"தங்கலானுக்கான தேசிய விருதை வாங்கிவிட்டேன்!''
’’பள்ளி நாட்கள்ல கலை மீது கொஞ்சம் கூட நாட்டமில்லாத, கிரிக்கெட் வெறியன் நான். என்னை கிரிக்கெட் மைதானத்திலிருந்து பலவந்தமா தூக்கிட்டுப்போய்தான் பைன்ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்த்தாங்க’’ மெல்லிய புன்னகையுடன் பேசத்த தொடங்குகிறார் எஸ்.எஸ். மூர்த்தி. ‘தங்கலான்’ படத்தின் தங்க ஆர்ட் டைரக்டர்.
2009ல் ‘அவள் பெயர் தமிழரசி’யின் மூலமாக அறிமுகமாகி எண்ணற்ற விளம்பரப் படங்களுக்கும் பணியாற்றியுள்ள மூர்த்திக்கு ‘தங்கலான்’ 50 வது படம். பூங்கொத்தோடு வாழ்த்தி ‘அந்திமழை’க்காக உரையாடினோம்.
“ என்னோட சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை பக்கத்துல இருக்குற கிராமம். விவசாய குடும்பம். நிறைய உறவுகள் ஒண்ணா வசிச்ச கூட்டுக்குடும்பம். எங்களுக்கும் சினிமாவுக்குமான தொடர்புங்குறது உளுந்தூர்பேட்டைக்கும் சென்னைக்குமான தூரத்தை விட பல மடங்கு அதிகம்.
பள்ளி நாட்கள்ல படிப்பைத் தாண்டி எனக்கு கிரிக்கெட் மோகம் தான் அதிகம். எப்பவும் கிரவுண்டுலதான் இருப்பேன். என்னோட அண்ணன் செல்வராஜ் பிரமாதமா படங்கள் வரைஞ்சு, எங்க குடிசை வீடு முழுக்க கருவேலம் முள்ளால பின் பண்ணி தொங்க விட்டிருப்பார். அண்ணனோட கம்பேர் பண்ணி, ‘இப்பிடி படம் வரைஞ்சாவது பழகலாம். கிரிக்கெட் நமக்கு சோறு போடாது தம்பி’ என்று அப்பா வருத்தப்படுவார்.
அந்த வயசுல பெரியவங்க சொல் நமக்கு வேப்பங்காய் தான? நான் கிரிக்கெட் ஆடுறதை நிறுத்தவே இல்லை. ஒரு நாள் திடீர்னு அண்ணனோட அவர் நண்பர்கள் கொஞ்சப் பேர் நேரா நான் கிரிக்கெட் ஆடிக்கிட்டிருந்த கிரவுண்டுக்கு வந்தாங்க. என்கிட்ட எதுவும் பேசலை. ‘எதுவும் கேட்காம எங்க பின்னால வா’ன்னு சொன்னவங்க, வலுக்கட்டாய கொண்டுபோய் என்னை எழும்பூர் கவின் கலைக் கல்லூரியில் சேர்த்தாங்க.
சாதாரண வாழ்க்கையிலிருந்து வேற ஒரு மாய உலகத்துக்கு பயணப்பட்ட நாள் அது. அந்த உலகம் என்னை அரவணைச்சிக்கிடுச்சி. தெய்வ தரிசனம் கிடைச்ச பக்தன் பரவசமடையிற மாதிரி, அம்மா மடியில தலை வச்சுக்குற பேரானந்த அனுபவம் மாதிரி, ஒரு வனாந்தரத்துல தன்னந்தனியனா உலவுற மாதிரி அந்த கல்லூரி வாழ்க்கைக்குள்ள கரைஞ்சு போயிட்டேன். அங்க சந்திச்சி நண்பர்கள்தான் இன்னைக்கு வரைக்கும் வாழ்க்கையில வழித்துணையா இருக்காங்க.
கல்லூரி முடிஞ்சதும் ஒரு நிறுவனத்துல அனிமேட்டரா வேலைக்குச் சேர்ந்தேன். நல்ல சம்பளம்தான். ஆனாலும் மனசுக்கு திருப்தி இல்லை. ஏதாவது ஒரு டைரக்டர் கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்து டைரக்டராகிடணும்னுதான் ஆசை. ஆனா நமக்கு அனுபவம் இல்லையே. அதனால ஆர்ட் அசிஸ்டெண்டா சேர்ந்து அப்புறம் ரூட் மாறிக்கலாம்னு மோகன மகேந்திரன் சார்கிட்ட ‘ வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்துல வேலை செய்ய ஆரம்பிச்சேன். அந்த வேலையை அவர் ரசிச்சி செஞ்ச விதமும் சொல்லிக்கொடுத்த விதமும் என் மனசை முழுசா மாத்திச்சி. ஆர்ட் டைரக்ஷன்கிறது சாதாரண வேலை இல்லை. ஒவ்வொரு கதைக்கும் தேவைப்படுற வெவ்வேறு உலகங்களை சிருஷ்டிக்கிறதால நாமளுமொரு பிரம்மாதான்னு ஒரு பெருமை வந்துச்சி.
