"இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!'' - சி.எஸ். அமுதன்

"இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!'' - சி.எஸ். அமுதன்

'விஜய் ஆண்டனியும் நானும் கல்லூரி காலத்து நண்பர்கள்.  என் இரண்டாவது படத்தையே அவரை வைத்துதான் இயக்குவதாக இருந்தது. சில சூழல்களால், பத்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது ‘ரத்தம்' படத்தில்தான் இணைய முடிந்தது'.

‘தமிழ்ப் படம்' என்கிற எது மாதிரியும் இல்லாத புது மாதிரிப் படம் ஒன்றைத் தந்த சி.எஸ். அமுதன் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இயக்கியிருக்கும் படம் ‘ரத்தம்'. அவருடன் அந்திமழைக்காக ஓர் உரையாடல்.

‘ரெண்டாவது படம்' என்கிற பெயரில் நான் இயக்கி முடித்த என் இரண்டாவது படம் எப்போது வெளியாகும் எனக் கேட்கிறீர்கள். அது என் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். விஜய் ஆண்டனி என் நீண்ட கால நண்பர் என்பதால் ஒரு நாள் அவருக்கு போன் போட்டு ‘ரொம்ப நாள் முந்தியே ‘நாக்க மூக்க'ங்குற டைட்டில்ல நாம சேர்ந்து படம் பண்ணவேண்டியது. மறந்துட்டீங்களா? இப்ப நான் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன். எனக்கு படம் பண்ணுவீங்களா மாட்டீங்களா?'ன்னு உரிமையோட கேட்டேன். அதுக்கு அவர் நீங்க கதை கூட சொல்லவேண்டாம். வாங்க பண்ணலாம்னு சொல்லி ஆரம்பிச்சதுதான் இந்த ‘ரத்தம்' முதல்ல நான் படத்துக்கு ‘வன்மம்னு பேர் வச்சிருந்தேன். ‘என் கிட்ட ‘ரத்தம்னு ஒரு டைட்டில் இருக்கு அதை வச்சிக்கலாமான்னு கேட்டு இந்த டைட்டில் கூட அவர் குடுத்ததுதான்.

முழுக்க முழுக்க பத்திரிகை உலகம் சம்பந்தப்பட்ட படம். டைட்டில் தான் ரத்தம்னு இருக்கே ஒழிய வன்முறைக் காட்சிகள் அவ்வளவா இல்லாத படம் இது. விஜய் ஆண்டனி பத்திரிகை ஆசிரியரா வர்றார். பெருமைக்காக சொல்லலை. பத்திரிகை உலகின் அன்றாட நிகழ்வுகளை இவ்வளவு துல்லியமா காட்டுன ஒரு படம் தமிழ்ல வந்ததில்லைன்னு அவ்வளவு நிச்சயமா சொல்வேன்.

பொதுவா ஒரு படத்துல ஒரு கொலை நடந்தா அந்தக் கொலையாளி யார்ங்குறதைக் கண்டுபிடிக் கிறதை நோக்கி கதை நகரும். ஆனா இதுல முதல் காட்சியிலயே கொலையாளி யார்ன்னு சொல்லிட்டுத்தான். படத்தையே தொடங்குறோம். அதே மாதிரி இது என்ன ஜானர் படம்னு கேட்டா எனக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவு ஏன் படம் பார்த்தபிறகு உங்களாலயும் சொல்ல முடியாது. படம் அவ்வளவு தனித்துவமா இருக்கும்.

என்னோட முதல் இரண்டு படங்கள் காமெடி ஜானர்ல இருந்ததால இந்தப் படத்தை ரொம்ப ஆச்சர்யமா பாக்குறாங்க. விஜய் ஆண்டனியை வச்சி ஒரு காமெடிப் படமே பண்ணியிருக்கலாமேன்னு கேக்குறாங்க. ஆனா என் தரப்பு வேற. ஒரு டைரக்டர் நிச்சயமா ஒரு குறிப்பிட்ட ஜானர்ல மட்டுமே படம் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான். இதுல நந்திதா ஸ்வேதா, மஹிமா உட்பட மூணு ஹீரோயின்ஸ் இருக்காங்க. ஆனா படத்துல காதல்காட்சிகள் கிடையாது.

