‘ஏறி இறங்காத நிறுவனமே இல்லை’ - குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகர்

‘ஏறி இறங்காத நிறுவனமே இல்லை’ - குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகர்

இனிமே நமக்கு வாழ்க்கையில எதுவுமே நல்லது நடக்கப்போறதில்லை. அவ்வளவுதான் நாம முடிஞ்சுட் டோம்னு நினைச்சு கண் கலங்கி நிக்குறப்ப திடீர்னு ஒருத்தர் நம்ம கையைப் புடிச்சுட்டு நான் இருக்கேண்டா. என் கூட வான்னு நம்மள அடுத்த கட்டத்துக்கு அழைச்சுட்டுப் போவாங்க. அப்படிப்பட்டவர்தான் என்னோட புரடியூசர் அண்ணன் யுவராஜ்' நெகிழ்வுடன் தொடங்குகிறார் விநாயக் சந்திரசேகர். இரு வாரங்களுக்கு முன்பு வெளியாகி பரவலான கவனிப்பையும் பரபரப்பான வெற்றியையும் குவித்துள்ள ‘குட்நைட்' படத்தின் இயக்குநர்.

‘இந்தக் கதையை ரெடி பண்ணிட்டு நான் ஏறி இறங்காத கம்பெனி இல்ல. ஆளுக்கொரு காரணத்துக்காக கதையை ரிஜக்ட் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல ரொம்ப நொந்துட்டேன். அப்பதான் யுவராஜ் அண்ணன் கிட்ட ‘அண்ணே இது வொர்க் அவுட் ஆகுற மாதிரி தெரியலை. நான் பழையபடி அசிஸ்டெண்ட் டைரக்டராவே வேலைக்குப் போயிடுறேன்'னு சொல்றப்ப எனக்கு அடக்க முடியாம அழுகை வந்துடுச்சி. உடனே அவர், இதை நான் படமா பண்றேண்டான்னு அணைச்சுக்கிட்டார். அப்படி சொல்றப்ப அவர்கிட்ட நயா பைசா கிடையாது. ஆனா ஒரு முதல் பட டைரக்டருக்கு இவ்வளவு வசதிகள் செஞ்சு தருவாங்களான்னு ஆச்சரியப்படுற அளவுக்கு பிரமாதா எனக்குப் பண்ணிக்கொடுத்தார்' என்கிற விநாயக் ‘குட்நைட்‘ கதை உருவான கதையை சொல்ல ஆரம்பித்தார்.

‘என்னுடைய பெரிய அண்ணன் பயங்கரமாக குறட்டை விடுவார். அவரை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் இந்த கதை எழுதினேன்.

2018இல் இந்தக் கதையை எழுதினப்போது இதை ஒரு குறும்படமாத்தான் பண்ண முடியும்னு நினைச்சேன். அந்த எண்ணத்தை உடைச்சவர் அண்ணன் நடிகர் ரமேஷ் திலக்.

சினிமாவுக்கு என்று சிலதெல்லாம் செட் ஆகாது, பார்வையாளர்கள் இப்படி எடுத்தால் பார்க்க மாட்டார்கள் என்று நாமே நினைத்துக் கொண்டு பலவற்றை நம் இயல்பு வாழ்க்கையில் இருந்து மாற்றுகிறோம். ஆனால் அதை எல்லாம் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் இயல்பாகவே எடுத்ததுதான் இந்தப் படம். இதை கதையாக எழுதும் போது பெரிய சவால் இல்லை. ஆனால், படமாக எடுக்கும் பொழுது சில விஷயங்கள் சவாலாக இருந்தது. கதை எழுதிய போதே கிட்டத்தட்ட பதினைந்து முறை எழுதி இருந்தோம்.

படமாக ஒவ்வொரு காட்சியிலும் வெவ்வேறு கோணங்கள் தேவைப்பட்டது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதே போல, கதையின் நாயகனான மோட்டார் மோகன் என்கிற மோகன் கதாபாத்திரம் நம்மில் ஒருவராக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். இந்த கதாபாத்திரத்தை பேப்பரில் எழுதும் பொழுது எனக்கும் அந்த கதாபாத்திற்கும் இடையேயான உரையாடலாக தான் இருந்தது. மோகனை திரையில் பார்ப்பவர்கள் யாரும் நம்மில் ஒருவராக கனெக்ட் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

பொதுவாக சினிமாவுக்கு என்று சில விஷயங்களை தவிர்த்துவிட்டு தான் படமாக கொண்டு வருகிறோம். அதெல்லாம் இல்லாமல்தான் இந்த படத்தை எடுத்தேன் அதில் கதாநாயகனின் அம்மா மருமகளிடம் குழந்தை பற்றி கேட்பது, தங்கை கதாபாத்திரம் அண்ணனிடம் தன் காதலனுடன் தனிமையில் இருந்தேன் என்று கூறுவது போன்ற பல ஸ்டீரியோடைப் காட்சிகளை உடைத்தது பற்றி பலரும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்கள்.

