அவ்வளவுதான். அடுத்த ரிலீஸான ‘கழுவேர்த்தி மூர்க்கன்' நிச்சயம் வேறமாதிரியான படம்.

‘டிமாண்டி காலனி 2' முதல் பாகத்தைவிட இன்னும் மிரட்டலா வந்துக்கிட்டிருக்கு. ஒரு நடிகனா நான் நடிக்கிற படங்களுக்கு எவ்வளவு நியாயம் செய்ய முடியுமோ அதுக்காக கூடுமானவரைக்கும் மெனக்கெடுறேன். அதே மாதிரி அறிமுக இயக்குனர்கள் கூட அதிகமா படங்கள் செய்யுறேன்னா அதுக்குக் காரணம் என்னை நம்பி அவங்கதான் அதிகமா கதை சொல்ல வர்றாங்க. அப்படி கதை சொல்ல வர்றவங்க கிட்ட கதை எவ்வளவு நல்லா இருக்குன்னு பாப்பேனே ஒழிய ஹீரோவுக்கு முக்கியத்துவம் இருக்கான்னு பாக்கவே மாட்டேன்.

‘திருவின் குரல்‘ படத்துல என்னைவிட அப்பா பாரதிராஜாவுக்கு ரொம்ப முக்கியமான கதாபாத்திரம். ஆனா அவர் கூட சேர்ந்து நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்கிறதெல்லாம் சாதாரண பாக்கியமா?

ஒரு சம்பவம் சொல்லணும். ‘திருவின் குரல்' ஸ்பாட்ல ஒரு நாள் அவர் கூட ஜாலியா பேசிக்கிட்டிருக்கப்ப, ‘சார் நீங்க பயங்கர கோபக்காரர்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இத்தனை நாள் ஷூட்டிங்லநீங்க ஒரு நாள் கூட கோபப்பட்டு நாங்க பாத்ததில்லையே சார்ன்னேன். அதுக்கு அவர் ‘நீ என் டைரக்‌ஷன்ல நடிச்சிருந்தா என் கோபத்தைப் பார்த்திருப்ப. இப்ப நான் வெறும் நடிகன் தான? அதுவும் உன்னோட பாசக்கார அப்பா. எப்பிடி கோபப்படுறதுன்னார். உடனே நானும் ஒரு ஆர்வக்கோளாறுல டைரக்டர் கையில இருந்த மைக்கை வாங்கி அடுத்த ஷாட்டை நீங்க டைரக்ட் பண்ணுங்க சார், நான் நடிக்கிறேன்னு ஷாட்ல போய் நின்னேன்.

அதுவரைக்கும் மனுஷனா இருந்தவரு மைக்கு கைக்கு வந்தவுடனே சிங்கமா மாறிட்டாரு. ஒன் மோர், ஒன் மோர்னு ஆறு ஏழு டேக் போன உடனே, டேய் கைப்புள்ள தப்பிச்சு ஓடிருன்னு நினைச்சிட்டு மைக்க அவர் கையிலருந்து வாங்கி பழையபடி டைரக்டர்கிட்டவே கொடுத்துட்டேன். இன்னும் ஒண்ணுரெண்டு டேக் வாங்கியிருந்தா கோபக்கார பாரதிராஜாவைப் பாத்திருப்பனோ என்னவோ. எதுக்கு ரிஸ்க்?

சினிமாவில் என்னோட நண்பர்கள் வட்டாரம் ரொம்ப சின்னது. டைரக்டர்கள் அஜய் ஞானமுத்து, பாண்டிராஜ் சார் கிட்ட அடிக்கடி போன்ல பேசுவேன். உதய் அண்ணா, நான், துரை மூணு பேரும் சான்ஸ் கிடைக்கிறப்பவெல்லாம் சேர்ந்து கிரிக்கெட் ஆடுவோம்.

உதய் அண்ணா கூட சேர்ந்து ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பண்ணணும்னு ஒரு ஆசை இருந்தது. ‘நெஞ்சுக்கு நீதி‘ படத்துலகூட ஆரி பண்ணுன கேரக்டரை முதல்ல நான் தான் பண்ணுறதா இருந்தது. ஆனா அந்த தேதிகள்ல இன்னொரு பட ஷூட்டிங் இருந்ததால மிஸ் பண்ணேன். இப்ப அண்ணன் முழுநேர அரசியல்ல ஈடுபடப்போறதால மாரி செல்வராஜ் படத்துக்கு அடுத்து படங்கள்ல நடிக்கப்போறதில்லன்னு அறிவிச்சுட்டார். அந்த வகையில அநியாயத்துக்கு நான் அண்ணனை சினிமாவுல மிஸ் பண்றேன்.

அடுத்து நான் ரொம்ப மிஸ் பண்றது என் ஃபேமிலியை. குறிப்பா என் பையனை. ஒரு காலத்துல வேலைக்கே போகாம, ஸ்கூலுக்கு பிக் அப், டிராப் தொடங்கி, சதா அவன்கூடவே விளையாண்டுக்கிட்டிருப்பேன். ‘டேய் வேலை இல்லாட்டியும் சும்மாவாவது வெளியேபோய் சுத்திட்டு வாடான்னு வீட்டைவிட்டு கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா அனுப்பி வைப்பாங்க. ஆனா இப்ப நிஜமாவே அடுத்தடுத்த ஷூட்டிங்னு ரொம்ப பிசியா இருக்கேன். சில சமயங்கள்ல ஷூட்டிங் முடிஞ்சு மகனை எப்படா போய்ப் பாப்போம்னு ஏக்கமே வர ஆரம்பிச்சுடுது,' பாசக்கார தந்தையாய் நெகிழ்கிறார் அருள்நிதி.

மே, 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com