அவருக்கு அடுத்து வீரசமர் சாரோடயும் பல படங்கள் வேலை கத்துக்கிட்டு, 2009ல தான் தனியா முதல் படம் பண்ண ஆரம்பிச்சேன். மீரா கதிரவன் சார் இயக்கின ‘அவள் பெயர் தமிழரசி’. எனக்கு ரொம்ப நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த படம்.
இதோ இந்த 15 ஆண்டுகள்ல தங்கலான் என்னோட 50 வது படம். யோசிச்சிப் பார்த்தா ரொம்ப திருப்தியான பயணம். வேலை பார்த்த அத்தனை டைரக்டர்கள்கிட்டயும் நல்ல பேரு. எப்பவும் அன்போட நட்போட இருப்பாங்க. அவங்களோட நண்பர்கள் படம் பண்ணுனா, ‘மூர்த்தி நேர்மையானவர்; அதைவிட திறமையானவர்னு சிபாரிசு பண்ணுவாங்க. இதுதான் என் சம்பாத்தியம்.
விதவிதமான விளம்பரப்படங்கள் வெரைட்டியான சினிமாக்கள் பண்ணியிருந்தாலும் அதையும் தாண்டி நம் மனசு எதுக்காகவோ காத்துக்கிட்டிருக்கும்.
தங்கலானுக்கு யாரை ஆர்ட் டைரக்டரா போடலாம்னு பேசு வந்தப்ப ‘புளூ ஸ்டார்’ பட டைரக்டர் ஜெயக்குமார்தான் என்னை சிபாரிசு பண்ணியிருக்கார். ரஞ்சித் சாரும் ஜெயகுமாரும் வகுப்புத் தோழர்கள். கூடவே மேனேஜர் சிவாவும் என்னை சிபாரிசு பண்ணவே ரஞ்சித் சார் நேர்ல கூப்பிட்டு ஸ்கிரிப்டைக் கொடுத்து படிக்கச் சொன்னார்.
‘தங்கலான்’ ஸ்கிரிப்டை முதன்முதலா படிச்சப்ப நாம இவ்வளவு காலமும் இதுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம்னு தோணுச்சி.இந்தப் பழங்காலத்துக்குள்ள நியாயமான பயணம் செய்யணும்னா இனி கொஞ்ச காலத்துக்கு விளம்பரப் படங்கள் பண்ணக்கூடாதுன்னு தோணுச்சு. நீங்க பார்த்த தங்கலான் உலகம் 200 நாட்களுக்கும் மேல முழு அர்ப்பணிப்போட நானும் என் குழுவினரும் உருவாக்கினது. செட்டுக்குள்ள நுழையிறப்பவே ரஞ்சித் சாரும் விக்ரம் சாரும் பார்வதி மேடமும் மற்ற எல்லா கலைஞர்களும் ஒரு புது உலகத்துக்குள்ள வந்த உணர்வை சிலிர்ப்போட சொல்லி பெரிய பெரிய வார்த்தைகளால பாராட்டினாங்க.
படம் ரிலீஸான பிறகு, என் நம்பரை யார்கிட்ட வாங்கினாங்கன்னே தெரியாத ஆயிரக்கணக்கான பேரின் அழைப்புகளும் பாராட்டுகளும். அத்தனை பாராட்டுகளுக்கும் என் கண்ணீர்தான் பதில். இன்னொரு பக்கம் என் கலை ஆர்வத்துக்காக என்னைப் பலகாலமா பொருளாதார ரீதியாவும் பொறுக்கிட்ட என் குடும்பத்துக்கு இப்பதான் பெருமை சேர்த்திருக்கேன்னு தோணுச்சு.
அந்த ஆயிரம் போன்களுக்கு மத்தியில எனக்கு தொழில் கத்துக்குடுத்த குருநாதன் மோகன மகேந்திரன் சாரோட அழைப்பு மறக்க முடியாதது. ‘ரொம்ப நல்லா பண்ணியிருக்கே மூர்த்தி. பெருமையா இருக்குன்னு சொன்னவர். உனக்கு தங்கலானுக்காக நிச்சயமா தேசிய விருது கிடைக்கும்னு சொன்னார். பதிலுக்கு உங்க பாராட்டுக்கு அப்புறம் எனக்கு தேசிய விருது எதுக்கு சார்னு சொன்னேன்,’’ என்று நெகிழ்கிறார் மூர்த்தி.