ஜி.எம்.சுந்தர்
ஜி.எம்.சுந்தர்

“இப்பத்தான் எல்லாம் கிடைக்குது!”

ஜி.எம்.சுந்தர்

நடிப்பைத் தொழில்முறையாக கற்றவரும் கூத்துப்பட்டறை, பரிக்‌ஷா போன்ற நவீன நாடகக் குழுக்களில் நடிகராக வலம் வந்தவருமான ஜி.எம்.சுந்தர், கே.பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்' படத்தின் மூலம் தனது திரை வாழ்வைத் தொடங்கியவர். யதார்த்த நடிப்பின் மூலம், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களைப் பார்வையாளர்களின் மனதில் ஆழப் பதிய வைக்கும் அவரை அந்திமழைக்காக சந்தித்துப் பேசினோம்.

 ‘‘நடிப்பில் எதுவும் பெருசா சாதிக்கல; சின்ன பங்களிப்பு தான் செய்திருக்கிறேன். கம்-பேக் ஆர்டிஸ்டாக சக நடிகர்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். இதற்குப் பின்னால் ஹோம் ஒர்க்கும், தன்னம்பிக்கையும் இருக்கின்றது.'' என அலங்காரம் இல்லாமல் பேசத் தொடங்கினார்.

‘‘பள்ளிக்கூடம் படிக்கும் போது நானும் என்னுடைய நண்பன் பாபுவும் சிவாஜி கணேசன் மாதிரி நடித்து, வசனங்கள் பேசுவோம்.

‘என்னை விட நீ தான்டா சிவாஜி மாதிரி ரொம்ப நல்லா நடிக்கிற... ஒரு படத்தில் நீ நடிச்சிட்டா போதும்' என்பான் பாபு. அவனுடைய வார்த்தை தான் எனக்கு இன்று வரை நடிப்பின் மீதான நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

பள்ளி படிப்பு முடிந்தவுடன் அப்பாவின் அறிவுறுத்தலால் சென்னை புதுக் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படித்தேன். நடிப்பைக் கற்றுக்கொள்வதற்கு என்று தனியாக கல்லூரி இருக்கிறது என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். அடையார் திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது என்ற விவரங்களை நண்பர்களிடம் கேட்டுத்  தெரிந்து கொண்டேன்.

பின்னர், இளங்கலை முடித்ததும், அடையார் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கும், நாசருக்கும், அர்ச்சனாவுக்கும் மெரிட்டில் சீட் கிடைத்தது.

கல்லூரியில் வார வாரம் திரைப்படங்களைத் திரையிடுவார்கள். ஒருநாள் அகிரா குரோசோவா&வின் ‘ராஷோமான்' திரையிட்டார்கள். அதில் ‘தொஷிரோ மிஃபூனே' என்ற ஜப்பானிய நடிகரின் நடிப்பு என்னை இரண்டு நாட்கள் தூங்கவிடவில்லை. உலக அளவில் பெரிய பெரிய நடிகர்கள் இருந்தார்கள் என்பதை அப்போது தான் தெரிந்து கொண்டேன்.

திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு, புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்படங்களை எப்படி அணுகுவது என்பது குறித்த ஒரு மாத கால படிப்பைப் படித்தேன்.

சினிமாவில் இருக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பல்வேறு வேலைகளை செய்தேன்.

அரங்க நாடகத்தில்  பணியாற்றுவது நடிகனுக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்பதால் அலையன்ஸ் பிரான்சஸ், அமெரிக்கத் தூதரகம், மேக்ஸ் முல்லர் பவன் போன்ற இடங்களில் நடைபெறும் நடிப்பு பயிற்சிப் பட்டறைகளில், திரையிடல்களில் கலந்து கொள்வேன். அந்த சமயத்தில் ‘கூத்துப்பட்டறை' பற்றி அறிந்தேன். அப்போது கூத்துப்பட்டறையில் தெருக்கூத்து கலைஞர்களும், அமெச்சூர் நடிகர்களுமே இருந்தனர்.

நான் நடிப்பைத் தொழில்முறையாக படித்தவன் என்பதால், கூத்துப்பட்டறையில் சேர்வதற்கு எந்தத் தடையும் இல்லை. அப்போது கூத்துப்பட்டறையின் நாடகங்களை டெல்லி தேசிய நாடகப்பள்ளியின் பேராசிரியர் ராஜேந்திரன் தான் இயக்குவார். அதேபோல், ஞாநியின் பரிக்‌ஷா நாடக் குழுவிலும் நடித்திருக்கிறேன். ஐந்தாறு வருடங்கள் நாடகச் செயல்பாடுகளில் இருந்தேன். அந்த சமயத்தில் ஓவியம், இலக்கியம், புத்தக வாசிப்பு என வாழ்க்கை அடுத்த பரிணாமத்தை எடுத்தது. என்னை நான் வளர்த்துக் கொண்டிருந்த காலம் அது.

