கண்ணா ரவி
கண்ணா ரவிஎஸ் சரவணன்

லவ்வர் படத்தில் நடிக்க மறுத்தேன்!

'சென்னைக்கு அருகே செங்குன்றம்தான் எனது ஊர். ஃபேன் ஓடிக் கொண்டிருப்பதுபோல, எங்கள் வீட்டில் எந்நேரமும் டி. வி. ஓடிக் கொண்டிருக்கும். பாட்டி, அம்மா என எல்லோரும் சினிமா பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். நாளைக்குத் தேர்வு என்றால் கூட, இன்று இரவு சினிமாவுக்கு அழைத்துப் போவார்கள்.” என பரவசத்துடன் பேசத் தொடங்கும் கண்ணா ரவி, வீரா, கைதி, மண்டேலா, குருதி ஆட்டம், ரத்த சாட்சி, சாணி காகிதம், லவ்வர், இன்ஸ்பெக்டர் ரிஷி – இப்படி குறைந்த படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர்.

 ‘சிவில் இஞ்சினியரிங் படித்த நிலையில் எனக்கு சினிமா ஆசை வந்தது. அப்பாவிடம் சொன்னேன். அதிர்ச்சியானவர். பிறகு அவரே, ”சினிமாவுக்குத்தான் போவப் போறேன்னா நல்லா பயிற்சி எடுத்துக்கிட்டுப் போ… நல்ல இன்ஸ்டியூட்டில் சேர்ந்து படி.’ என்றார்.

 ‘மறுபடியும் படிக்கணுமா…? என்னால முடியாது.’ என்றதற்கு, பாலுமகேந்திரா சினிமா பட்டறையை கைக்காட்டி விட்டார். நடிப்பின் அடிப்படை யை அங்கு கற்றுக் கொண்டேன்.

இன்ஸ்டியூட்டில் என்னுடன் படித்தவர்கள், மதிய உணவு இடைவேளையில், யாருக்கும் தெரியாமல் குரல் தேர்வுகளுக்குப் போய் வருவார்கள். ஒருநாள் அவர்கள் பின்னாடியே சென்றேன். சாலிகிராமத்தில் அருணாச்சாலம் சாலையில், மணி அண்ணன் டீ கடை இருந்தது. அங்கு அட்ரஸ் கார்த்தி என்பவர் இருந்தார். அவர் சினிமா அலுவலக முகவரிகளை சின்ன சின்னதாக ஜெராக்ஸ் எடுத்து, சினிமா வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு கொடுப்பார். அவரைக் கண்டுபிடித்துவிட்டேன்.

பிறகு, நானும் போட்டோ எடுத்துக்கொண்டு, கார்த்திக் அண்ணாவிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு சினிமா அலுவலகங்களுக்கு ஏறி இறங்கினேன். சனி, ஞாயிறு விடுமுறையிலும் போட்டோ கொடுக்க போய்விடுவேன். ஆனாலும், எங்கிருந்தும் அழைப்பு இல்லை!

ஒரு நாள் எங்கள் இன்ஸ்டியூட் வரவேற்பு அறையில் உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்த மேடம், கொஞ்ச நேரம் என்னை வரவேற்பு அறையில் இருக்கச்சொன்னார். அரை மணி இருந்திருப்பேன். அதற்குள், பத்து பேர் வந்து போட்டோ கொடுத்துவிட்டுப் போனார்கள். அந்த போட்டோக்களை எடுத்துக் கொண்டு, பாலுமகேந்திரா சார் அறைக்குச் சென்றேன். என்னவென்று கேட்டவர், போட்டோக்களை அங்கிருந்த டேபிள் டிராவில் வைக்கச் சொன்னார். டிராவை திறந்து பார்த்தால் கட்டுக்கட்டாக போட்டோக்கள். எனக்கு ஒரே அதிர்ச்சி!

 ‘சார் இவ்ளோ போட்டோ இருக்கே… எப்படி சார் இவங்கள கூப்பிடுவீங்க?’ என தயக்கத்துடன் கேட்டேன்.

 ‘எல்லோரையும் எப்படிப்பா கூப்பிட முடியும்…? அவங்க நடிச்சது ஏதாவது பாத்திருந்தா கூப்பிடுவேன். இல்லன்னா, நான் எழுதும் போது அவங்க முகம் ஞாபகம் வந்தா கூப்பிடுவேன்.’ என்றார். இந்த வார்த்தை என் மனக்கண்ணை திறந்தது. அதன் பிறகு, நிறைய குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். மொத்தமாக நூறு குறும்படங்களுக்கு மேல் நடித்திருப்பேன். என் நடிப்புக்கு குறும்படங்கள் நல்ல தீனிபோட்டன.” என்ற கண்ணா ரவி, முதல் பட வாய்ப்பு கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 ‘திரைப்படங்களுக்கு வாய்ப்பு தேடிய ஆரம்பத்தில் பிரெண்டு ரோல் என்று சொல்லி கூப்பிட்டு, வசனம்கூட தராமல், கூட்டத்தில் ஒருவனாக நிறுத்திவிடுவார்கள். இரண்டு மூன்று படங்களுக்குப் பிறகு, எனக்கு டயலாக் இருக்கா? என்று கேட்கத் தொடங்கினேன். இல்லையென்று சொன்னால், போட்ட சட்டையை கழட்டிக் கொடுத்துவிட்டு வந்துவிடுவேன்.

