இப்படிப் பண்றீங்களேம்மா! -ராமரின் கதை

இப்படிப் பண்றீங்களேம்மா! -ராமரின் கதை
Published on

என்னுடைய தாத்தா பெரிய கரகாட்ட கலைஞர், என்னுடைய அம்மா மிமிக்ரி ஆர்டிஸ்ட். மாலை நேரம் ஆனாலே அம்மாவுடைய மிமிக்ரியை கேட்க ஊர் சனமே வீட்டுக்கு வந்திடுவாங்க...

எனக்கு கலை மீதான ஆர்வம் அதிகமானதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாமென்று நினைக்கிறேன்'' என்கிறார் ராமர். விஜய் தொலைக்காட்சி பிரபலமான ராமரை தெரியாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தனது கடின உழைப்பால் வளர்ந்து நிற்கிறார். கலக்கப்போவது யாரு, அது இது எது, ராமர் வீடு, சகல vs ரகள, ராமர் வீட்டுக் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் ராமருக்காகவே பிரபலம்.

‘‘மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள அரிட்டாபட்டி தான் என்னுடைய சொந்த ஊர். அங்கு தான் பிறந்து வளர்ந்தது எல்லாம். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். நான் 1978ஆம் ஆண்டு பிறந்தேன். குடும்பத்தில் நான்காவது பையன் நான். தாத்தாவுடைய பெயர் ராமர் என்பதால் அதே பெயரையே எனக்கும் வச்சிட்டாங்க. எங்க ஐந்து பேருக்கும் ஒரே தங்கச்சி என்பதால், அவளை உள்ளூரிலேயே சொந்தக்கார பையனுக்கு திருமணம் செய்துக் கொடுத்தோம். 

உடன் பிறந்த மற்ற எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் உள்ளூரிலேயே விவசாயம் செய்றாங்க. அப்பா ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. அம்மா தான் எங்க ஆறு பேரையும் வளர்த்தாங்கனு சொல்லலாம். ரொம்ப கஷ்டப்பட்டு தான் எங்களை வளர்த்து ஆளாக்குனாங்க.  நான்கு வருஷத்துக்கு முன்னாடி அவங்களோட இறப்பு என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாது ஒரு நிகழ்வு.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரிட்டாப்பட்டியில் தான் படிச்சேன். அதன் பிறகு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மதுரையில் உள்ள இளங்கோ பள்ளியில் படிச்சேன். ஆறாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நான் தான் ஸ்கூல் லீடர். ஏன்னா, என்னுடைய கையெழுத்து நல்லா இருக்கும். ஸ்கூல்ல எதாவது எழுதுவது என்றால் என்னிடம் தான் ஆசிரியர்கள் கொடுப்பார்கள். எனக்கு நிறையப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக முடியாமல் போய்விட்டது. எப்படியாவது ஒரு டிகிரி படித்துவிட வேண்டும் என்ற எண்ணத் தால் மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பிபிஏ படித்தேன். பள்ளியில் தமிழில் படித்துவிட்டு கல்லூரியில் முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்பதால் நிறைய அரியர் வைத்தேன், எப்படியோ ஒரு வழியாக பிபிஏ முடித்தேன்.

கல்லூரி  படிக்கும் போது, கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வேன். அதேபோல், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் ‘நகைச்சுவை மன்றம்' இருந்தது. டாக்டர் சேதுராமன் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் போன்றவர்கள் தான் நடத்தினார்கள். அந்த  மன்றத்திலிருந்துதான் நிறைய நகைச்சுவை கலைஞர்கள் வந்துள்ளோம். அந்த மன்றத்தில் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவோம். இந்த நிகழ்ச்சியில் நிறைய மாணவர்கள், புது புது கலைஞர்கள் வந்து கலந்து கொள்வார்கள். மதுரை முத்துவும் அங்கு வந்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்.

நான், ரோபா சங்கர் இருவரும் 'நியூ காமெடி பாய்ஸ்' என்ற டீமை வைத்திருந்தோம். ரோபா சங்கர் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நண்பர். நிகழ்ச்சிகளுக்கு வெளியூர்களுக்கு சென்று வந்தால் ரோபா சங்கர் வீட்டில் தான் தங்குவேன்.  ‘கலக்கப்போவது யாரு' முதல் சீசனில் ரோபா சங்கர் தேர்வாகி சென்னை சென்றுவிட்டார். சென்னை சென்றவர் அங்கேயே நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ‘கலக்கப்போவது யாரு சீசன் &2'இல் பங்கேற்பதற்காக ஆடிஷன் சென்றேன், எப்படியும் தேர்வாகிவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.  ரோபோ சங்கர், மதுரை முத்து, அரவிந்த் போன்றவர்கள் இருந்ததால் நிச்சயம் அவர்கள் என்னை பரிந்துரை செய்வார்கள் என்று எண்ணினேன், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இரண்டு முறை ஆடிஷனில் தேர்வாகவில்லை என்பதால், இனி எந்த ஆடிஷனுக்கும் போகவேண்டாம் என்ற விரக்தி ஏற்பட்டது.

