இலவசமாக இசை கற்றுத் தருவேன்!

இலவசமாக இசை கற்றுத் தருவேன்!

‘விண் மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்' என்ற ‘தெகிடி' பாடலை இன்றும் பலர் முணு முணுத்துக் கொண்டிருக்கையில், அடுத்தடுத்து பல மெல்லிசைகளைத் தந்து இளைஞர்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர்  நிவாஸ் கே.பிரசன்னா. புதிய படத்திற்கான இசையமைப்பில் மூழ்கியிருந்தவரை ஒருநாள் மாலை சந்தித்து உரையாடினோம்.

தன் இசையைப் போன்றே மென்மையாகப் பேச ஆரம்பித்தார் நிவாஸ்:

‘‘ பிறந்தது மதுரையாக இருந்தாலும் வளர்ந்தது திருநெல்வேலியில்தான். ஒன்றாம் வகுப்பு சேர்வதற்கு முன்பாக இரண்டு வருடம் பல்லடத்தில் இருந்தேன். எனக்கு இசை மீது ஆர்வம் இருப்பதை என்னுடைய பெற்றோர் அப்போது தான் தெரிந்து கொண்டனர். எனக்கு 4 வயது இருக்கும்போதே பாடத் தொடங்கிவிட்டேன். இளையராஜாவின் ‘புதுச்சேரி கச்சேரி' என்ற பாடலைத்தான் முதல் முறையாக பாடினேன். ஐந்து வயதிலேயே மியூசிக் டைரக்டராக வேண்டும் என நினைத்தேன்' என்றவர், கன்னத்தில் கைகளை வைத்துக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டே தனது பால்ய நினைவுகளை இசைக்கத் தொடங்கினார்.

“திருநெல்வேலியில் உள்ள மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு வரை படித்தேன். அங்கு மித்ரன் என்ற மாஸ்டரிடம் கீ போர்டு கற்க ஆரம்பித்தேன். என்னை வெஸ்டன் கிளாசிக் கற்றுக் கொள்ள வைப்பதற்கு அம்மாவும் அப்பாவும் விரும்பினர். ஆனால் அவர்களிடம் போதிய பணம் இல்லை. அம்மா மிகுந்த சிரமப்பட்டு பணம்  சேர்த்து டேவிட் தாம்சன் மாஸ்டரிடம் பியானோ வகுப்பிற்கும், அம்புஜம் மாமியிடம் கர்நாடக இசை வகுப்பிற்கும் சேர்த்துவிட்டார்.

பள்ளியில் நடைபெறும் எல்லா இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். இரண்டாயிரத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதற்கு மூன்று தங்க நாணயங்கள் பரிசாகக் கொடுத்தார்கள். இதைக் கேள்விப்பட்டு, பள்ளியிலும் என்னை வெகுவாக ஊக்கப்படுத்தினார்கள். என்னுடைய திறமையைப் பார்த்து ஸ்ரீநிவாசா என்ற மாமா ஒருவர், லேட்டஸ்டாக வந்திருந்த கீ போர்டை வாங்கிக் கொடுத்தார். அந்த கீ போர்டில் தான் இசைக் கோர்ப்புகள் எப்படி நடக்கிறது என்பதைக் கற்றுக் கொண்டேன். அவர் இல்லை என்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. நான் ஒவ்வொரு முறை கீ போர்டை தொடும்போதும் அவர் தான் நினைவிற்கு வருவார்.' என்றவர், சிறிது மௌனத்திற்குப் பிறகு மீண்டும் பேசத் தொடங்கினார்.

