மூன்று முறை வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டேன்!

இயக்குநர் தமி்ழ்
இயக்குநர் தமி்ழ்
Published on

ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கைப் போராட்டமும், அவர்களின் சமூகப் பிரச்னையும்தான் இயக்குநர் தமிழின் திரைக்களம்! இவரின் முதல் படமான ’சேத்துமான்’ தாத்தா – பேரன் உறவின்வழி சாதிகளுக்கு இடையேயான முரணைப் பேசியதென்றால், இரண்டாவது படமான ‘எலக்சன்’ உள்ளாட்சி தேர்தலில் சாதியும் - சதியும் எப்படி பிணைந்திருக்கிறது என்பதைப் பேசியது. இவரின் மூன்றாவது படமும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

“படிப்பைவிட சினிமாதான் என்னை சந்தோஷப்படுத்தியது. சின்ன வயசிலேயே நிறைய படங்கள் பார்த்ததால்தானோ என்னவோ இன்னைக்கு சினிமாவில் இருக்கேன்” - என பேசத் தொடங்கிய தமிழ், அவரின் திரைப்படங்களைப் போலவே எளிமையாக உரையாடலைத் தொடர்ந்தார்.

“நான் நல்லா படித்து, வேலைக்குப் போய், கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகளோடு சந்தோஷமா வாழணும்கிறதுதான் என் அம்மா – அப்பாவோட ஆசை. இந்த நார்மல் லைஃபில் எனக்கு விருப்பம் இல்ல. சினிமாதான்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா, இதை வீட்டில் சொன்னால் ஏத்துக்க மாட்டாங்க. அவங்க விருப்பப்படியே டிகிரி சேர்ந்தேன். ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில மேத்ஸ் படிச்சேன். வாய்ப்பு கிடைச்சாபோதும் க்ளாஸ கட் அடிச்சிட்டு படத்துக்குப் போய்டுவேன். வெள்ளி, சனி, ஞாயிறுனா தியேட்டரில்தான் இருப்பேன்.

அந்த சமயத்தில் கல்லூரியில் தேர்வு எழுதாம என்னோட நண்பன் சுரேஷை நம்பி சென்னைக்கு வந்தேன். இனிமே சினிமா தான்னு வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். ஆனால் சினிமாவில் யாரையும் தெரியாததால் ஒரே வாரத்தில் ஊருக்குக் கிளம்பினேன். இந்த மாதிரி மூணு முறை சென்னைக்கு ஓடிவந்தவன் நான்.

ஒரு கட்டத்தில் டிகிரில நிறைய அரியர் வச்சதால, அதை எழுதலாம்னு முடிவு பண்ணேன். ஒரே மூச்சில் 32 பேப்பர் (மொத்தம் 41 பேப்பர் அரியர் ) எழுதினேன். 20 பேப்பர் பாஸ் பண்ணிட்டேன். மீதியிருந்த பேப்பர்களையும் எழுதி க்ளியர் பண்ணேன். இப்படியே மூனு நாலு வருஷம் போச்சு.

கொஞ்ச நாள் பிரிண்டிங் ப்ரஸில் வேலை பார்த்ததால், கேமரா கத்துகிட்டு ஸ்டூடியோ வைக்கலாம்னு நினைச்சேன். அப்போதான், ராஜீவ் மேனன் சார் ’மைண்ட் ஸ்கிரீன்’ நிறுவனம் தொடங்கினார். அங்கு, காமிரா படிக்கப்போறேனு சொல்லிட்டு சென்னைக்கு வந்தேன். உடனே, ராஜீவ் மேனன் சாரைப் போய்ப் பார்த்தேன். எனக்கு இயக்குநர் ஆசை இருப்பதை தெரிந்து, ‘கதை எழுதுங்க… உதவி இயக்குநரா வேலை பாருங்க… இது வேண்டாம்.’ என்றார்.

எனக்கு பாலுமகேந்திரா சாரிடம் சேரத்தான் ஆசை. காரணம், காலேஜ் படிச்சப்போ, ’கதைநேரம்’ ஒளிப்பரப்பானது. ஒவ்வொரு தொடரையும் மிஸ் பண்ணாம பார்த்துடுவேன். பிறகு அவர் இயக்கிய படங்களையும் பார்த்தேன். சொல்லப்போனால், அவரிடம் உதவியாளராக சேரவே சென்னைக்கு வந்தவன் என்றுகூட சொல்லலாம். நான் அவரைப் பார்த்து கேட்டபோது அவர் இப்போது படம் எதுவும் பண்ணல என்று கூறி இருந்தார்.