அதன் பிறகு, 2007ஆம் ஆண்டு  'கலக்கப்போவது யாரு சீசன்-3'க்காக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆடிஷன் நடைபெறுவதாக நண்பர்கள் வந்து சொன்னார்கள். வேண்டா வெறுப்பாகத்தான் அதுக்குப் போனோம். நானும் நண்பர் ஒருவரும் கலந்துகிட்டோம், அவன் ஆடிசனில் தேர்வாகிவிட்டான், ஆனால் என்னை மட்டும் நைட் 10 மணி வரை அழைக்கவில்லை. இந்த பரபரப்பு  ஒரு பக்கம் இருக்க, கிராமத்துக்கு எப்படிப் போகப்போகிறோம் என்ற அச்சமும் அன்று சேர்ந்து கொண்டது. இரவு எட்டு மணிக்கு மேல் எங்க கிராமத்துக்கு பேருந்து வசதியே கிடையாது.

ஆடிஷன் நடத்தியவரிடம் போய், ‘நானும் என்னுடைய நண்பரும் சேர்ந்து தான் சார் இதுக்கு அப்ளிகேஷன் கொடுத்தோம், அவருடையது வந்துவிட்டது. அவர் ஆடிஷனிலும் தேர்வாகிவிட்டார், என்னுடையது மட்டும் வரவேயில்லை' என்றேன்.  அதன் பிறகு நைட் 11 மணிக்கு நடித்து காட்டச் சொன்னார்கள். நடித்துக் காட்டிவிட்டு, பக்கத்துகிராமம் வரை வரும் பேருந்தைப் பிடித்து வந்து இறங்கி, இரவு 12 மணிக்கு  அங்கிருந்து  ஒத்தையடி பாதையிலேயே நடந்தே  வீடு சேர்ந்தேன்.

ஆடிஷன் முடிச்சிட்டு வந்த பிறகு, விஜய் டிவியில் இருந்து அடிக்கடி அழைத்துப் பேசுவாங்க. 'என்னென்ன காமெடி நிகழ்ச்சிகள் எல்லாம் பண்ணுவீங்க, என்ன திறமையெல்லாம் இருக்கு' எனக்  கேட்பாங்க. அப்போ என்கிட்ட நோக்கியா 1100 என்ற போன் தான் இருந்தது.  டிவியிலிருந்து அழைப்புவந்தால் வயக்காட்டு பக்கமாகத்தான் போய் பேசுவேன். அந்த போன்ல சிக்னல் கூட ஒழுங்கா கிடைக்காது. சிக்னல் கிடைக்கும் இடமாக பார்த்து போனை வைத்திருப்பேன். திடீர்னு ஒரு நாள் என்னை சென்னை வரசொன்னாங்க.   முதல் முறையாக சென்னை போகிறேன் என்பதால் பெரிய பதற்றம் இருந்தது. இரவு முழுக்க தூங்காமலேயே வந்தேன்.

சென்னையில், விஜயகாந்த் மண்டபம் எதிரே தங்குவதற்கு அறை கொடுத்தார்கள். முதல் முறையாக கேமரா முன்னாடி நிற்கும் போது எதுவுமே எனக்கு தெரியல. அப்போது, ‘கலக்கப்போவது யாரு சீசன் 3'க்கு சேகர் சாரும், உமா ரியாஸ் மேடமும் நடுவர்களாக இருந்தார்கள். அவங்க சில விஷயங்களை சொல்லிக் கொடுத்தாங்க. ஸ்டுடியோவில்  ராமர் என்று கூப்பிட்டால் நாலு பக்கமும் திரும்பி திரும்பி பார்ப்பேன். கேமரா எங்க இருக்குனே தெரியாது. ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. போகப்போக அதெல்லாம் சரியாகிடுச்சி.

ஒருவழியா,இதன் முதல் எபிசோடில் வெற்றி பெற்றேன். முதல் எபிசோட் டிவியில் ஒளிபரப்பான போது, நம்மூர்காரன் ஒருத்தன் நடித்தது டிவியில் வருகிறது என்பதற்காக, ஊர்மக்களே கூடி பொது இடத்தில் டிவியை வைத்து நிகழ்ச்சியைப் பார்த்தார்கள் எங்க ஊர்க்காரர்கள்.  அதேபோல் மைக் செட் வைத்து, பட்டாசு வெடித்து பெரிய கொண்டாட்டமாகவே அதை மாற்றினார்கள். அந்த நேரத்தில் நான் ஊரில் இல்லை, நானும் நண்பர் ஆண்ட்ரூஸும் ஒரு நிகழ்ச்சிக்காகக் கொடைக் கானலில் இருந்தோம். பிறகு ஊருக்கு வந்தபோது ஊர் மக்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது.

