அம்பேத்கருடன் யாரையும் ஒப்பிட முடியாது

அம்பேத்கருடன் யாரையும் ஒப்பிட முடியாது

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இயக்குநர்கள் அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் வாங்கினவுடன் செய்கிற முதல் காரியம் தடிமன் தடிமனான, முரட்டு இலக்கியப்புத்தகங்கள் வாங்கி, பார்ப்பவர்கள் கண்ணில் பட, தன் அலுவலகத்தில் அடுக்கி வைப்பது. அடுத்து அதை எடுத்துப் படித்தார்களா என்று கேட்பது அபச்சாரம். அக்கூட்டத்தில் தீவிர வாசிப்புப் பழக்கம் உள்ள விரல் விட்டு எண்ணத்தக்க வெகுசில இயக்குநர்களில் ஒருவர் ‘அறம்' என்கிற தரம் வாய்ந்த படம் தந்த கோபி நயினார். ஒரு ஹிட் படம் கொடுத்த பகட்டுகள் எதுவுமின்றி மிகவும் எளிமையாக வலம் வருபவர்.

ஒரு நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் ஆண்ட்ரியாவை கதையின் நாயகியாக வைத்து அவர் இயக்கிவரும் பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்புத் தளத்தில், அந்திமழைக்காக சந்தித்த வேளையில்...

உங்களது முதல் படைப்பான‘அறம்‘ வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இவ்வளவு பெரிய இடைவெளி நேர்ந்தது எப்படி? இந்த சமயங்களில் சலிப்பாக உணர்ந்தீர்களா?

முதல் காரணம் எல்லோரையும் ஆட்டிப்படைத்த கொரோனா. இன்னொரு காரணம்...நமக்கு இந்த சமூகத்தின் மேல இருக்கிற நம்பிக்கை. ஒரு சிறந்த திரைப்படம் கொடுத்தா அடுத்தடுத்த படங்களை இந்த சமூகம் நமக்கு வழங்கும்னு நினைக்கிறோம் இல்லையா அந்த நம்பிக்கை. ஆனா சமூகம் இப்ப முழுக்க வணிகம் சார்ந்ததா மாறிடுச்சி. ஆக அந்த நம்பிக்கை அறிவுபூர்வமா சரியானது இல்லைங்குற கசப்பான உண்மைதான் என்னோட அடுத்த பட வாய்ப்பு இவ்வளவு தாமதமானதுக்குக் காரணம்னு நான் நிச்சயமா சொல்வேன்.

இன்னொரு பக்கம், ஆதிக்கவர்க்கத்தை எதிர்க்கிற, அறம் சார்ந்து படைப்பை உருவாக்குகிற, என்னைப்போன்றவர்கள் திரைத்துறையில் செயல்படுவதை எதிர்க்கிற கூட்டம் ஒண்ணு இன்னும் இருக்கவே செய்யுது. அவங்க சூழ்ச்சிகளும் ஒரு முக்கியக் காரணம்.

இடையில் நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்ட ‘அறம் 2‘ தொடங்கி, சித்தார்த்துடன், ஜெய்யுடன் என்று சில படங்கள் அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டன... என்னதான் நடந்தது?

இந்தக் கேள்விக்கு பதிலும் மேல சொன்னதுதான். எனக்கு எதிரா செயல்படுறவங்க... யார் இந்தக் கலைத்துறையில இருக்கணும் யார் இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ற இடத்துல இருக்காங்க. அவங்களாலதான் என்னோட சில முந்தைய படங்கள் துவங்குறது... நிக்குறது... அடுத்து இன்னொரு படம் துவங்குறது நிக்குறதுன்னு ஆச்சு.

எனக்கு ‘அறம்‘ படத்துலயே கூட இந்தப் பிரச்னை இருந்துச்சி. ஆனா அப்ப நயன்தாராங்குற ராட்சசி பக்கபலமா இருந்தாங்க... அவங்களுக்கு முன்னால இந்த கோபி டைரக்டரா ஆகிடக்கூடாதுங்குறங்கவங்க எண்ணம் பலிக்கல.

நயன்தாரா இப்பவும் உங்களுடன் தொடர்பு எல்லைக்கு உள்ளே உள்ளாரா? ‘அறம் 2‘ நடைபெற சாத்தியம் உள்ளதா??