இதற்கிடையே, சினிமா வாய்ப்புகளையும் தேட ஆரம்பித்துவிட்டேன். யாரிடமும் பெரிய வரவேற்பு இல்லை. கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்திற்கு வாய்ப்பு கேட்டு அடிக்கடி செல்வேன். திரைக்கதை எழுத்தாளர் அனந்து   பாலசந்தரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

Editorial

அப்படித்தான் ‘புன்னகை மன்னன்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றேன்.

ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பில், முதல் காட்சியே கமல்ஹாசனுடன் இருப்பது போன்றது. அவர் நடனம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராகவும், நாங்கள் மாணவராகவும் இருப்போம். சிங்களத்தில் எழுதப்பட்டிருக்கும் ஓர் அட்டையை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். அதில் புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதப்பட்டிருக்கிறது என்று படித்து சொல்வேன். முதல் படத்திலேயே கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்தது நல்லதொரு தொடக்கத்தைக் கொடுத்தது.

1986&இல்  ‘புன்னகை மன்னன்' திரைப்படத்தின் மூலம் தொடங்கிய எனது திரை வாழ்வு, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு', ‘சத்யா', ‘புலன் விசாரணை', ‘காவலுக்குக் கெட்டிக்காரன்', ‘பொன்னுமணி', ‘ஊருக்கு நூறு பேர்', ‘தொட்டி ஜெயா' என நீண்டது. அதற்குப் பின்னர் ஒரு பதினைந்து வருடகால இடைவெளி. என்னை ஒரு நடிகனாக நிலைநிறுத்திக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்த நேரம் அது. இருப்பினும் நடிப்பு தொடர்பாக நிறைய ஹோம் ஒர்க் செய்தேன். திரைப்பட விழாக்களுக்குச் செல்வது, செமினார்களுக்கு செல்வது என திரைப்படம் குறித்த என்னுடைய அறிவை வளர்த்துக் கொண்டேன்.

 இதற்கிடையே நண்பர்களுடன் சேர்ந்து பிசினெஸ் ஒன்றையும் தொடங்கினேன். ஆரம்பத்திலிருந்தே தொழில் மீது ஆர்வம் இருந்ததால், அது எனக்குக் கைகொடுத்தது. கிட்டதட்ட இருபத்தேழு வருடங்களாக பிஸினஸ் செய்துகொண்டு இருக்கிறேன்,'' என்றவர், தன்னுடைய  ‘கம்-பேக்' எப்படி நிகழ்ந்தது என்பதை தலைமுடியைத் தள்ளிவிட்டுக் கொண்டே சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஜி.எம்.சுந்தர் என்ற நடிகருக்கு யாராவது மணி கட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இந்த நம்பிக்கையோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கையில், நிறைய புதிய இயக்குநர்கள் வித்தியாசமான கதைக் களம் கொண்ட படங்களை எடுக்கத் தொடங்கினர். அப்போது ‘சூது கவ்வும்' படத்தைப் பார்த்தேன். அது எனக்கு மிகுந்த உற்சா கத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் இயக்குநர் நம்மை மறு அறிமுகம் செய்து வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து நண்பர்களின் மூலம் நலன் குமாரசாமியை சந்தித்தேன்.

அவர் ஒருநாள் என்னிடம் ஸ்கிரிப்டை கொடுத்து நடித்துக்காட்டச் சொன்னார், தயக்கத்துடனே. நடித்துக் காட்டியதும், அவருக்கு பிடித்து விட்டது.

‘‘இப்போது பேசிய அதே டயலாக்கை மணிரத்னம் படத்தில் பேசி நடித்தால் எப்படிப் பேசுவீர்கள்'' என்றார். அதே டயலாக்கை நிறுத்தி நிறுத்திப்பேசிக் காட்டினேன்.

அவருக்குப் பிடித்துப் போய்விட்டது. ஆனாலும், இந்த படத்தில் பெரிய அளவுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்.

கொஞ்ச நாள் கழித்து நலன் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அவரை சென்று சந்தித்தேன். இப்போது எடுக்கும் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்திற்கு  மொத்தமாக நான்கு காட்சிகள் இருக்கின்றது, அதில்  நடிக்கிறீர்களா என்றார்.  ஒப்புக் கொண்டேன்.

படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய நடிப்பை பார்த்த நலன், என்னுடைய நான்கு காட்சிகளை பதினைந்து காட்சிகளாக மாற்றிவிட்டார். நடிப்பின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கைக்கு உந்துதல் அளிக்கும் விதமாக ‘காதலும் கடந்து போகும்' படம் அமைந்தது.

படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு முடிந்த இரவு அன்று, விஜய் சேதுபதி, சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்' படத்தை பார்த்திருக்கிறார். அதில் சிவாஜி கணேசன் மணலில் நடந்து செல்வது போன்ற ஒரு காட்சி இருக்கும். அதே காட்சியை சுந்தரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நலனிடம் கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்காக திருவிளையாடல் படத்தின் கேசட்டை வாங்கிவரச் சொல்லி என்னைப் பார்க்கச் சொன்னார்கள்.

‘‘அதெல்லாம் வேண்டாம் சார்... நீங்க கேமிராவை ஆன் பண்ணுங்க, சிவாஜி போலவே  நடிக்கிறேன்'' என்றேன்.

சிறிய வயதிலிருந்தே சிவாஜி கணேசன் மாதிரி நடித்துக் கொண்டிருந்த எனக்கு, அந்தக் காட்சியில் நடிக்க எந்த ஒத்திகையும் தேவைப்படவில்லை.

‘காதலும் கடந்து போகும்' படத்திற்குப் பிறகு ‘சீதக்காதி'யில் நடித்தேன். இதற்கிடையே திரைப்பட விழாக்களில் ‘மௌன குரு' படத்தின் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்துப் பேசுவேன். அவர் இரண்டாவது படம் எடுக்க எட்டு ஆண்டுகள் ஆனாலும், அவருடன் தொடர்பில் இருந்தேன்.

சாந்தகுமார் ஒருநாள் வரச்சொன்னார். சென்றேன். படத்தில் தேவராஜ் என்ற இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை கொடுப்பதாக இருந்தார். ஆனால், வேறு ஒரு குரூரமான போலீஸ் கதாபாத்திரத்தைக் கொடுத்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பாக ஒரு நகைச்சுவை காட்சி வரும். அதற்காக ஒன்றரை மணி நேரம் யோசித்துப் பார்த்து, எம்.ஆர்.ராதாவையும், ஹாலிவுட் நடிகர் ஜோ பெஸ்சியையும் முன்மாதிரியாக வைத்து அந்தக் காட்சியில் நடித்தேன். அந்தக் காட்சிக்காக நிறைய பாராட்டு வாங்கினேன்.

 ‘காதலும் கடந்து போகும்' படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்த மடோன் அஸ்வின் ‘மண்டேலா' படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படம் ஓடிடி-யில் வெளியாகியிருந்தாலும், யோகி பாபுவிற்கும், மடோன் அஸ்வினுக்கும், எனக்கும் நல்ல அங்கீகாரத்தைக் கொடுத்தது. ‘மண்டேலா' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே, இயக்குநர் ரஞ்சித் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. ‘சார்பட்டா படத்தில் துரைக்கண்ணு என்ற கதாபாத்திரம் இருக்குது. ரெண்டு பாக்சிங் வாத்தியர்களுக்கு இடையே நடக்கிற கதை. நீங்கள் அதில் நடிக்க வேண்டும்' என்றார்.

‘சார்பட்டா பரம்பரை'க்கு கிடைத்த வரவேற்பை அனைவரும் அறிவார்கள். அதில் நான் பேசிய ‘என்ன ரங்கா எல்லோரும் ஜோக் காட்றீங்களா?' என்ற டயலாக், இந்த அளவிற்கு ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

 இதற்கடுத்து ரஞ்சித்தின் தயாரிப்பில் இயக்குநர் ப்ராங்ளின் இயக்கிய ‘ரைட்டர்' திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் மருதமுத்து என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என ரஞ்சித் கூறியிருக்கிறார். வழக்கறிஞர் கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடித்தேன். அந்த கதாபாத்திரம் நல்லதொரு அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது. பத்து, பதினைந்து வருடங்களாக கிடைக்காமலிருந்த அனைத்தும் இப்போது எனக்கு கிடைத்து கொண்டிருக்கிறது,'' என்கிறார் ஜி.எம்.சுந்தர் நெகிழ்வுடன்.

பிப்ரவரி, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com