எனக்கு ஏனோ, வடிவேல் சார் ரொம்பவே பிடிக்கும். ஆனால், ஏன் பிடிக்கும் என்று சொல்லத் தெரியாது. அவர் திரையில் வந்தாலே  சந்தோஷமாகி விடுவேன். அவருடைய உடல்மொழி ரொம்பவே பிடிக்கும். என்னிடம் நிறைய பேர் சொல்லி இருக்காங்க, எனக்கு வடிவேல் சாருடைய உடல் மொழி இருப்பதாக. நாம செய்கின்ற ஒன்றை மக்கள் விரும்புகிறார்கள் என்று நினைக்கும்போதே அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். அதனால தான் இந்த காமெடி நிகழ்ச்சிகளை தொடர்ந்து வித்தியாசமான முறைகளில் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன்னால் நிறைய நிகழ்ச்சிகளுக்கு செல்வேன். அதில் வரும் வருமானம் போதுமானதாக இருந்தாலும் கூட, என்னுடைய மனைவி கிருஷ்ணம்மாள் டீச்சர் என்பதால் அவருடைய வருமானமும் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இருந்தது. என்னுடைய நிகழ்ச்சியை பார்க்கும் என்னுடைய மகள்கள் யமுனா ஸ்ரீ, ஐஸ்வர்யா இருவரும் பல்வேறு ஆலோசனைகளை சொல்வார்கள். ஹரீஷ் ப்ரணவ் என்ற மகன் இருக்கான்.

நிகழ்ச்சிகள் மூலமாக பணம் சம்பாதிக்கிறோமோ இல்லையோ, நிறைய மக்களை சம்பாதித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அதனால நிறைய நிகழ்ச்சிகளுக்கு பணம் வாங்காமலேயே நடத்தியிருக்கிறோம்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முந்தைய நாள் தான் ஸ்கிரிப்ட் கொடுப்பாங்க. ஒருநாள் முழுவதும் ஒத்திகை பார்ப்போம். அதன் பிறகு மேடையில் நேரத்திற்கு தகுந்தது போல் வசனங்கள் பேசிடுவேன். இப்படி பேசும் வசனங்களை பெரும்பாலும் மக்கள் ரசிப்பதுண்டு. மதுரை பகுதிகளில் வள்ளி தெய்வானை நாடகங்கள் நடைபெறும். அந்த நாடகங்களில் கட்டியங்காரன் வேஷம் போடுபவர்கள், மேடையில், பாட்டுப் பாடுவார்கள். திடீரென பாட்டு மறந்துவிட்டால், உடனே வந்து நடனம் ஆடுவார்கள். பாட்டு ஞாபகம் வந்துவிட்டால் மீண்டும் மைக் முன்னாடி வந்து பாடுவார்கள். இந்த கான்செப்ட் வச்சி ‘அது இது எது' நிகழ்ச்சியில் ஒரு நிகழ்ச்சி பண்ணலாம்னு முடிவு செய்தோம். அப்போ ‘ஆத்தாடி என்ன உடம்பு' என்ற பாடல் பயங்கர பிரபலம், அப்படி தான் அந்த பாட்டை தேர்வு செய்து பாடினேன். அது மிகவும் பிரபலமாகிப் போனது.

 ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்ற வார்த்தை என்னை மிகவும் பிரபலப்படுத்தியது. பெரிய பெரிய சினிமா பிரபலங்கள் கூட அந்த வார்த்தையைச் சொல்லும் அளவிற்கு பிரபலமாகிப் போனது. நான் தொடர்ந்து லேடி கெட்டப் போடவே, சினிமாவிலும் அதே கெட்டப்பை கேட்க ஆரம்பித்தார்கள். டார்லிங், காஞ்சனா &2, த்ரிஷா இல்லைனா நயன்தாரா போன்ற திரைப்படங்களில் அந்த கெட்டப்பில் நடித்தாலும், அதற்குப் பிறகு வந்த திரைப்படங்களில் அதுமாதிரி நடிக்க மறுத்துவிட்டேன். சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் ஒரே மாதிரி நடிக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். அதேபோல், என்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் இது  பிடிக்கவில்லை. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்புகிறேன். இப்போ சில படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளேன். நிச்சயம் அதில் சில படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.'' என்கிற ராமர், ‘‘ ஈடுபாடும், மெனக்கெடலும் மட்டுமே ஒருவனை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரும். எல்லோருக்கும் ஒரு நாள் வெற்றி நிச்சயம் காத்திருக்கு, அதற்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்.'' என்கிறார்.

மே 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com