ஒரு நாள் சிவா என்று ஒரு அண்ணன் மெசேஜ் அனுப்பியிருந்தார். ஒரு படத்துக்கான ஆள் தேர்வுக்குப் போகச் சொல்லி. நான் நடித்த குறும்படங்களின் சி.டி.யுடன் அங்கு சென்றேன். போனதும் தேர்வு முடித்துவிட்டு, கண்ணா… இந்த ரோல் நீங்கதான் பண்றீங்க என்ற இயக்குநர் ராஜாராம், தயாரிப்பாளரிடம் மட்டும் பேசிவிட்டுச் சொல்வதா சொன்னார். தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்ததால், வீரா படத்தில் சுறா முருகன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானேன்.

முதல் நாள் படப்பிடிப்பு செல்வதற்கு முன், பாலுமகேந்திரா சாரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அப்போது அவர் உயிருடன் இல்லை. தலைமுறைகள் படத்துக்காக அவருக்கு ‘ஒன் ப்ளஸ்’ கண்ணாடி வாங்கியிருந்தார்கள். அவர் இறந்த பிறகு, அந்தக் கண்ணாடியை நான் எடுத்து வந்துவிட்டேன். படப்பிடிப்பு அன்று, அதை அணிந்துகொண்டு, சினிமா பட்டறை வாசலில் நின்று, ஐந்து நிமிடம் பாலுமகேந்திரா சாரிடம் வேண்டிக் கொண்டேன். பிறகுதான் படப்பிடிப்புக்கே சென்றேன்.

நான் நடிக்கும் முதல் காட்சி சென்னை ராயபுரம் டோபி கானாவில் எடுத்தார்கள். மேடையில் வசனம் பேசுவது மாதிரியான காட்சி. ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். மேடையை விட்டு கீழிறங்கியதும் ஆர்.என்.ஆர்.மனோகர் சார், கிருஷ்ணா சார், ஆடுகளம் நரேன், தம்பி ராமய்யா, கருணாஸ் எல்லாம் பாராட்டினார்கள். அது பெரிய உத்வேகம் கொடுத்தது.” என்றவர், அடுத்தடுத்த பட வாய்ப்புகளும், பணியாற்றிய அனுபவத்தையும் அதே புன்சிரிப்போடு சொல்லத் தொடங்கினார்.

  ‘ப்ரோக்கன் இமேஜ் என்ற ஒரு குறும்படம் நடித்திருந்தேன். அது நியூயார்க்கில் ‘விசாரணை’ படத்துடன் தேர்வாகி இருந்தது. அந்த படத்தின் போஸ்டர் டிசைனை நண்பர் அமுதன் பண்ணியிருந்தார். அவருடைய நண்பர்தான் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்து வியந்த லோகேஷ், குறும்படத்தை போடச் சொல்லி பார்த்துள்ளார். அதன் பிறகுதான் லோகேஷை சந்தித்தேன். அதற்குப் பின்னர், இரண்டு வருடம் கழித்து ‘கைதி’ படத்துக்காகச் சந்தித்தோம். அஜாஸ் அகமது கேரக்டர் பண்ணச் சொன்னார். ”முன்னரே அறிமுகமாகியிருந்தால் மாநகரம் படத்தில் நடிக்க வைத்திருப்பேன்” என்றார்.

ஒரு நாள் கைதி படத்தின் வேலை நடந்து கொண்டிருந்தது. எடிட்டர் பிலோமின் ராஜைப் பார்ப்பதற்காக இயக்குநர் மடோன் அஸ்வின் வந்திருந்தார். அங்குதான் எனக்கு அவருடன் அறிமுகம். மண்டேலாவில் வரும் மதி கேரக்டரில் யாரை நடிக்க வைப்பதென்று தெரியவில்லை என அஸ்வின் சொல்ல, உடனே லோகேஷ், ‘கண்ணாவை வச்சி பண்ணுடா. எப்படி வேணும்னாலும் அவனை நீ மாத்திக்கலாம்டா’ என்றார். அப்படித்தான் மண்டேலாவில் நடித்தேன்.

