கை தான் ஹீரோ

முதல் படம்
கை தான் ஹீரோ
Published on: 

நாளைய இயக்குநரில் இறுதிச்சுற்று வரை சென்ற குறும்பட இயக்குநர் அசோக், பீச்சாங்கை படம் மூலமாக இன்றைய இயக்குநராக பரிணமித்திருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த அசோக் அடிப்படையில் சாப்ட்வேர் இன்ஜினியர். சமீபத்தில் வெளியான பீச்சாங்கை படத்தின் ட்ரெய்லர் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறது. அந்திமழைக்காக அவரிடம் பேசியதிலிருந்து..

நெகட்டிவான தலைப்பு கவனத்தைக் கவர்வதற்கா?

இல்லை. படத்தின் கதையே அது தான். இடது கை பழக்கமுள்ள திருடனைப் பற்றிய கதை. ஒரு விபத்தில் அவருக்கு ஏலியன் ஹேண்ட் சின்ரோம் (அஏகு) என்கிற புது வகையான பிரச்னை வரும். அதன்படி இவரது இடது கை அவருடைய கட்டுப்பாட்டில் இருக்காது. கை தான் படத்தோட ஹீரோ.

அமீர்கானோட பீகே படப் போஸ்டரை நினைவுபடுத்தற மாதிரி போஸ்டர் இருக்கே?

பீச்சாங்கை என்பதை சுருக்கமா பீகேன்னு சொல்லலாம். அதோட ஏலியன் விஷயமும் சேர்ந்ததால சட்டுன்னு கவனத்தை திருப்புற மாதிரி அந்த போஸ்டரை செய்தோம். மற்றபடி பீகேவுக்கும் பீச்சாங்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பீச்சாங்கை அரசியல் படமா...?

அரசியல்வாதிகளைப் பற்றி படத்தில் உண்டு. ஆனால் அரசியல் இல்லை. சாதாரண திருடன் அவனுக்குள்ள பிரச்னையில் அரசியல்வாதியின் வாழ்க்கையில் குறுக்கிட அதனால் ஏற்ப்படும் விளைவுகளை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கோம். குத்துப்பாட்டோ, கவர்ச்சி அம்சங்களோ படத்தில் இல்லை என்றாலும் வெகுமக்கள் ரசித்து பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

எம்.எஸ். பாஸ்கரைத்தவிர தெரிந்த முகங்கள் யாரும் இல்லை அல்லவா?

ஏற்கெனவே சொன்ன மாதிரி இந்த படத்தில் கை தான் ஹீரோ. இதுக்கு புதுமுகம் தான் செட்டாகும். பீச்சாங்கை படம் தொடங்கறதுக்கு முன்னாடி புதுமுகங்களை வச்சு பைலட் ஷூட் ஒன்னு எடுத்தோம். அதை வைத்து தயாரிப்பாளர்களை அணுகினோம். நெறைய பேருக்கு படத்தின் கான்செப்ட் பிடித்திருந்தது. ஆனால் இதில் நடித்த புது முகங்கங்களைத் தான் படத்திலும் நடிக்க வைக்க போறேன்னு சொன்னதும் தயங்கினாங்க. பெரிய ஹீரோவை வச்சு பண்ணலாம்னு சொன்னாங்க. எங்களுக்கு அதில் விருப்பமில்லை. இறுதியா ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவும், படத்தின் நாயகன் கார்த்தியும் அவங்களே படத்தை தயாரிப்பதாக சொன்னாங்க. சரின்னு களத்துல இறங்கிட்டோம்.

குறும்பட இயக்குநர் என்பது திரைப்பட இயக்குநராவதற்கு விசிட்டிங் கார்டா..?

அப்படியெல்லாம் இல்லை. சாப்ட்வேர் இன்ஜினியரா இருந்த நான் சினிமா ஆசையில நேரா வந்துடலை. பிலிம் மேக்கிங் பத்தி கோர்ஸ் சேர்ந்து படிச்சேன். அடுத்து நாளைய இயக்குநர்ல இறுதிச் சுற்றுவரை வந்தேன். யார் கிட்டயும் அஸிஸ்டெண்டா சேர்ந்து உள்ள வரலயே தவிர ஐந்து வருட கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தான் பீச்சாங்கை பட வாய்ப்பு கிடைத்தது.

அடுத்து என்ன மாதிரியான படங்கள் செய்ய ஆசை?

எல்லாப் படங்களுமே ஏதோ ஒரு விஷயத்தை சொல்லத்தான் செய்கிறது. முன்னாடி அதை வெளிப்படையா சொன்னாங்க. இப்ப வரும் படங்களில் விஷயத்தை மறைமுகமாக நகைச்சுவை கலந்து சொல்றோம். பீச்சாங்கை படத்துலயும் ஸ்டாராங்கான மெசேஜ் இருக்கு. பார்வையாளர்கள் அதை புரிஞ்சிப்பாங்க. அடுத்து வரும் படங்களிலும் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை நகைச்சுவை கலந்து அனைவரும் ரசிக்கும்படியாக கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

மார்ச், 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com