சந்தோஷ் பிரதாப்
சந்தோஷ் பிரதாப்எஸ்.சரவணன்

சினிமா என்றால் என்னை மறந்துவிடு!

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி, பொதுநலன் கருதி, ஓ மை கடவுளே, சார்பட்டா பரம்பரை, கொன்றால் பாவம், கழுவேர்த்தி மூர்க்கன் ஆகிய திரைப்படங்களின் மூலம் தன்னை ஒரு தேர்ந்த நடிகராக வளர்த்தெடுத்துக் கொண்டவர் நடிகர் சந்தோஷ் பிரதாப். பத்து வருடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவரை அந்திமழைக்காக சந்தித்துப் பேசினோம். விரிவாகப் பேசினார்.

 “அப்பா ராணுவத்தில் இருந்தார். பிறகு வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு ரயில்வே துறையில் சேர்ந்தார். எங்கள் குடும்பம் ரொம்ப சாதாரண குடும்பம்தான் என்றாலும், எதையெல்லாம் சிறப்பாக அளிக்க முடியுமோ அதையெல்லாம் கொடுத்தார்கள். எங்கள் வீட்டில் நான் ஒரு கமர்சியல் ஹீரோ மாதிரி. டான்ஸ், மிமிக்ரி, ஸ்போர்ட்ஸ் என எல்லாவற்றிலும் முதலில் இருப்பேன்.

நான்காவது படிக்கும்போதென்று நினைக்கிறேன். ‘அரபிக் கடலோரம்’ பாட்டுக்கு டான்ஸ் ஆடினேன். அதுதான் என் முதல் மேடை. டான்ஸ் ஆடிவிட்டு கீழே வந்தபோது, என் தோளைத் தட்டி, ‘உனக்கு சினிமாதான் லாயக்கு’ என்றார் என் தலைமை ஆசிரியர். அப்போதிலிருந்தே நடிகர் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது.

இளநிலை பையோடெக், முதுநிலை எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு ஒரு பேக்கிங் அண்ட் மூவிங் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆறு ஆயிரம் சம்பளத்துடன் கன்வேயன்ஸ் அலோவன்ஸ் சேர்த்து ஒரு தொகை சம்பளமாக வரும். அது ரூம் ரெண்ட், சாப்பாட்டுக்கே சரியாக இருக்கும். சேல்சில் இருந்ததால் ஒரு செகண்ட் ஹேண்ட் பல்சர் பைக் வாங்கினேன்.

ஒரு வருடம் கழித்து பாரிஸ் கார்னரில் ஒரு ஷிப்பிங் கம்பெனியில் சேர்ந்தேன். போரூரிலிருந்து பாரிஸூக்கு பைக்கில் செல்வேன். ஒரு சின்ன விபத்தால் ஒரு வாரம் வேலைக்கு போக முடியவில்லை. அதனால், வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

அப்போது நண்பருடைய அப்பா துபாயில் இருந்தார். அவரின் உதவியால் விசிட் விசாவில் துபாய் போனேன். அங்கே ஒரு வேலை கிடைத்தது. அந்த வேலையில் ஒன்றரை வருஷம் போனது. நல்ல வேலை, நல்ல சம்பளம் மட்டுமே நல்ல வாழ்க்கையைக் கொடுத்துவிடாது என புரிந்தது. ஏதோவொன்று எனக்கு அங்கு செட்டாகவில்லை. துபாயில் இருந்து கொண்டு சினிமாவில் முயற்சி செய்வதும் இயலாத காரியம் என்று தெரிந்தது.

 காதலியிடம் சினிமா ஆசை பற்றி சொன்னேன். “சினிமாதான் என்றால் என்னை மறந்துவிடு.” என்று கூறி பிரிந்துவிட்டார். சென்னைக்கு வந்த பிறகு முழுக்கவே சினிமா என்று இல்லாமல் வருமானத்துக்காக அட்வென்சர் மற்றும் ஃபிட்னஸ் தொடர்பான வேலைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கம்பெனியில் சிறிதாக இடம் கேட்டு, சில நிபந்தனைகளுடன் ஃபிட்னஸ் ஸ்டுடியோவை தொடங்கினேன்.

