இயக்குநர் முத்துகுமார்
இயக்குநர் முத்துகுமார்

இணையத் தொடருக்கு ஆயுள் அதிகம்!

’அயலி’ முத்துகுமார்

வெளிநாட்டுத் திரைப்படங்களோடு தொலைக்காட்சி இணையத் தொடர்களையும் அதிகமாகப் பார்ப்பவன், நான். முன்னெல்லாம் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க்கில் சேகரித்துவைத்து பார்ப்போம். இப்போது டோரண்ட் போல தொழில்நுட்ப வளர்ச்சியால் வந்த புதிய வசதிகள் இன்னும் எளிமையாக்கிவிட்டன. வெளியான அடுத்த நொடியில் நாம் விரும்பும் திரைப்படங்களைப் பார்க்க முடியும்.

நான் உதவி இயக்குநராக இருந்தபோது பார்த்த மணி ஹெய்ஸ்ட், ப்ளாக் லிஸ்ட், ஷர்லாக் ஹோம்ஸ் போன்ற பல தொடர்கள் எனக்குள் ஒரு புதிய திறப்பை ஏற்படுத்தின. அவர்கள் எப்படியான கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எப்படி திரைக்கதையாக மாற்றுகிறார்கள் என்று கவனித்தேன். தொலைக்காட்சித் தொடர்களையே திரைப்படம் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியாகத் தயாரித்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்டிலும் எடுத்திருப்பார்கள். அந்த உத்தியைத்தான் கைக்கெள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் எனக்கு ஏனோ இணையத் தொடர் இயக்கவேண்டும் என்கிற முனைப்பு இருந்ததில்லை. காரணம், இங்குள்ள சூழல்! 

அயலி, முதலில் திரைப்படத்துக்கான கதையாகத்தான் உருப்பெற்றது. இந்தக் கதையை நான் உதவி இயக்குநராக வேலைபார்த்த யுவராஜ் அழகப்பன் சாரிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது என்றாலும், “இரண்டரை மணி நேரத்துக்கு இந்தக் கதையைப் படமாக எடுக்க முடியுமா?' எனக் கேட்டார். அவரின் உதவியால் பல தயாரிப்பு நிறுவனங்களுக்குக் கதை சொன்னேன். பின்னர், நண்பர் ஒருவரின் வழியாக ஒளிப்பதிவாளர் ராம்ஜி சாரிடம் கதையைச் சொன்னேன். அவர் கதையில் சில திருத்தங்களை சொன்னார். அதசெய்துகொண்டிருக்கும்போதே, ராம்ஜி சாரிடமிருந்து  சேர்ந்து வேலைபார்க்கலாமா என்று அழைப்பு. நான் எழுதிய கதை மீது எனக்கு அப்போதுதான் நம்பிக்கை வந்தது. நண்பர்கள், ராம்ஜி சார் சொன்ன திருத்தங்களைச் செய்ததால் கதை மேலும் நீளமானது.

 “அயலி கதையை இணையத் தொடராகப் பண்ண லாம்னு  ஜீ5 கேட்குறாங்க. அதை தொடருக்கானதாக மாற்ற முடியுமா?' என்று மீண்டும் ராம்ஜி சார் கேட்டார்.

அப்போது, ஒரேயொரு இணையத் தொடர் கூட தமிழில் வந்திருக்கவில்லை. எனக்கு கொஞ்சம் தயக்கம். இதனால், நமக்கு எதிர்கால வாய்ப்புகள் பாதிக்கப்படுமா? இயக்குநராக நம்மை ஏற்பார்களா? என்று.

ஆனால், நண்பர்களும், தெரிந்தவர்களும் இணையத் தொடர் இயக்குவது நல்ல வாய்ப்பு என்று நம்பிக்கை ஏற்படுத்தினார்கள். என்னுடைய விருப்பத்தைவிட, கதைக்கு எது சரியாக இருக்கும் என்று யோசித்தேன்.

சமூகத்தால் கற்பிக்கப்பட்டுள்ள பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் மைதிலியின் வாழ்க்கையும், அந்த கற்பிதங்களுக்கு வெளியே யோசிக்கும் அயலியின் வாழ்க்கையும் என்ன ஆனது? அவர்கள் இருவரின் கதைகளையும் ஒரே நேரத்தில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு இணையத் தொடர்தான் சரி என்ற முடிவுக்கு வந்தேன்.

ராம்ஜி சார் மூலமாக ஜீ5- க்கு கதையைச் சொன்னேன். அதன் தென்மண்டல தலைமை அதிகாரி சுஜு பிரபாகரனுக்குக் கதை பிடித்திருந்தது. அதன் பிறகு, கொஞ்சம் கதாபாத்திரங்களை விவரித்து எழுதினேன். ஒவ்வொரு எபிசோடு முடியும்போது ஒரு மன நிறைவையும், அடுத்த எபிசோடு மீதான எதிர்பார்ப்பையும் உருவாக்க. கதையில் சில மாற்றங்கள் செய்தேன். உடனே படப்பிடிப்புக்குச் சென்றோம்.

