குடிகாரர்களுக்கு அட்வைஸ் என்கிற பெயரில் இரண்டரை மணி நேரம் ஓடுகிற படத்தில் இரண்டு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்களுக்கு குடித்து கொட்டமடித்து கொண்டாடிவிட்டு கடைசி ஐந்து நிமிடத்தில் ‘குடி நாட்டுக்கு வீட்டுக்கு ரூபாய் நோட்டுக்கு கேடு’ என்று ஃபுல்லா கல்லா கட்டுகிற சினிமாக்களுக்கு மத்தியில் நிஜ அக்கறையுடன், படம் முழுக்கவே மறுவாழ்வு குறித்து உரையாடியிருக்கும் படம் ‘பாட்டல் ராதா’. இதன் இயக்குநர் தினகரன் சிவலிங்கம் தமிழ் சினிமாவுக்கு 2025இன் ஆரோக்கிய நல்வரவு. ‘அந்தி மழை’க்காக அவருடன் உரையாடினோம்.
” நண்பன் பா.ரஞ்சித் தயாரிப்பில் எனது முதல் படமான ‘பாட்டில் ராதா’ ரொம்ப சென்சிபிளான கதை பேசியிருக்கிறது. அது சரியான புரிதலுடன் மக்களுக்கும் போய்ச் சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி.
சைதாப்பேட்டை அம்மா ஊர். உத்திரமேரூர் அருகில் உள்ள ஊர் எங்களுடையது. பூர்வீகமாக எங்களது நெசவு குடும்பம். பன்னிரெண்டாவது படிக்கும்போதே ஓவியக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. நான் பள்ளிப்படிப்பில் சுமாரான மாணவன் தான். சிறுவயதில் அம்புலி மாமா போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். ஓவியக் கல்லூரிக்கு சேர செல்லும்போதுதான் இயக்குநர் ரஞ்சித், ஜெய், ராஜா, ராமலிங்கம், திலீப் போன்ற பலரைச் சந்தித்தேன். நாங்கள் அனைவரும் கல்லூரி நண்பர்கள். என் கல்லூரி ஆசிரியர்களும் எங்கள் தனிப்பட்ட ஆர்வத்தைப் புரிந்து கொண்டு எங்களை ஊக்குவித்தார்கள்.இளம் வயதில், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பழனி முருகனுக்கு காவடி எடுத்தவனான, என் சிந்தனையை மாற்றும் இடமாக கல்லூரி அமைந்தது. இங்குதான் நான் சரியான மனிதனாக பிறப்பெடுத்தேன்.
கல்லூரிப் படிப்பு முடித்ததும் சிறந்த அனிமேஷன் நிறுவனங்களில் பணிபுரிந்தேன். எனக்கு தனியாக அனிமேட்டட் சீரிஸ் பண்ண வேண்டும் என்ற ஆசை பிறந்தது. ‘சோட்டா பீம்’ போன்றவை பிரபலமான சமயம் அது. தமிழில் நம் வாழ்வை மையப்படுத்திய ஒரு சீரிஸ் பண்ண வேண்டும் என்று அலைந்தேன். ஆனால், அதற்கு மிகவும் செலவாகும் என்பதால் முதலில் ஒரு சின்னப் படம் எடுத்து இயக்குநராக என் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். பிறகு படம் இயக்குவதில் ஆர்வம் வந்து இதில் பயணித்து வருகிறேன்.
நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு குடிநோயாளியின் கதையை சொன்னார்கள். குடி நோயாளியின் மனநிலை, அவருடைய குடும்பம் இதெல்லாம் என்னைப் பாதித்தது. அதை நானே ரிசர்ச் செய்து கதை எழுத ஆரம்பித்தேன். கதையில் கவலையை மட்டுமே சொல்லாமல் நம்பிக்கையையும் விதைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதைதான் ‘பாட்டல் ராதா’ படத்திலும் விதைத்திருக்கிறேன் என நம்புகிறேன்.