அப்போது நண்பர் ஶ்ரீனி என்பவர், ‘நான் யாரிடமாவது உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்,’என்று கூறி சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இயக்குநர் பார்த்திபன் வந்திருந்தார். அவரிடம் சென்று நண்பர் ஏதோ பேசினார். பார்த்திபன் சார் அங்கிருந்தபடியே என்னை எட்டிப் பார்த்தார். பின்னர் அருகில் அழைத்து,  ‘தமிழா… சென்னையில்தான் இருக்கியா…?’ என்று கேட்டவர், தொலைபேசி எண்ணைக் கொடுத்து,  ‘நாளைக்கு என்ன வந்து பாரு’ என்றார். அப்போது அவர் என்னைப் பார்த்த பார்வைக்கும், நாளை அலுவலகம் வா என்று அழைத்த அழைப்பிற்கும் என்ன அர்த்தம் என்றே தெரியவில்லை

மறுநாள் அவரின் அலுவலகத்துக்குள் நுழைந்தேன். சென்றதும், அவரின் அறைக்கு அழைத்து ஒரு கதை சொல்லச் சொன்னார். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் புனைவாக்கி கூறினேன். அதை காமிராவில் பதிவுசெய்தார். சிறிது நேரம் கழித்து என்னை  ‘காரில் வந்து ஏறுங்கள்’ என்றார். வாழ்க்கையில் முதன் முறையாக விலை உயர்ந்த காரில் (ஆடி ஏ4) பார்த்திபன் சாருடன் பேசிக் கொண்டு செல்கிறேன். இ்ந்த உரையாடல்தான் எனக்கு ஆடிஷன் எனக்கூறியவர், ஒரு டப்பிங் ஸ்டுடியோவிடம் காரை நிறுத்தி,  ‘எனக்கு அரை மணி நேரம் வேலை இருக்கு, அதுவரை நீ எங்காவது போய்விட்டு வா’ என்றார்.

சொன்னது போலவே அரைமணி நேரம் கழித்து அவரே போன் செய்தார்.  ‘நீ இந்தப் படத்தில் இருக்குற’ என்று சொல்லி செக்கை நீட்டினார். என்னால் நம்பவே முடியவில்லை. காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு,  ‘உங்களிடம் உதவி இயக்குநராக சேர்ந்து கொள்ளவா?’ என்று கேட்டேன், சரி என்றார். பிறகு அவரின் பழைய அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ளச் சொன்னார். நான் படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பது கடைசி வரை தெரியாது. படப்பிடிப்புக்குச் செல்லும்போதுதான் நான் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பது தெரிந்தது. படத்தின் இசை வெளியீடு நடந்தது. அதற்கு என்னுடைய அப்பா – அம்மா, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சென்றிருந்தேன். என் அப்பா – அம்மாவிடம் பேசிய பார்த்திபன் சார்,  ‘உங்கள் மகன் சிறப்பாக நடித்திருக்கிறான். தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்திற்கு வருவான்’ என்று பாராட்டியது என் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாது.

கதை திரைக்கதை வசனம் மற்றும் இயக்கத்திற்குப் பின்னர் மூன்று வருட இடைவெளி. ஒரு நடிகனாக இருந்தால் மட்டும் போதாது. இங்கு நம்மை விளம்பரம் செய்து கொள்ளவும் தெரிய வேண்டும். முதல் படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் தேடி வரும் என்று நினைத்தேன், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலாளர், பி.ஆர்.ஓ. எல்லாம் வேண்டும் என்று அப்போது தெரியவில்லை.

பின்னர் பார்த்திபன் சார் மூலமாகவே இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் ‘கண்ணதாசன்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தை பாரதிராஜா தயாரித்தார். மனோஜ் பாரதிராஜாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் எனக்கு ஆர்.ஜே. கதாபாத்திரம். படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரம் நடைபெற்றது. பிறகு இயக்குநர் தரப்பிற்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பில் படம் அப்படியே நின்றுவிட்டது. படம் நின்றாலும், அகத்தியன் சாரும் பாரதிராஜா சாரும் அழைத்துப் பேசினார்கள். நான் படத்தில் இருப்பதாக உறுதிப்படுத்தினார்கள். அவர்கள் சொல்லியும் சில வாய்ப்புகள் வந்தன, எதுவும் நடக்கவில்லை.

அந்த சமயத்தில் சோசியல் மீடியாவில் கணக்குகள் தொடங்கினேன். அதன் பிறகு, பேஸ்புக் மெசேஜ் மூலமாக கிடைத்த பட வாய்ப்புதான் “தாயம்”. அதைத் தொடர்ந்து வந்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முனைந்தேன். எந்தப் படம் ஜெயிக்கும்; எந்தப் படம் தோற்கும் என்பதை கணிக்கவே முடியாது என்பதால் தொடர்ந்து நடித்தேன். நடிப்பைவிட விளம்பரம் ரொம்ப முக்கியம் என்பதை போகப்போகத்தான் புரிந்து கொண்டேன்.