அப்போ, ராமு என்ற நண்பர் ‘பட்டாளம்’ என்ற படத்தில் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டார். அடுத்து ‘மதிகெட்டான் சாலை’ படத்தில் ஒர்க் பண்ணேன். பிறகு, நானே கதை எழுதி படம் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ரெண்டு வருஷம் நண்பர்கள் உதவியோடு சென்னையில் இருந்தேன்.

பின்னர், வெங்கட் பிரபு சாரிடம் பிரியாணி படத்தில் வேலை பார்த்தேன். அந்த படத்துடன் வெளியே வந்து கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன். அதில் ரெண்டு கதைகளை நிறைய தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் சொன்னேன். அவர்கள் தவிர்த்துவிட்டனர். அந்த சமயத்தில் சினிமாவைவிட்டுப் போய்விடலாம் என்றுகூட நினைத்தேன்.

ஆனாலும் இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டிருக்கோம்… செத்தாலும்கூட பரவாயில்ல ஒரு படம் பண்ணிடுவோம்  என்று ஆறு மாதத்திற்குப் பிறகு ஒரு வைராக்கியம் வந்தது.

எனக்கொரு பழக்கம் உண்டு. படித்த கதைகள் பிடித்திருந்தால், அதை மடித்து வைத்திருப்பேன். அப்படி வைத்திருந்த எல்லா கதைகளையும் மீண்டும் எடுத்தேன். அதில் வறுகறி பிடித்திருந்தது. உடனே எழுத்தாளர் பெருமாள் முருகன் சாரைத் தொடர்புகொண்டு பேசி சம்மதம் வாங்கினேன்.

படத்துக்கான பட்ஜெட்டில் கேமராவுக்கு மட்டும் பத்து லட்சம் தேவைப்பட்டது. அதற்கு உதவி கேட்கத்தான் ரஞ்சித் சாரைப் பார்க்கச் சென்றேன். கதையைக் கேட்டவர் திரைக்கதையாக எழுதி எடுத்துவரச் சொன்னார். எழுதி கொண்டுபோனேன். இரண்டு நாள் கழித்து, “நீங்க கஷ்டப்பட வேண்டாம். நானே படத்தைத் தயாரிக்கிறேன்.” என்றார்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு, எடிட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதுதான் பெருமாள் முருகன் சாரிடம் படத்தைக் காட்டினேன். அவர் எதுவும் சொல்லவில்லை. அதன் பிறகு ரஞ்சித்துக்குக் காட்டினேன். சில திருத்தங்கள் சொன்னார். அதற்காக மட்டும் ரீ சூட் போனோம். படத்தின் டப்பிங்போது வாய்ஸ் ஓவர் கொடுக்கலாம் என்றார் ரஞ்சித். டப்பிங் பண்ணோம். கடைசியில் எனக்கு அது பிடிக்கவில்லை. அதை எடுத்துவிட்டேன். எனக்குரிய சுதந்திரத்தை ரஞ்சித் கொடுத்தார்.

சேத்துமான் படத்தை இரண்டு மூன்று படவிழாக்களுக்கு அனுப்பினோம். எதிலும் திரையிடத் தேர்வாகவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். பின்னர் கேரள சர்வதேச திரைப்படவிழாவில் தேர்வு செய்யப்பட்டு, திரையிடப்பட்டது. கேரள மக்கள் பெரும் பாராட்டை வழங்கினர். சேத்துமானில் நான் சொல்ல வந்த விஷயத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை உணர்ந்தேன்.” என பெருமூச்சு விட்டவரிடம் எலக்சன் படம் பற்றி கேட்டோம்.

“ஆம்பூரிலிருந்து இருபத்தைந்து கிலோமீட்டரில் உள்ளது அரங்கல் துருகம் கிராமம். அங்குதான் எலக்சன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது உறியடி விஜயகுமார் இரண்டே நாளில் கதையைப் படித்துவிட்டு நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்துக்காக அரங்கல் துருகம் மக்களுக்கும், வேலூர் நாடக நடிகர் சங்கத்துக்கும்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இப்போ மூன்றாவது படத்தை எடுத்து முடித்துவிட்டேன். பெருமாள் முருகன் சார் எழுதிய பூக்குழி நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுத்திருக்கிறேன். இந்தக் கதைக்கான லொக்கேஷன் பார்த்துவிட்டு வரும்போதுதான் பூக்குழி புக்கர் பரிசுக்கான  தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

நான்காவது படத்துக்கான கதை மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கதைக்கான புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன். எனக்கும் தோன்றும் விஷயங்களை படமாக எடுப்பேனே தவிர, பொன்னியின் செல்வன் மாதிரி பிரமாண்ட படம் எடுக்கணும் என்ற ஆசையெல்லாம் இல்லை.”என்றார் யதார்த்தமாக.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com