பத்திரிகையாளர்கள் பத்தின படம்ங்குறதால் ரொம்ப மெனக்கெட்டு தகவல்கள் சேகரிச்சிருக்கேன். பத்திரிகை ஆபிஸ்களுக்கு போய்ப் பார்த்திருக்கேன். இன்னும் சொல்லணும்னா கார்கி பவா, அதிஷான்னு ரெண்டு பத்திரிகையாளர்களும் இந்தப் படத்துல என் கூட வேலை பார்த்திருக்காங்க.

முதல் படம் காமெடிப் படமா அமைஞ்சதே ஒரு பெரிய காமெடிதான். ஆக்சுவலா அதை ஒரு டெலிஃபிலிமா பண்ணனும்தான் நினைச்சேன். அப்ப என் நண்பர் 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்' சசிகாந்த், துரை தயாநிதி தொடர்ந்து படங்கள் தயாரிக்கிற மாதிரி இருக்கார். வாயேன் பாத்துட்டு வரலாம்னு அழைச்சுட்டுப்போக, அவர்கிட்டவிளையாட்டுத்தனமா அந்தக் கதையைச் சொல்ல அவருக்கு ரொம்ப புடிச்சுப்போய், ஓ.கே. பண்ணலாமே யார் டைரக்டர்னு கேட்க, உடனே ‘நான் தாங்க டைரக்டர்'னு சொல்லிட்டேன். அழைச்சுட்டுப்போன சசிகாந்துக்கு பேரதிர்ச்சி. ‘என்னய்யா சொல்ற. இதுக்கு முந்தி டைரக்‌ஷன் துறையில நீ ஒண்ணுமே பண்ணுனதில்லை. திடீர்னு நீதான் டைரக்டர்னு சொல்றேன்னு ஷாக் ஆயிட்டார். ஆனா அடுத்தடுத்து நடந்த திடீர் தற்செயல்களால நானே டைரக்டர் ஆயிட்டேன்.

விஜய் ஆண்டனி என்னோட நண்பர்ங்கிறதால சொல்றதா நினைக்கவேண்டாம். நான் கொடுத்த ஸ்கிரிப்டை படிச்சு முழுசா உளவாங்குனதாலயோ என்னவோ ஒரு நாள் கூட ஒரு எக்ஸ்ட்ரா டேக் கேட்காத அளவுக்கு அப்படி நடிச்சுக் குடுத்தார். அவர் கூட படம் பண்ணுனா எடிட்டிங்ல வந்து உட்காருவார். டைரக்டரோட பல வேலைகள்ல தலையிடுவார்னு இண்டஸ்ட்ரியில அவரைப் பத்தி ஒரு செய்தி இருக்கு. அப்படி தலையிடுறதுக்கான அத்தனை தகுதிகள் இருந்தும், நடிச்சி முடிக்கிறதோட ஒதுங்கிக்கிறவர்தான் அவர். அவரை பத்தி வர்ற செய்திகள்ல கொஞ்சம் கூட உண்மை இல்லைங்குறதுதான் என்னோட அனுபவம்.

பெரும் தயக்கத்துக்குப் பின் உரையாடலை, சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட விஜய் ஆண்டனியின் மகள் தொடர்பாக கொணர்ந்தபோது, பேச வார்த்தைகளின்றி சிறு விசும்பலோடு வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறார் அமுதன்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் அமுதன், விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு தொடர்பாக மீடியா குறித்து ஆதங்கப் பதிவுகள் வெளியிட்டிருந்தார். கொஞ்சம் கூட மனசாட்சியின்றி ஈ மொய்ப்பதுபோல் மரண வீட்டை மொய்த்த அரைவேக்காட்டு யூடியூபர்களை நோக்கி ‘கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள் இதயமற்ற மிருகங்களே' என்றும் ‘தன் குழந்தையை அடக்கம் செய்யும் நிலை எந்த தந்தைக்கும் வரக்கூடாது. அப்படியே வர நேரும்போது ‘என்னை கொஞ்சம் தனிமையாக இருக்கவிடுங்கள் என்று கெஞ்சும் நிலையும் எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது'என்பவைதான் அமுதனின் வாசகங்கள்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com