‘ஒரு முறை வீட்டிலிருந்த டேப் ரிக்கார்டரில் ஏ.ஆர்.ரஹ்மானுடைய ‘காதலன்' ஆல்பத்தைக் கேட்டேன். ‘முக்காலா முக்காபுலா' பாடலின் தொடக்க பிஜிஎம் கேட்டு பிரமித்துப் போனேன். அதன் பிறகு இளையராஜாவின் திருவாசகம் கேட்டேன். அது என்னுடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் குடும்பத்துடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்த கையோடு வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். கல்லூரிக்குப் பெரிதாகச் சென்றதே கிடையாது. எதாவது இசைக்குழுவில் வாசிக்க வேண்டும் என நினைத்து நிறைய ஆர்கெஸ்ட்ராக்களுக்கு வாய்ப்புக் கேட்டுச் சென்றேன்.

ஒரு டிவி சீரியலுக்கு கீ போர்ட் வாசித்தேன். அது தான் என்னுடைய முதல் ரெக்கார்டிங். அதற்கு ஐந்நூறு ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்.அதன் பிறகு என்.ஆர்.ரகுநாத் என்ற இசையமைப்பாளர் மூலம் ஜி.வி.பிரகாஷை சென்று சந்தித்து என்னுடைய மியூசிக் டெமோவையெல்லாம் கொடுத்துவிட்டு வந்தேன். அவருக்கு இப்போது ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை. யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்களை சென்று சந்தித்தேன், யாரிடமும் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

டெலிபோன் டைரக்டரியில் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் தொடர்பு எண் இருந்தது. அவரைத் தொடர்பு கொண்டு என்னைப் பற்றிக் கூறினேன். ஒரு வாரம் கழித்து வரச்சொன்னார். அவருடைய வீட்டிற்குச் சென்று கீபோர்டு வாசித்துக் காட்டினேன். ‘கச்சேரி இருக்கும் போது சொல்றேன்' வாங்க என்றார். ஒரு வாரம் கழித்து, ‘காஞ்சிபுரத்தில் ஒரு கச்சேரி இருக்கிறது. அதற்கு வாங்க' என்றார். அதில் பியூசன் வாசித்தேன். சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுத்தார். என்னுடைய செலவுக்கு இருநூறு ரூபாயை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டேன்.

தொடர்ந்து கச்சேரியில் வாசிக்க ஆரம்பித்ததும், என்னுடைய பெயர் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு விஜய் டிவிவின் ஜூனியர் சூப்பர் சிங்கரில் கீ போர்டு வாசித்தேன். அப்போது ஸ்ரீநிவாஸ் சார் அறிமுகமானார். தனிப்பட்ட முறையில் அவருடன் சேர்ந்தும் நிறைய நிகழ்ச்சிகள் வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது என்னிடம் ஸ்பீக்கர் இல்லை. ஸ்ரீநிவாஸ் சார் அவருடைய ஸ்பீக்கரை எனக்குக் கொடுத்தார். அந்த ஸ்பீக்கர் தான் என்னுடைய முதல் படத்திற்கான இசையமைப்பிற்கு உதவியது. அதேபோல், அபஸ்வரம் ராம்ஜி குழுவிலும் இருந்தேன். ஒரு முறை கிருஷ்ண கான சபாவில் வாசித்துக் கொண்டிருந்த போது வீணை பார்த்த சாரதி (ஸ்ரீராம் பார்த்தசாரதியின் அப்பா) என்னைப் பார்த்து பெரிய ஆளாக வருவேன் என்றார். அந்த வார்த்தை இன்னும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. ஏன்? எதற்கு? அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அப்போது சந்தித்த ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு உதவி செய்தனர். குறும்படம், ஆவணப்படம், விளம்பரப் படம், கச்சேரிகள் எனத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும் இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டிற்குப் பிறகு பெரிய தேக்கம் ஏற்பட்டது. இதை அம்மாவிடம் சொன்னேன். அவர்கள் என்னை கீ போர்டு வாசிப்பதை நிறுத்திவிட்டு, கம்போஸ் பண்ணச் சொன்னார். அப்போது, சைந்தவி குரலில் ‘கண்ணம்மா' என்ற ஆல்பத்திற்கு இசையமைத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது' என்றவர் அடுத்தடுத்த நகர்வுகளை விவரிக்க ஆரம்பித்தார்.

