இனிமே என் ஆபீஸ் பக்கமே வராதே என்றார் மிஷ்கின்! - காளி வெங்கட்

இனிமே என் ஆபீஸ் பக்கமே வராதே என்றார் மிஷ்கின்! - காளி வெங்கட்

சுமார் 15 வருஷங்களுக்கு முன்னால, சினிமாவுல தீவிரமா வாய்ப்பு தேடிக்கிட்டிருந்த காலகட்டத்துல, பின் பக்கத்துல ‘மாநிறம், உயரம், எடை இத்யாதி விபரங்கள் எழுதி சான்ஸ் தேடுன என்னோட போட்டோ இல்லாத சினிமா கம்பெனியே சென்னையில இருந்திருக்காது. ஆனா...?' என்று மூன்று புள்ளி, ஒரு கேள்விக்குறி வைக்கிறார் காளிவெங்கட்.

‘இறுதிச்சுற்று',‘சூரரைப்போற்று' உள்ளிட்ட பல படங்கள் மூலம் தன்னை ஒரு தரமான குணச் சித்திர நடிகராக அடையாளம் காட்டிய அவர் அண்மையில் வெளியான ‘கார்கி' படத்தில் அசாதாரணமான நடிப்பால் இன்னும் சில படிகள் அடியெடுத்து வைத்திருக்கிறார். ‘கார்கி'க்காக 2022ஆம் ஆண்டுக்கான, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதுப் பட்டியல்ல உங்க பேர் நிச்சயம் இருக்கும்' என்று சில விமர்சகர்கள் அவரது நாக்கில் தேன் தடவும் வேலையையும் ஒரு பக்கம் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மங்களகரமான சூழலில், சென்னையின் ஒரு மழைநேர மாலையில் படப்பிடிப்பின் சிறிய இடைவேளையில் அந்திமழைக்காக தனது கடந்தகால நினைவுகளை பகிர்ந்துகொண்டார் காளி வெங்கட்.

‘கோவில்பட்டி, கழுகுமலைக்குப் பக்கத்துல கத்தாழப்பட்டிங்குற குட்டி கிராமம்தான் என்னோட சொந்த ஊர். அப்பா கொத்தனார். கூடப்பிறந்த மூன்று சகோதரிங்க, ஒரு அண்ணன். சின்ன வயசுல ஊர்த்திருவிழா நாடகங்கள்ல நடிச்ச காரணத்துனால 13 வயசுலயே சினிமாவுல நடிக்கணும்ங்குற ஆசை வந்துடுச்சி.

பத்தாவது முடிச்சவுடனேயே ‘98ல சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்துட்டேன். அண்ணன் ஏற்கனவே சென்னையில பலசரக்குக் கடையில வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அவரோட நானும் பலசரக்குக் கடை வேலையில ஒட்டிக்கிட்டேன்.

சினிமாவுல நடிக்கணும்னு ஆசை இருந்ததே ஒழிய அதுக்கு எப்படி சான்ஸ் தேடுறதுன்னு துளி அறிவு கிடையாது. அதனால பலசரக்குக் கடை, தள்ளுவண்டியில காய்கறி விக்குறது, வீடுகளுக்கு தண்ணி கேன் போடுறதுன்னு வண்டி ஓடிக்கிட்டிருக்கு. இப்படியே ஏழெட்டு வருஷம் ஓடிப்போச்சு.

அந்த சமயத்துல மனசுல என்னைக்காவது ஒருநாள் சினினிமாவுக்குள்ள நுழையணும்னா அதுக்கு நாம கண்டிப்பா சென்னையிலதான் இருக்கணும். அப்படி சென்னையில இருக்கணும்னா சொந்த வீடு இருக்கணும்னு தோணுச்சு.நானும் அண்ணனும் மிருகமா உழைச்சோம். அந்த உழைப்பால வந்த வருமானத்துல அரும்பாக்கத்துல சொந்தமா ஒரு வீடு வாங்குனோம்.