குறிப்பாக சமையல் என்பது பெண்களுக்கு மட்டும் என்று இங்கு பொய்யாக கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அதையெல்லாம் உடைத்து தன் மனைவிக்காக மோகன்தான் சமைத்து கொடுப்பான். அதேபோல பெண் பார்க்க வரும் காட்சியில் மோகன்தான் அங்கு குடும்பத்தில் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அமர்வான். இதுபோன்ற சில காட்சிகளை கவனமாக சேர்த்தோம். சில காட்சிகள் அந்த கதைக்கு தேவைப்பட்டது. அதனால், கதை போகிற போக்கில் அப்படி அமைந்துவிட்டது.

இந்தப் படத்தில் பலருக்கும் பிடித்த ஒரு கதாபாத்திரம் அந்த நாய்க்குட்டியினுடையது தான். அதை நடிக்க வைத்ததில் பயிற்சியாளர் சிந்து மோகனின் பங்கு மிகப் பெரியது. இதற்கு சரியான பயிற்சி கொடுத்து காத்திருந்து காட்சிகளை படமாக்கினோம். ரூமிற்குள் வருவது, போவது, அது கதாநாயகனை பார்ப்பது என ஒரு கதாபாத்திரத்திற்கு போல அந்த நாய்க்குட்டிக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எழுதினேன்.

கிளைமாக்ஸில் வரும் அலுவலக காட்சி என்னுடைய கோபத்தின் வெளிப்பாடுதான். சமீபத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியராலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பார். இத்தனைக்கும் அந்த ஆசிரியர் அந்த பள்ளியில் ‘துன்புறுத்தலுக்கு எதிரான குழு' உறுப்பினராக இருப்பார். இதுபோன்ற விஷயங்கள் என் அடிமனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதை உரக்க சொல்லும் விதமாக காட்சி அமைக்க வேண்டும் என்பது முதல் விஷயமாக இருந்தது. அதேபோல, இதை ஹீரோதான் முன்னெடுத்து பேச வேண்டும் என்று காட்சி அமைக்கவில்லை. எதார்த்தத்தில் பெண்கள், ஆண்கள் என யாராக இருந்தாலும் சரி, எதிர்ப்பு மனநிலையைத் தெரிவிக்கும்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் வேறு மாதிரி எதிர்வினை செய்வார்கள். அந்த சூழலில் மோகன், வேலை என எதுவுமே எனக்கு வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுவான் என்பதால்தான் அவன் பேசுவது போல அமைத்தோம்.

இயக்குநர் விநாயக் சந்திரசேகர்
இயக்குநர் விநாயக் சந்திரசேகர்

 அதேபோல, படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு திருப்தியாகவே வரவில்லை என்பதால் நிறைய மாற்றி எழுதிக் கொண்டே இருந்தோம். பின்பு டீ சாப்பிடும் வேளையில் நடந்த விவாதத்தில் இயல்பாக வந்ததுதான் இப்போது படத்தில் நீங்கள் பார்க்கும் கிளைமாக்ஸ். ரொமான்ஸ் காமெடி கதைகளின் கிளைமாக்ஸ் பொதுவாக இப்படி அமையும் என்பது விதி. அப்படிதான் இந்த கதையும் எங்களை கொண்டு சென்றது. கதாநாயகிக்கு வேலையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. குறட்டை விட்டாலும் பரவாயில்லை. நீதான் வேண்டும் என்ற இருப்பாள். அவனும் கடைசியில் அந்த மனநிலைக்கு வந்துவிடுவான். இப்படி இருவருக்கும் இருக்கும் இந்த ஏக்கம் உடைய வேண்டும் என்பதுதான் கிளைமாக்ஸாக அமைந்தது.

இன்று இப்படத்தின் அபாரமான வெற்றி என்னை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. பார்க்கிறவர்களெல்லாம் பாராட்டித்தள்ளுகிறார்கள்.

 படம் பார்த்த 55 வயது பெரியவர் ஒருவர் ‘இந்தப்படத்துல பார்த்தது அப்படியே என் குடும்பம். ரொம்ப நாளைக்கு அப்புறம் அத்தனை கஷ்டத்தையும் மறந்து மொத்த குடும்பமும் சிரிச்சோம்' என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார். அப்போது, இனி எடுக்கப்போற அத்தனை படங்களுமே வாழ்க்கையோட யதார்த்தம் மாறாம பாத்துக்கணும்னு முடிவெடுத்திருக்கேன். ஒரு நாளும் மசாலா படம் எடுக்கவே மாட்டேன்' என்று உறுதி கொடுக்கிறார் விநாயக் சந்திரசேகர்.

ஜூன், 2023

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com