ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்

கேப்டன் மில்லர் பின்னணி இசைக்காகவே பேசப்படும்!

இசையமைப்பாளராக சிறப்பாக செயல்படும் ஒருவர் நடிகராகவும் பட்டையைக் கிளப்புவது அரிதிலும் அரிது. இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி கடந்த பதினேழு ஆண்டுகளில் சுமார் நூறு படங்களுக்கு இசையமைத்துவிட்டார் ஜிவி பிரகாஷ். அதுமட்டும் அல்லாமல் சுமார் 25 படங்களுக்கு மேலாக நடித்தும் விட்டார்.  இசையிலும் நடிப்பிலும் தன் எல்லைகளை விரித்துக்கொண்டே செல்லும் ஜிவியுடன் அந்திமழைக்காக நடிகரும் எழுத்தாளருமான ஷாஜி நிகழ்த்திய உரையாடலில் அவர் பகிர்ந்துகொண்டவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே:

சின்னவயதிலிருந்தே கிளாசிக்கல் இசை கற்றுக் கொண்டிருந்தேன். நினைவு தெரியாத வயதில் ரகுமான் சார் இசையில் பாடியிருக்கிறேன்.  நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் என் பெற்றோர் பிரிந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து என் மாமா ஏஆர் ரகுமான் குடும்பத்துடன் தொடர்பு சிலகாலம் இல்லாமல் இருந்தது. பள்ளியில் இருந்த எங்கள் இசைக்குழுவில் இயங்கிக் கொண்டு இருந்தேன். விளம்பரங்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கும் வாய்ப்புகள் வந்தன. இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் முதல்முதலில் எனக்கு வாய்ப்பு வழங்கினார். ஜேஜே, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற  படங்களில் கீபோர்ட் வாசிக்க வாய்ப்பு அளித்தார். அதன் பின்னர் வித்யாசாகர் இசையில் சந்திரமுகி, ஜீ, பங்காரம் போன்ற படங்களில் வாசித்தேன். இதற்கிடையில் ஹாரிஸ் ஜெயராஜ் இசைக்கும் கீபோர்டு வாசித்துவிட்டேன். நல்ல கீபோர்ட் பிளேயர் என்ற பெயர் கிடைத்திருந்தது. அதற்கு நடுவில்தான் என் பாட்டி என்னை அழைத்து ஏ ஆர் ரகுமானிடம் நல்ல கீபோர்ட் ப்ளேயர்  இல்லை, நீ வந்து வாசிக்கிறாயா என அழைத்தார்.

நான் சென்று இணைந்துகொண்டேன். ஆகவே ரகுமானின் உறவினர் என்று சொல்லி எனக்கு வாய்ப்புகள் நான் தேடவில்லை. முதல் பட வாய்ப்பும் அப்படிக் கிடைத்தது என சொல்ல முடியாது. நானுமே அவர்கிட்ட உதவி கேட்காமல் மேலே வரவேண்டும் என நினைத்தேன். கேட்டிருந்தால் நிச்சயம் உதவி இருப்பார்கள்.

நான் முதலில் பண்ணது ஜிங்கிள்ஸ்தான். ரேடியோ மிர்ச்சியின் முதலாண்டு நிகழ்ச்சிக்கு 'கனவு கை சேர்ந்தது'ங்கற ஜிங்கிள் பண்ணினேன். அது பயங்கர ஹிட். தொடர்ந்து நிறைய பண்ணினேன். இயக்குநர் வசந்தபாலன் இவற்றைக் கேட்டுட்டுத்தான் வெயில் படத்துல வாய்ப்பு அளித்தார். அப்ப நான் ரொம்ப சின்ன பையன். வாய்ப்புக் கொடுக்கவே தயங்கினார்கள்.  சீனுராமசாமி சார்கூட என்னைப் பார்த்து ரொம்ப பயந்துபோயிட்டார்.. இவ்வளவு சின்னப் பையனா இருக்கானேன்னு.. தம்பி, எனக்கு வாசிச்சி காமின்னு கேட்டார்..