‘நண்பர் ஒருவரின் மூலம் திங்க் மியூசிக் சந்தோஷை சந்தித்தேன். அவர் என்னை சி.வி.குமாரை சென்று சந்திக்கச் சொன்னார். பீட்சா -2 படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது. ஏனோ அது நடக்கவில்லை. அது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு தான் ‘தெகிடி' படத்திற்கான வாய்ப்பே கிடைத்தது. முதல் படம் என்ற பயமே இல்லாமல், ரொம்ப ஜாலியாகவே படத்திற்கு இசை அமைத்தேன். படம் வெளிவந்த பிறகு நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கள் வீட்டிலும் சந்தோஷப்பட்டனர். அப்பா மட்டும் ஒரு வார்த்தை சொன்னார், ‘சந்தோஷமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் எல்லாம் கடந்து போகும், இசையில் என்ன பெஸ்டா பண்ண முடியுமோ அதைச் செய்' என்றார்.

தெகிடி படத்திற்குப் பிறகு சேதுபதி, ஜீரோ, கூட்டத்தில் ஒருத்தன், தேவராட்டம், ஹிப்பி, கும்கி-2, டைட்டானிக்& காதலும் கவுந்து போகும், கோடியில் ஒருவன், ஓ மை டாக் ஆகிய படங்கள் இதுவரை நான் இசையமைத்து வெளிவந்துள்ளன.

பொதுவாக படத்தின் கதைக் கேட்ட பிறகே டியூன் போடுவேன். தேவராட்டம் படத்தின் பாடல்களை ரொம்ப விரும்பி இசையமைத்தேன். படம் வெளிவந்தபோது பாடல்கள் பெரிய அளவுக்கு கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால் இப்போது ஹிட்டாகியிருக்கிறது. எல்லோரும் ரசிக்கும் படியான பாடல்களைக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தவர்கள் பெரிய இடத்திற்குச் சென்றிருக்கின்றனர். நான் அதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதேபோல், எல்லாவிதமான கதைக்கும் என்னால் இசையமைக்க முடியும். அதற்கு ஏற்றதுபோல் என்னை மாற்றிக் கொள்ள முடியும்.

எனக்கு ரோல்மாடல் என்று யாரும் இல்லை. இன்ஸ்பிரேஷன் நிறையப் போர் இருக்கின்றனர். யானி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள்.

இளம் தலைமுறை இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயண், அனிருத் இசை ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கிறது' என்றவரிடம், உங்களின் கனவு என்னவென்று கேட்டோம்.

‘ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மியூசிக் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது என்னுடைய கனவு. நான் இசையமைப்பதே அதற்குத்தானோ என்று நினைப்பது உண்டு.

யாராவது அன்பு காட்டினால் ரொம்பவே நெகிழ்ந்துவிடுவேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்தக்கூடியவர் என்னுடைய அம்மா. எப்போதும் அவரை நினைத்துக் கொள்வேன்.

இயற்கையுடன் இணைந்து வந்தாலே இசையில் உங்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

இசையை ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதனால் தான் குறைவான படங்களுக்கே இசையமைக்கிறேன். பாட்டுப் பாடினால் எல்லோரும் கேட்கவேண்டும். சாதாரண ஒரு மனிதர் உங்களுடைய பாடலைக் கேட்டால் மேல்நிலை அடைய வேண்டும். ஒருவரை மேல் நிலைப்படுத்துவது தான் இசையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

சுமோ, டக்கர், டைட்டானிக்& காதலும் கவுந்து போகும், யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்கள் வெளியீட்டிற்காகவும், கள்ளப்பார்ட், மதில் மேல் காதல், வட்டம் ஆகிய படங்கள் இசையமைப்பிலும் இருக்கிறது' என சொல்லி நேர்காணலை முடித்தார்.

மே, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com