என் வீட்டின் அருகில் உள்ள என் நண்பன் ஒருவன் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பான். அதனால், அவனுடைய பட்டப்பெயரே ‘பாட்டல்’ தான். அதைத்தான் இந்தப் படத்திலும் பயன்படுத்தி இருப்போம். ‘பாட்டல் ராதா’ படம் எடுத்ததின் மூலமாக சமூகத்தைப் பற்றிய புரிதல் இன்னும் ஆழமாக எனக்குக் கிடைத்தது. நிறைய மறுவாழ்வு மையத்துக்கு நேரடியாகப் போய் அங்கிருந்தவர்களுடன் பேசி நிறைய விஷயங்கள் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. இந்த ஆய்வு படத்திற்கு பெருமளவில் உதவியது. அரசாங்கம் கொடுப்பதால்தான் மக்கள் குடிக்கறாங்க என்ற அர்த்தத்தில் ஒரு பாடல் வரும். அது குடிப்பவர்கள் எல்லாருடைய மனநிலை கிடையாது. என் கருத்தைத்தான் அதை சொல்லியிருக்கிறேன். ஒருத்தர் மது அருந்துகிறார் என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்கிறது என்பதைத்தான் நாம் ஆராய்ந்து அதை சரிசெய்ய வேண்டுமே தவிர அதை நியாயப்படுத்துவது கூடாது.
குரு சோமசுந்தரம், மாறன் அண்ணா ஆகியோர் கதையை விரும்பி அவர்களுடடைய இன்புட்ஸ் இருந்ததுதான் படம் இந்த அளவு ரீச் ஆனதற்கு காரணம். இன்னும் சொல்லப்போனால் எனது படப்பிடிப்பு குழுவிலேயே மறுவாழ்வு மையம் சென்று திருந்திய சிலர் இருந்தார்கள். அவர்களது அனுபவத்தையும் அனுமதியுடன் கதையில் பயன்படுத்திக்கொண்டோம்.
திரைக்கதை எழுத்தாளராக மகேந்திரன் எனக்குப் பிடிக்கும். அவருடைய ‘முள்ளும் மலரும்’ படம் பிடிக்கும். அதேபோல, இயக்குநர் வெற்றிமாறனுடைய ‘ஆடுகளம்’ படமும் பிடிக்கும். ஆடுகளம் போல் உலகளவில் மனிதனுக்குள் இருக்கும் கீழ்மை, பிரச்சினை போன்றவற்றை வேறு எந்த மொழியிலும் அந்த அளவுக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. இயக்குநர் இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் திரைக்கதையும் பிடிக்கும். ரங்கன் வாத்தியார், துரைக்கண்ணு கதாபாத்திரங்கள் பிடிக்கும். துரைக்கண்ணு வாத்தியார் தோல்வியடைந்த ஒருவர். ஆனால், அவர் உருவாக்கும் டான்ஸிங் ரோஸ், வேம்புலி ஆகியோர் திறமையான ஆட்டக்காரர்கள். இது சுவாரஸ்யமான முரண்.
மெட்ராஸ் ஜானி கேரக்டரும் எனக்குப் பிடிக்கும். தன் நிலத்தைப் பற்றிய நேசமும் அனைத்தும் தெரிந்த ஒருவனாக எல்லா இடத்திலும் ஒருவன் இருப்பான். அதுதான் ஜானி. என் வாழ்க்கையின் அனைத்து ஆழமான விஷயங்களும் இரஞ்சித்துக்குத் தெரியும். அரசியல் மற்றும் சினிமாவில் போகிற போக்கில் அரசியலை பேச வேண்டும் அதே சமயம் அதை மிக கவனமாகக் கையாள வேண்டும் என்ற விஷயத்தை இரஞ்சித்திடம் இருந்துதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இரஞ்சித்தின் வாழ்க்கைக்கும் அவர் எடுக்கும் படங்களுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. அந்த அளவுக்கு நேர்மையாக பல போராட்டங்களைக் கடந்துதான் வந்திருக்கிறார். பொய்யாக அரசியல் பேசக் கூடாது என்பதும் நான் நம்புவதை உறுதியாக படத்தில் சொல்ல வேண்டும் என்பதையும் கூட இரஞ்சித்திடமும் அவரது உதவியாளர்களிடமிருந்தும்தான் கற்றுக் கொண்டேன்.
நம்மை சுற்றி இருக்கும் மக்களை மதிப்பிடாமல் அவர்கள் வாழ்க்கையைப் புரிந்து கொள்வது என்பதை இரஞ்சித் எனக்குப் புரிய வைத்தார். அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட மிக முக்கியமான விஷயம் இது. அவர் பேசுகிற அரசியலை நானும் நிச்சயம் பேசுவேன்,’ என முடித்தார் தினகரன் சிவலிங்கம்.