வெயில் படம் ஆரம்பிச்சபோது நிறைய ட்யூன் பண்ணினேன். அதெல்லாம் வசந்தபாலன் சாருக்குப் பிடித்ததுபோல் தெரியவில்லை. வாய்ப்பு கைநழுவிடுமோ என்றுகூட நினைத்தேன். அப்புறம் வெயிலோட விளையாடி.. ட்யூனை ஓகே செய்தார். ஆனால் பிறகு நா.முத்துக்குமார் ஒரு பாட்டு வெச்சிருக்கார். அந்த பாட்டுக்கு ஒரு ட்யூன் போடமுடியுமா என்றார்.  எனக்கு செய்யமுடியுமான்னு சந்தேகம் வந்துவிட்டது.  அவருக்குப் போன்பண்ணி ‘நானே.. இப்பதான் ஒரு ட்யூன் ஓகே வாங்கி வெச்சிருக்கேன்.. இப்படி பண்றீங்களே?' என்று கேட்டேன். முத்துக்குமார் ‘இல்லப்பா.. இப்ப நீ ஓகே வாங்கி வெச்சிருக்க ட்யூனுக்கே இந்த வரிகளைப் போட்டுப் பார்' என்றார். என்ன ஒரு ஆச்சர்யம்... அவர் எழுதி இருந்த வரிகள் அப்படியே பொருந்தின. அதுதான் வெயிலோட விளையாடி பாடல்!

அப்ப எனக்கு பின்னணி இசை அமைப்பது பற்றி பெரிய சந்தேகம் இருந்தது. வசந்தபாலன் சார்.. பண்ணிடுவியான்னு சந்தேகமா கேட்டார். அந்த படத்தில் டீக்கடை சீன் ஒன்று வரும். அதுக்கு நான் பண்ணி இருந்த பின்னணி இசையைக் கேட்டு தியேட்டர்ல கைதட்டினாங்க. எனக்கும் பின்னணி இசை அமைக்கத் தெரியும்ங்கறதே அப்பதான் தெரியும். அதில் ஆரம்பிச்சு சூரரைப் போற்று படத்துக்கு பின்னணி இசைக்கு தேசிய விருது வரைக்கும் வாங்கிவிட்டேன்.

முதல் பத்து படங்களில் நான் பாடவே இல்லை. யாத்தே.. பாட்டை நான் ட்ராக் தான் பாடினேன். அதை நான்கு பெரிய பாடகர்களை வைத்துப் பாடவைத்தோம். ஆனால் இயக்குநர் என் குரல்தான் பிடித்து இருக்கிறது என்று சொல்லி என்னையே வற்புறுத்தி பாட வைத்துவிட்டார். அது மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது. அதைத் தொடர்ந்து என்னை பாடச் சொல்லி எல்லோரும் கேட்க ஆரம்பித்ததால் பாடுகிறேன்.

தற்போது வரும் இயக்குநர்கள் யாரும் இசையில் பரிசோதனை பண்ணவே வாய்ப்பு தருவதில்லை. ஹீரோவை புகழ்றது, டான்ஸ் ஆடறமாதிரி பாட்டு இதுதான் கேட்கிறாங்க. ஆயிரத்தில் ஒருவன்ல தாய் தின்ற மண்ணே,  மதராஸப் பட்டனத்தில் பூக்கள் பூக்கும் தருணம், அங்காடித் தெருவில் கதைக் களைப் பேசும்.. இந்த மாதிரி பாடல்கள் பண்ண குறைவாகவே வாய்ப்புக் கிடைக்கிறது. இதுபோல் பரிசோதனை பண்ணக்கூடிய இயக்குநர்களும் குறைவாகவே இருக்கிறார்கள். பத்தில் இரண்டு படம் தான் இப்படிக் கிடைக்கிறது.

நான் நடிக்க வந்ததும் இயல்பாதான் நடந்தது. தாண்டவம் படத்துக்கு என் போஸ்டர்கள் ஒட்டியிருந்தாங்க அதப்பாத்துட்டு முருகதாஸ் சார் அவங்க படத்துக்கு நடிக்க அழைத்தார். எனக்கு நடிக்க வருமான்னு தெரியலைன்னு சொன்னேன். உங்க முக அமைப்பு எல்லோருக்கும் பிடிக்கும்னு சொல்லி நம்பிக்கை கொடுத்தாங்க. அந்த படம் எடுக்கப்படல... ஆனால் அந்த செய்தியைக் கேட்டுட்டு மத்தவங்க என்னை அழைத்தார்கள். பென்சில்னு ஒரு படம் பண்ணினேன். அதுவும் வெளியாகலை... டார்லிங் படம் முதலில் வெளியாகி நல்லா ஓடியது. அடுத்த ப்டம் திரிஷா இல்லன்னா நயன் தாராவும் நல்ல ரிசல்ட்.