நிச்சயமா ‘அறம் 2‘ நடந்தே தீரும்.அது என் கனவு. எனக்கு மட்டுமல்ல இயக்குநர்கள் எல்லாருக்குமே நயன்தாரா மேடம் கூட ஒரு படம் பண்ணிரமாட்டோமான்னு நிச்சயம் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவு எனக்கும் இருக்கு.

மறுபடியும் நாயகியை மையமாக வைத்து படம்? குறிப்பிட்ட காரணம் உண்டா?

இதை சாக்கா வச்சு பெண் விடுதலைக்கான ஆள் நான்னு யாரும் நினைச்சிடவேண்டாம். அடுத்த பட வாய்ப்பும் அப்படிப்பட்ட ஒரு கதைக்குதான் கிடைச்சதுங்குறதுதான் உண்மை. ஆனா இன்னொண்ணும் சொல்லணும். என்னுடைய இயல்புல பெண் சார்ந்த கதைகள் நிறைய இருக்கு. அரசியல் ரீதியான கதைகள் பண்றதுக்கு ஆண்களை விட பெண்கள் இன்னும் பொருத்தமானவங்கங்குறது என்னோட அபிப்ராயம்.

தமிழ்சினிமாவில் பட்ஜெட்டில் 90 சதவிகிதத்தை கதாநாயகர்கள் சம்பளமாக வாங்கிவிடுவதால் படத்தின் தரம் குறைகிறது. அதனால் அண்டை மொழிப்படங்கள் தமிழ்சினிமாவை முற்றுகையிட ஆரம்பித்துவிட்டன என்று சில குரல்கள் ஒலிக்கத்துவங்கியிருக்கின்றன?

இதுல குறிப்பிட்ட நடிகர்களைக் குறை சொல்ல முடியாது. உலக சினிமா சந்தை முதலாளிகள் கையில இருக்குது. ஆனா இந்திய சினிமா சந்தை எப்பவுமே நடிகர்கள் கையிலதான் இருக்குது. நடிகர்கள் தனக்கான ரசிகர்களைத் திருப்திப்படுத்த மட்டுமே படம் எடுக்குறப்ப வணிக சினிமா மட்டும்தான் ஜெயிக்கும்.

நல்ல சினிமா ஜெயிக்கணும்னா கதைகளை முன்னிறுத்திய நல்ல, மக்களுக்கான சினிமா வரணும். அதன் மூலமா மக்களுடைய ரசனையை மேம்படுத்துறதுதான் இதுக்கு ஒரே முடிவு. மக்கள் ரசனை மேம்பட ஆரம்பிக்கிறப்போ சினிமா நடிகர்கள் பிடியிலிருந்து விட்பட்டு நல்ல கதைகளின் பிடிக்குள்ளே வந்துடும். அப்ப நடிகர்களுக்கு கதைங்குறது போயி, கதைக்கு நடிகர்கள்னு நிலைமை மாறிடும்.

ஆண்ட்ரியாவை வைத்து தற்போது இயக்கிவரும் படம் குறித்து கொஞ்சம் பகிர்ந்துகொள்ளலாமா?

இப்ப இயக்கிக்கிட்டிருக்கிற படம் பத்திப் பேசுறதுக்கு தயாரிப்பு நிறுவனத்தோட அனுமதி வாங்கணும். அப்பதான் இந்தப் படத்தோட கதை மத்த சமாசாரங்கள் பத்திப் பேச முடியும். ஆண்ட்ரியா முன்னணி பாத்திரத்துல நடிக்கிறாங்க. இதுவும் ‘அறம்‘ மாதிரியா தரமான படமாவே இருக்கும்னு உறுதியா நம்பலாம்.

பிரதமர் மோடியை பாபாசாகேப் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா வழங்கிய முன்னுரைதான் தற்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அம்பேத்கரோடு நீங்க யாரை வேண்டுமானாலும் ஒப்பிட்டுப் பேசலாம். அது உங்க பேராசை. உங்களுக்கான முகமூடி. ஆனா உண்மையில அம்பேத்கரோடு இந்தியாவில் ஏன் இந்த உலகத்தில் கூட யாரோடும் இணைத்துப்பேச முடியாது. ஏன்னா அவர் உண்மையான ஜனநாயகவாதி.

இளையராஜா முன்னுரை வழங்கிய விவகாரத்தைப் பொருத்தவரை முன்னுரை கேட்டவர்களுக்கும் கொடுத்தவருக்கும் நடுவில் என்ன நடந்ததுங்குறதுதான் ஆராயப்படவேண்டிய விசயம்.

மே, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com