இதற்கிடையில் இயக்குநர் ரஞ்சித் பழக்கம் ஏற்பட்டிருந்தது. முறை விஜய் டி.வி. விருது வழங்கும் விழாவுக்கு சென்றதிலிருந்து ரஞ்சித் அண்ணன் பழக்கம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் வாய்ப்புக் கேட்டுக் கொண்டே இருப்பேன். அவரும் ”பண்ணலாம்டா.. கண்டிப்பாக பண்ணலாம்” என்பார். எனக்கு பாக்ஸிங் தெரியும் என்பதையும், கட்டுமஸ்தான உடல்வாகு இருப்பதையும் யாரோ சிலர் ரஞ்சித் அண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அதனால் சார்பட்டாவில் ராமன் பாத்தி்ரம் கிடைத்தது. பலருக்கு வட சென்னை பாஷை பேச வராது என்பதால் படத்துக்கு நல்ல பயிற்சி அளித்தார்கள். எனக்குப் பூர்வீகம் அரக்கோணம் என்பதால் எனக்கு இயல்பாகவே வட சென்னை வழக்கு நன்றாக பேச வரும்.

பத்து தல திரைப்படத்தில் சிம்புவுடன் இரண்டே இரண்டு காட்சிகளில்தான் நடித்தேன். ஆனாலும் இருவரும் ஃபிட்னஸ், ஆன்மீகம் பற்றி பேசிக்கொண்டிருப்போம். அவர் என்னிடம் ஃபிட்னஸ், ஆர்கானிக் உணவுகள் பற்றிக் கேட்பார். நான் அவரிடம் அவருடைய ஆன்மீக வாழ்க்கை தொடர்பாக கேட்பேன்.

“உங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நீங்கள் பெரிய ஸ்டாராக வந்திருக்க வேண்டும். ஏன் நீங்கள் நிறைய இடைவெளி எடுக்கிறீர்கள்” என்று கேட்டேன். அவர் சற்று யோசித்துவிட்டு, அதெல்லாம் எதற்கு என்று எதிர்க்கேள்வி கேட்பார். அவர் தற்போது தன்னை discovery mode-ல் Explore செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

கொரோனா சமயத்தில கோவளத்தில் நண்பர் வீட்டில் தான் தங்கியிருந்தேன். அவருக்கு திருக்கழுக்குன்றத்தில் ஏழு ஏக்கர் நிலம் இருந்தது. அதை சுத்தம் செய்து, 200லிருந்து 300 வரையிலான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கத் தொடங்கினேன். செயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல், பஞ்சகாவியம் போன்ற உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்தேன் அது ஒரு நல்ல அனுபவம்.

ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பதற்கு ஆரம்பத்தில் இருந்தே வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன. பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்பதற்கே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், செல்லவில்லை. சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தது. பிசாசு 2 படத்தின் சூட்டிங் பணிகள் இருந்ததால் போக முடியவில்லை.

இது போன்ற டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றவர்கள் அடைந்த புகழைப் பார்த்தேன். அதனால்தான் குக் வித் கோமாளியில் கலந்துக் கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்தான் இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து. என் பெயரைச் சொல்லி, என்னை அடையாளம் காண்பதும் குக் வித் கோமாளிக்குப் பின்னர் தான் அதிகமாகி இருக்கிறது என்பேன்.

கழுவேர்த்தி மூர்க்கனில் நான் நடித்த பூமிநாதன் கதாபாத்திரம் ரொம்ப தனித்துவமானது. அந்த ரோல் மிகவும் வலிமையானதாக இருந்தது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிசாசு 2- திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் உடன் பணியாற்றியபோது அவரிடம் கற்றுக் கொண்ட மிக முக்கியமான விசயம், ’விதிகளை உடைப்பது’தான். பொதுவான விதிகளை எப்போதும் உடைக்க விரும்புவார் மிஷ்கின். ‘நீங்கள் எல்லாம் நடிகர்கள். உங்களுக்குள் சில யோசனைகள் இருக்கும். ஆனால், அதெல்லாம் எனக்கு வேண்டாம். நான் என்ன கேட்கிறேனோ அதை மட்டும் எனக்கு செய்து கொடுத்து விடுங்கள’ என்று ஆரம்பத்திலேயே சொல்லி விடுவார். ரொம்ப நல்ல மனுஷன். மிஷ்கின் குழந்தை மாதிரி.

அரண்மனை-4, வெளியாக இருக்கிறது.. இயக்குநர்கள் திரு, சசி ஆகியோர் இயக்கத்தில் நடித்து வருகிறேன். ’மூன்றாம் கண்’ போஸ்டர் ரீலிஸ் ஆகியிருக்கிறது. இயக்குநர்கள் தூங்காவனம் ராஜேஷ், நாகா ஆகியோர் இயக்கத்தில் இணையத் தொடர்களில் நடிக்கிறேன். ஆண்ட்ரியா, அஞ்சலியுடன் சேர்ந்து நடிக்கிறேன். ஆஷிப் அலியுடன் சேர்ந்து மலையாளப் படம் ஒன்றில் நடித்து வருகிறேன். டொவினோ தாமஸ் உடன் சேர்ந்து கலா என இன்னொரு மலையாள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தெலுங்கில் பேசிக் கொண்டு இருக்கிறோம்,’’ என முடித்தார் சந்தோஷ் பிரதாப்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com