அதுக்கு அப்புறம்தான் இனிமே சினிமாவுல நாம முயற்சிக்கலாம்னு தைரியமே வந்துச்சி. அப்படி என்னோட முதல் முயற்சியைத் தொடங்கின இடம் டைரக்டர் மிஷ்கின் சாரோட ஆபிஸ். ஏன்னா அந்த சமயத்துல மிஷ்கின் சாரோட அசிஸ்டெண்ட் விஜய்ங்குற ஒருத்தர் மட்டும் தான் எனக்கு சினிமாவுல தெரிஞ்ச ஒரே ஆள். அதனால அவங்களோட ஆபிஸ்க்கு தினமும் சளைக்காம போக ஆரம்பிச்சேன். அப்படி நான் நிதமும் வர்றதைப் பாத்த மிஷ்கின் சார் ஒருநாள் ரொம்ப டென்சனாயிட்டார். என்னைக் கூப்பிட்டு ‘இப்பிடி தினமும் என் ஆபிஸ் பக்கம் மட்டும் வந்துக்கிட்டிருந்தா உனக்கு சான்ஸே கிடைக்காது. பல இடங்கள்லயும் தேடு. அதனால இனிமே என் ஆபிஸ் பக்கமே வரக்கூடாது'ன்னு அட்வைஸ் பண்ணி அனுப்பிட்டார்.

அந்த சமயத்துல கருப்பு நம்பியார்ங்குற நடிகரோட அறிமுகம் கிடைச்சது. நடிப்பு வாய்ப்புக்காக தீவிரமா அலையிறவர்ங்கிற முறையில அவர்கிட்ட நிறைய கம்பெனிகளோட அட்ரஸ் இருந்தது. என்கிட்ட டூவீலர் இருந்தது. பரஸ்பர டீலிங்ல என்னோட டூவிலர்ல அவர்கிட்ட இருந்த அட்ரஸ்களுக்கு வாய்ப்பு தேடி அலைய ஆரம்பிச்சோம். காலையில 11 மணி வரைக்கும் வீடுகளுக்கு தண்ணி கேன் சப்ளை. அப்புறம் 11-4 மணி வரைக்கும் வாய்ப்பு தேடுறது. மறுபடியும் 4 மணிக்கு மேல தண்ணி கேன் போடுறதுன்னு சுமார் ரெண்டு வருஷம் ஒரு வாய்ப்பும் கிடைக்கலை. இத்தனைக்கும் அந்த சமயத்துல  சென்னையில இருக்கிற அத்தனை கம்பெனிகள்லயும் என் போட்டோவைக் கொண்டுபோய்ச் சேர்த்துட்டேன். அதாவது எந்த அளவுக்குன்னா ஒரு கம்பெனி ஆபிஸ் பூஜை போடப்போறங்கன்னு தெரிஞ்சா அவங்க வாசல்ல மாவிலைத் தோரணம் கட்டுறதுக்கு முந்தியே என் போட்டோ அங்க இருக்கும். அந்த ரெண்டு வருஷமும் காது வலிக்க வலிக்க கேட்டுச் சலிச்ச ஒரே வசனம்‘ போட்டோவைக் குடுத்துட்டுப் போங்க. சொல்லி அனுப்புறோம்'தான்.