போலியோ சொட்டு மருந்து போடும் காட்சியில், மதுரைப் பெண் ஒருவர் நடித்தார். அவருக்கு கதையைப் பத்தி எதுவுமே தெரியாது. ஆனால், எடுத்த காட்சியைப் பார்த்து, தனக்கு பதினாறு வயதில் திருமணமாகிவிட்டதாகச் சொல்லி ஆதங்கப்பட்டார். இதே மாதிரி பலரும் சொன்னார்கள்.

இணையத் தொடருக்கு கால அளவு அதிகம் என்பதால், நாம் நினைத்த எல்லாவற்றையும் சொல்லிவிட முடியும். இது நாவல் மாதிரி. எல்லா கதாபாத்திரங்களின் வழியாகவும் கதை சொல்ல முடியும். மனித உணர்வுகளை யதார்த்தமாகக் காட்சிப்படுத்த முடியும். ஆசுவாசமாகக் கதை சொல்லலாம். ரசிகர்களின் மனதைத் தொடும் அளவுக்குக் கதை பண்ணலாம். இதில் பெரிய மாறுபாடு என்னவென்றால், பக்கம் பக்கமாக கதை எழுத வேண்டும். நிறைய உழைக்கவேண்டும்.

பொதுவாக இணையத் தொடர் என்பது தனியாக அமர்ந்து பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதனால், தனி மனிதர்களின் மனதை ஆழமாகத் தொடவெண்டும். வெற்றிமாறன் ஒரு முறை “The more ethnic you become, the more international your film becomes.”என்று சொன்னதாக ஞாபகம். அதை அயலியில் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இந்தத் தொடர் ஒவ்வொருவருக்கும் நெருக்கமானதாக இருந்தது. பெண்கள், குழந்தைகளுக்கு நடக்கின்ற இருண்ட பக்கங்களைப் பேசியதால், இன்றுவரை அயலி பார்த்துவிட்டு என்னிடம் பேசுபவர்கள், அவர்களின் கதைகளைச் சொல்கிறார்கள். தொடர் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது இன்னும் அயலியைப் பார்த்துவிட்டு பேசுகிறார்கள். திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு அப்படியான வாய்ப்பு கிடையாது. இணையத் தொடருக்கு ஆயுள் அதிகம்.

இன்று எல்லோர் கையிலும் செல்போன் இருக்கிறது. அவரவர் பாணியில் ஏராளமாக புதுப்புது படைப்புகளைக் கொடுக்கிறார்கள். இதில் எது வித்தியாசமாக இருக்கிறதோ அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இப்படியான அம்சங்களைத்தான் சினிமாவிலும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

தியேட்டருக்கு ரசிகர்களை வரவைப்பது கடினம். அப்படி வந்துவிட்டால்,பெரும்பாலும் முழு படத்தையும் பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள். ஓ.டி.டி. ரசிகர்கள் அப்படி இல்லை. அவர்களை முழுமையாக உட்கார வைப்பதுதான் கடினம்.

செல்போனில் தொந்தரவு செய்யக்கூடிய அம்சங்கள் அதிகம். அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற மாதிரியான கதைகளை நாம் கொடுக்க வேண்டும்.

இணையத் தொடரை இயக்குவதால், அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காது என்பதில்லை. இணையத் தொடர் எடுத்த எல்லா இயக்குநர்களும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கும் பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

அயலி- மக்களும் நண்பர்களும் கொடுத்த வாய்ப்பு என்பதால், அடுத்த படம் அயலியைவிட மேம்பட்டதாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன். ஒரு கதையை அழகியலாகப் படமாக்கிவிட முடியும்; கருத்தியலாகப் பண்ணுவதுதான் கொஞ்சம் கஷ்டம். ஆனால், படத்தைக் கருத்தியலாகச் செய்யத்தான் எனக்கு பிடித்திருக்கிறது.

அடுத்து ஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான முயற்சியில் இருக்கிறேன். ஏற்கெனவே எழுதி வைத்திருந்த கதைகளில், சிலவற்றைத் திரைப்படமாக எடுத்துவிட்டு, அதை விரிவுபடுத்தி இணையத் தொடராக எடுக்கலாம் என்கிற யோசனையும் இருக்கிறது.

கதை என்பது பெருங்கடலின் ஒரு துளி. நாம் ஒரு துளியைத்தான் காட்டுகிறோம். அது கடலையே பார்த்த உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதுதான் சினிமாவின் நுட்பமே!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com