 ‘குருதி ஆட்டம்’ கைதிக்கு முன்னரே ஒப்பந்தமான படம். என்னுடைய கதாபாத்திரம் பிடித்திருந்தால் செகண்ட் லீட் பண்ணேன். சமூகத்தின் மீது ரொம்ப அக்கறை உள்ள மனுஷன் ஶ்ரீகணேஷ். அதேபோலத்தான் அருண் மாதேஸ்வரனும். என்னுடைய குறும்படங்களைப் பார்த்திருந்த அருண் மாதேஸ்வரன் ’ராக்கி’யில் நடிக்க அழைத்தார். பாரதிராஜா சார் பையனாக நடிப்பதற்கு. நான் நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். காரணம், அந்த கதாபாத்திரம் அம்மாவை கொலை செய்யும் என்பதால். இதைக் கேட்டதும் அருண் மாதேஸ்வரன் எதுவும் சொல்லவில்லை.

அருண் மாதேஸ்வரன், அடுத்து இயக்கிய சாணி காகிதம் படத்தில் மாரி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார். அது ஒரு கம்யூனிஸ்ட் கதாபாத்திரம். அவர் கதாபாத்திரத்துக்கான பின்கதையை ரொம்ப வலுவாக எழுதுவார். அதை அவருடைய தனித்துவமாக பார்க்கிறேன்.

கொரோனா முதல் ஊரடங்கின்போது ஜெயமோகனின் ’கைதிகள்’ சிறுகதை குறித்து எழுத்தாளர் பவா செல்லதுரை பேசியிருந்த வீடியோவைப் பார்த்தேன். அதில் வரும் அப்பு கதாபாத்திரம் என்னை ரொம்ப பாதித்தது. அந்த கதையை படமாக்கி அப்பு கதாபாத்திரத்தில் நடித்துவிட வேண்டும் என்று விரும்பினேன். அந்த சமயத்தில் நான் விரும்பியதே நடந்தது ஓர் இனிய அதிசயம்.

இரண்டாவது ஊரடங்கின்போது இயக்குநர் ரஃபீக் இஸ்மாயிலிடமிருந்து அழைப்பு.“நான் ஒரு படம் பண்ணப்போறேன்… எந்த கெட்டப்பில் இருக்கீங்க” என கேட்டார். அப்போது நான் ’சாணி காகிதம்’ மாரி பாத்திரத்துக்காக நீளமான தாடி முடியுடன் இருந்தேன். அதேமாதிரியான கேரக்டரில் நடிக்க வைத்துவிடுவார்களோ என்று பயந்து, இப்போ உள்ள கெட்டப்பை வேறு ஒரு படத்துக்காக மாத்திவிடுவேன் என்றேன்.

 ‘நான் பண்ணப்போற படத்தில்  அப்பு என்ற கதாபாத்திரத்துக்காக இந்த கெட்டப் தேவைப்படுது. அது ஹீரோ ரோல். அதுக்காத்தான் கேட்கிறேன்’ என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. எந்த பாத்திரமாக நடிக்க கனவு கண்டேனோ அதுவே தேடிவருகிறது! ரத்தசாட்சி நான் லீடாக பண்ண முதல் படம் .

அதன் பிறகு நடிக்க ஒப்புக் கொண்ட படம் லவ்வர். இயக்குநர் வியாஸை, நீண்டகாலமாகத் தெரியும் என்பதால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இருந்தாலும் கதையை படிக்கச் சொல்லி வியாஸ் வற்புறுத்தினார். படித்ததும், இந்த பாத்திரத்தில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். பத்து வருடம் கழித்து லீட் ரோல் நடிக்கத் தொடங்கியிருக்கோம், இந்த நேரத்தில் செகண்ட் லீட் வேண்டாம் என்ற யோசனையில் நிராகரித்துவிட்டேன். அவர்களும் மற்ற நடிகர்களை தேடினார்கள், யாரும் கிடைக்கவில்லை.

பின்னர், வியாஸ் என்னுடைய கேரக்டரை மாற்றி எழுதிக் கொண்டு வந்தார். அது பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதற்கு முன்னாடி நடித்த எல்லா கதாபாத்திரங்களிலிருந்தும் மதன் வித்தியாசமான கதாபாத்திரம்.

இப்போது இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடர் வெளிவந்துள்ளது. அதில் அய்யனார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தின் படக்குழுவில் சரிபாதி ஆண்களும், சரிபாதி பெண்களும் இருந்தனர். இயக்குநர் நந்தினியை பொறுமையின் சிகரம் எனலாம். ரொம்பப் பொறுமையா வேலை வாங்குவாங்க.

என் வருமானத்தைவிட நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மீது என் பெற்றோருக்கு கவனம் அதிகம். எப்படியும் மகன் ஒருநாள் பெரிய ஆளாக வருவேன் என்று நம்புகிறார்கள்” என நம்பிக்கையுடன் நேர்காணலை நிறைவு செய்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com