2008. சென்னைக்கு வந்து பத்து வருஷம் ஆச்சி. ஒரு படத்துல கூட தலைகாட்டாத பத்து வருஷம். கஷ்டப்படுறவனுக்கு என்னைக்காவது ஒருநாள் விடிவுகாலம் வந்தே ஆகணும் இல்லையா.விஜயபிரபாகரன்னு ஒரு டைரக்டர் கண்ணுல பட்டேன். படத்தோட பேரு ‘தசையினை தீ சுடிணும்'. இதுதான் நான் நடிச்ச முதல் படம். ஆனா இன்னைக்கு வரைக்கும் ரிலீஸாகாத படம். ‘அட்டக்கத்தி' தினேஷ்தான் ஹீரோ. அப்புறம் ‘ஆடுகளம்' முருகதாஸ் இருந்தார். எனக்கும் ரொம்ப முக்கியமான ரோல். கேரக்டரோட பேரு காளி. அந்தப்படத்தாலதான் வெங்கட்டா இருந்தா நான் காளிவெங்கட்டா மாறுனேன். ஆனா ஒரு வருஷத்துக்கு மேல ஆகியும் அந்தப்படம் ரிலீஸாகலை. பயங்கர அப்செட். அந்த டைரக்டரையே சுத்திச்சுத்தி வர்றேன். ஒருநாள் என்னைக் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணுனார். ‘ நீ ஒரு நடிகன்; ஒரே இடத்துல தேங்கக்கூடாது. போய் மத்த இடங்கள்ல வாய்ப்புத் தேடு'ன்னு சொல்லி அனுப்பி வச்சார். அது மட்டும் இல்ல. இன்னைக்கு நான் இயல்பா நடிக்கிறேன்னா அதுக்கும் அவர் கொடுத்த டிப்ஸ்தான் காரணம்.

இந்தப்படத்துக்கு அப்புறம் எனக்கு சின்னதா ஒரு நட்பு வட்டம் உருவாச்சி. நண்பர்களால் வாழ்க்கையில எவ்வளவு மேஜிக் நடக்கும்னு புரிய ஆரம்பிச்சது. கலைஞர் டிவியில ‘நாளைய இயக்குநர்' நிகழ்ச்சி எனக்கு முக்கியமான திருப்புமுனை. ‘முண்டாசுப்பட்டி‘ ராம்குமார்,‘அயலான்'ரவிக்குமார், நடுவர்களா வந்த சுந்தர்.சி, வெற்றிமாறன்னு நல்ல தொடர்புகள். அவங்க ஒவ்வொருத்தர் மூலமும் பட வாய்ப்புகள்னு மெல்ல வளர ஆரம்பிச்சேன்.

அந்தப் பயணத்துல ‘ராஜா மந்திரி' எனக்கு ரொம்ப முக்கியமான படம். நடிக்கிறப்ப, ஏன் இன்னும்  சொல்லப்போனா படம் ரிலீசானப்ப கூட அந்தப்படத்தோட அருமை எனக்குத் தெரியல. தியேட்டர்கள் சரியா அமையாததால சுமாராத்தான் போச்சி. ஆனா டிவியில போட்ட பிறகு படம் பயங்கர ரீச். என்னோட சொந்த அண்ணனை பாத்த மாதிரியே இருந்தது. படம் பார்த்து கண் கலங்கிட்டேன்னு...இன்னைக்கு வரைக்கும் அந்தப் படத்தைப் பத்தி யாராவது பாராட்டிக்கிட்டே இருக்காங்க. என் கையைப்பிடிச்சுக்கிட்டு அழுதவங்களும் ஏராளம்.

அடுத்து ‘இறுதிச்சுற்று',‘மெர்சல்',‘சூரரைப்போற்று' படங்கள் எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்த படங்கள். போன வாரம் ரிலீஸான கார்கி படத்தைப் பார்த்துட்டு பத்திரிகையாளர்களும் மக்களும்  சொல்ற வார்த்தைகள்... அவங்களைக் கையெடுத்துக் கும்பிட வைக்குது.

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தப்போ என்னோட அதிக பட்சக் கனவே நாலு படத்துல நடிக்கணும். ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்கணும். அதைச் சொந்தக்காரங்க கிட்ட பெருமையா  சொல்லணும்ங்கிறதுதான். ஆனா நான் நேசிச்ச சினிமா இன்னைக்கு மக்கள் கொண்டாடுற ஒரு நடிகனா கொண்டு வந்திருக்கு. இந்த பேரை காலம் பூரா காப்பாத்தணும்ங்கிற பொறுப்பு மனசு முழுக்க நிறைஞ்சு இருக்கு.

ஆகஸ்ட், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com