நான் ஆரம்பத்தில் காமெடி படங்கள் பண்ணுவோம்னு நடிச்சுகிட்டுஇருந்தேன். சில படம் சரியாகப் போகவில்லை. அப்போது பாலா சார் அழைத்து நாச்சியார் கொடுத்தார். அதில் நடித்தபிறகு எனக்கு  கனமான பாத்திரங்களைப் பண்ணமுடியும் என்கிற நம்பிக்கை வந்தது. இப்ப வர்ற இயக்குநர்கள் ஏதோ ஒரு விதத்தில் என்னை அவங்க கதைக்கு பொருத்தமா இருக்கிறதாகக் கருதி என்கிட்ட வர்றது எனக்கு நல்வாய்ப்பு.

நான் ஒரு வெற்றிகரமான நடிகன் ஆனபிறகு இசையமைக்கும் வாய்ப்புகள் குறைந்தன. இரண்டு படங்கள்தான் வந்தன. ஒன்று சூரரைப் போற்று, இன்னொன்று அசுரன். இரண்டுக்குமே தேசியவிருது. எனக்கு ஒரு படத்துல சிறந்த இசையமைப்பாளருக்கான விருது.. இரண்டுமே பெரிய ஹிட் ஆனதால் கடகடன்னு பதினெட்டு படம் வாய்ப்பு வந்துவிட்டது.­­­­

எனக்கு இதுவரைக்கும் சவாலாக இருந்த ஒரே பாத்திரம் நாச்சியார்ல பாலா சார் கொடுத்ததுதான். முழுக்க என்னை கருப்பாக்கி, முடியை கலர் மாற்றி.. அவர் என்னை ஜிவியை நான் பார்க்கவே கூடாதுன்னு சொல்லிட்டார். முழுமையா வேறு ஆளா மாறிட்டேன். கண் சிவப்பா இருப்பதற்கு கதகளி கலைஞர்கள் பயன்படுத்தும் விதையைக் கொடுத்துட்டாங்க. அது நல்ல அனுபவம். அவர் நடிகர்களிடம் இருந்து சிறந்த பங்களிப்பை எப்படியும் வாங்கிவிடுவார். என் நடிப்பே நாச்சியாருக்குப் பின்பு மாறிவிட்டது. அதற்குப் பாலாதான் காரணம். 

இசையமைப்பாளராக என்னால் மறக்கமுடியாத அனுபவங்களைத் தந்த படம் ஆயிரத்தில் ஒருவன். நிறைய ஒர்க் பண்ண படம் அது. அந்த நேரத்தில் அதை யாருமே மதிக்கவே இல்லை. ஆனால் இப்ப அதை கொண்டாடிட்டு இருக்கிறாங்க. 12 ஆண்டுகள் கழித்து நாம் பண்ணிய ஒர்க் ட்ரெண்டிங்ல இருக்குன்னா எனக்கு மகிழ்ச்சிதான்!

எங்க பெற்றோர் பிரிவின்போது கஷ்டமாகத்தான் இருந்தது. என்னை விட என் தங்கை பவானி யூகேஜிதான் படித்துக்கொண்டிருந்தாள் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டாள். ஆனால் இதை நாங்கள் பாசிட்டிவ் ஆக பயன்படுத்தினோம். இந்த உலகுக்கு கடினமாக உழைத்து எங்களை நிரூபிக்கவேண்டும் என நினைத்தோம்.  என் தங்கை சில படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்து, இப்போது நடிக்க வந்துள்ளார். விடுதலை படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டது. வர இருக்கும் படங்களில் தங்கலான் படத்துல பழங்குடி இசை பண்ணி இருக்கிறேன். கேப்டன் மில்லர்ல பின்னணி இசை ரொம்ப பேசப்படும்! இந்தி சூரரைப் போற்று படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறேன். கிங்ஸ்டன் படமும் புது வகையாக இருக்கும்னு நினைக்கிறேன்.

ஷாஜி - ஜிவி பிரகாஷ் உரையாடலின் முழு வடிவத்தை Andhimazhai TV சானலில் இடம்பெறும் Chat with Chen நிகழ்ச்சியில் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com