சிவகார்த்திகேயனும் நானும்   அருண்ராஜ் காமராஜ்

சிவகார்த்திகேயனும் நானும்   அருண்ராஜ் காமராஜ்

கபாலி படத்தில் நான் எழுதிய பாடலைக் கேட்ட சிவகார்த்திகேயன் வெகுவாகப் பாராட்டியதோடு,“பாட்டெல்லாம் ஹிட்டாகுதுனு இப்படியே செட்டிலாகிடலானு நினைக்காத. நீ வந்த வேலை என்னனு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும். கதையெல்லாம் எழுதிட்டிருக்கீயா, என்னென்ன எழுதி வச்சிருக்க' என்றார்.

எழுதி வைத்திருந்த நான்கைந்து கதைகளின் ஒன்லைனை அவரிடம் சொன்னேன்.

‘கதைங்க நல்லாருக்கு. அசிஸ்டன்ட் டைரக்டரா இருந்து, படம் எடுக்கப் போறதுன்னா, இந்த கதைகளே ஓகே. ஆனா நீ விஜய் சார், ரஜினி சாருக்கெல்லாம் பாட்டு எழுதிட்ட. எதுனா புதுசா, வித்தியாசமா பண்ணு' என்றார், அப்படி உருவாக்கிய கதைதான் கனா படத்தின் கதை...'இப்படி சிவகார்த்திகேயனுடனான நட்பைப்பற்றிச் சொல்ல நிறைய வைத்திருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

பாடலாசிரியர், பாடகர், நடிகர், இயக்குநர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் இவர். இவருடைய இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி‘ திரைப்படம், காத்திரமான ‘சமூக நீதி' பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. படத்தின் வெற்றிக்களிப்பிலிருந்த அருண்ராஜாவை அந்திமழைக்காக சந்தித்து உரையாடினோம்.

 ‘பிறந்து வளர்ந்ததெல்லாம் குளித்தலை அருகில் உள்ள பேரூர் என்ற கிராமத்தில். இரண்டாம் வகுப்பு வரை சொந்த ஊரிலும், மூன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை குளித்தலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பன்னிரண்டாம் வகுப்பு திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் பள்ளியிலும் படித்தேன்.

 பள்ளியில் முதல் மதிப்பெண் எடுக்கக் கூடிய மாணவன் என்பதால் ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாக இருந்தேன். பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி என எத்தனைப் போட்டிகள் நடத்துகிறார்களோ, அத்தனை போட்டியிலும் கலந்து கொள்வேன். ஒரு முறை, சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்து எழுதிய கட்டுரைக்காக முதல் பரிசு பெற்றேன். அது தான் இப்போது வரை நினைவில் இருக்கிறது. அதற்குக் காரணம், அந்த கட்டுரையை நானே தயார் செய்து எழுதினேன். மற்ற நேரங்களில் என்னுடைய அப்பா உதவி செய்வார்.

 படிப்பைப் போலவே கிரிக்கெட், கூடைப்பந்து விளையாடுவதிலும் ஆர்வம் அதிகம். கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் பள்ளியில் கிரிக்கெட் டீமை உருவாக்க உடற்கல்வி ஆசிரியரிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். படிப்பும் விளையாட்டும் மட்டுமே என்னுடைய பால்ய காலத்தை நிரப்பியது. இப்படி இருந்த என்னை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என அப்பா ஆசைப்பட்டார். என்னுடைய விருப்பமும் அதுவே.

 பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது, மாலை நேர டியூஷன் முடித்து விட்டு, ரயில் பிடித்து வீட்டிற்குச் செல்ல இரவாகிவிடும். மீண்டும் காலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு வரவேண்டும். பள்ளிக்கும் -வீட்டிற்கும் சென்று வருவதற்கே அதிக நேரம் பிடித்ததால், காலாண்டு தேர்வில் இயற்பியல் பாடத்தில் தோல்வியடைந்தேன். இதை என்னுடைய அப்பாவிற்கு சொல்லவேயில்லை. தெரிந்திருந்தால், அதிர்ச்சியடைந்திருப்பார். நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும் என்பதற்காக பன்னிரண்டாம் வகுப்பில் விடுதியில் தங்கிப் படித்தேன். ஒரு வழியாக தேர்ச்சி பெற்றேன். மதிப்பெண் குறைந்ததால் மருத்துவம் படிக்க முடியாமல் போனது. இதனால் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி சேர்ந்தேன். இடையில் அதை விட்டுவிட்டு திருச்சி ஜே.ஜே. கல்லூரியில் இன்ஜினியரிங் சேர்ந்தேன்.

பள்ளியில் படிக்கும்போது ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. ஆசிரியர் ஒருவர் டியூசன் சொல்லிக் கொடுத்தார்.  அவரிடம் மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் ஃபீஸ். அப்பா கொடுத்து அனுப்பிய இரண்டாயிரம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அந்தப் பணத்தை ‘வரவில்‘ எழுதாமல், ‘மீதி‘யில் எழுதிவிட்டார். கட்டவேண்டியிருந்த மீதிப் பணத்தை வைத்து, நான் துணி வாங்கி போட்டுக் கொண்டு பெண்கள் முன்னாடி சீன் போடுவதாக நினைத்துக் கொண்டார். இதை அப்பாவிடமும் சொல்லிவிட்டார். அவர் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

இதனால், இன்ஜினியரிங் சேர்ந்த போது மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தேன். யாருடன் எப்படிப் பழகுவதென்றே தெரியாது. நாட்கள் போக போக சகமாணவர்களான சிவகார்த்திகேயன், தாமஸ், ஸ்ரீதர் (சிக்ஸர் படத் தயாரிப்பாளர்) இவர்கள் எல்லாம் நண்பர்களானார்கள். அவர்கள் தான் இன்றும் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான நபர்களாக இருக்கின்றனர்,' என்றவரின் முகத்தில் ஒருவிதமான நெகிழ்ச்சி ஏற்படுவதைப் பார்க்க முடிந்தது.

தொடர்ந்து பேசினார், ‘இன்ஜினியரிங் படித்த போது, படிப்பில் கவனம் செலுத்தியதை விட கல்ச்சுரல்ஸில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருந்தேன்.கிரிக்கெட்டில் சேர்ந்தேன்.

படிப்பு முடித்ததும் சென்னைக்கு சென்று வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், இண்டர்வியூவில் தேர்வாகி விட வேண்டும் என்பதற்காக கம்யூனிகேசன் கிளாஸ், பர்சனல் டெவலப்மென்ட் கிளாஸ் எல்லாம்

சென்றேன். ஆறு மாதங்கள் வேலை தேடினேன். ஒரு நாள் பீச்சுக்கு சென்று, கடல் முன்னாடி நின்று, மனம்விட்டு அழுதேன். ‘வேலை கிடைக்குமா? கிடைக்காதா‘ என்று. எந்த இண்டர்வியூ போனாலும் ‘கால் பேக் லேட்டர்‘, ‘கால் யூ பேக்' என்று சொல்லிவிடுவார்கள். பிறகு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அது இரவு நேர வேலை. பகல் முழுவதும் தூங்க வேண்டும். நான் தங்கியிருந்த வீடு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்டிருந்த மாடி வீடு. கோடைக்காலத்தில் தூங்கவே முடியாது. ஒருவேளை தூங்கி எழுந்தால், படுத்திருந்த பெட் நனைந்து போயிருக்கும். தூங்குவது பெரும் பிரச்சனையாக இருந்ததால் எட்டு மாதத்தில் அந்த வேலையை விட்டுவிட்டேன்.

 அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் ‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருந்தார். அதே நிகழ்ச்சியின் அடுத்த சீசனில் கலந்து கொள்வோமா என்று என்னிடம் கேட்டார். அப்படிதான் மீடியாவிற்குள் வந்தேன்.‘படித்துவிட்டு எதற்கு மீடியாவில் போய் கஷ்டப்பட போற?' என்று அப்பா மட்டும் வருத்தப்பட்டார்.

எனக்கும் சிவாவுக்கும் இடையே, நல்ல புரிதல் இருந்ததால், ‘கலக்கப்போவது யாரு‘ நிகழ்ச்சியிலும் எங்களால், புது புது ஐடியாக்களில் நிகழ்ச்சிகளை செய்ய முடிந்தது. சகபோட்டியாளர்கள் எங்களுடைய ஸ்கிரிப்டை பார்த்து வியந்து போவார்கள். விஜய் டிவியிலிருக்கும் தனசேகர், நாகராஜ் இரண்டு பேரும் எனக்கு நிறைய உறுதுணையாக இருந்தார்கள். சிம்பு வாய்ஸை எப்படி பேச வேண்டும், மிமிக்ரி செய்வதில் உள்ள நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார் தனசேகரன்.

விஜய் டிவியில், தசவதாரம் படத்தை நானும் சிவகார்த்திகேயனும் சேர்ந்து ஸ்பூப் செய்தோம். ஆரம்பத்தில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், பிறகு எல்லோரும் அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். அதன் பிறகு, நான், சிவகார்த்திகேயன் எங்களுடைய சீனியர் கோகுல் என்பவரும் சேர்ந்து ஒரு ஆல்பம் சாங் பண்ணலாம் என்று முடிவெடுத்தோம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்களுடைய காலேஜ் சீனியர் என்பதால், கோகுல் எங்களை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தார். எங்களுடைய ஐடியாவை அவரிடம் சொன்னோம்.

 அந்த ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றன. எல்லோரும் ஒவ்வொரு வேலை பார்க்க எனக்கு என்ன செய்தென்று தெரியவில்லை. ஒரு பாடலை எழுதிக் கொடுத்தேன். இதை நானே பாடட்டுமா என்று இசையமைப்பாளரிடம் கேட்டேன். பாட சொன்னார். பாடினேன். ‘நல்லாருக்குடா' என்றார். பாடியதை ரெக்கார்ட் செய்து கொண்டார். அந்த ஆல்பம் இன்னும் வெளியாகவில்லை. நான் எழுதிய பாடல் மட்டும் ‘உயிர் மொழி' என்ற படத்தில் வெளியானது. அது தான் என்னுடைய முதல் பாடல். அதன் பிறகு ‘பீட்சா' படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த பாடல்கள் ஹிட்டானதால், பீட்சா-2 பாடல் எழுதக் கொடுத்தார். பின்னர் ‘ஜிகர்தண்டா' படத்தில் பாடல் எழுதியதோடு மட்டுமல்லாமல், பாடவும் செய்தேன், வினுசக்கரவர்த்தி குரலில். ‘டிங் டாங்' பாடலைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், அழைத்து பாராட்டியதோடு, விஜய் நடித்த ‘தெறி' படத்தில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்புக் கொடுத்தார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சந்தோஷ் நாராயணன் வந்திருந்தார். என்னுடைய பாடலைக் கேட்டவர், “என்னடா இப்படியெல்லாம் பாடியிருக்க... நாம ஒரு பாடல் பண்ணுவோம்டா' என்றார்.

அதன் பிறகு ஒருநாள் சந்தோஷ் நாராயணன் அழைத்து, தன் ஸ்டுடியோவில் இயக்குநர் ரஞ்சித்திடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். கொஞ்ச நேரத்தில் ஒரு டியூனை போட்டுக் காட்டினார். டியூன் நல்லாருக்கு என்று நான் சொன்னவுடனையே பாடல் வரிகளை எழுதச் சொன்னார். அது ‘கபாலி' படத்திற்கான பாடல் என்று அப்போதுதான் தெரிந்தது.

தளபதி படத்தில் ‘தொட்ரா பாக்கலாம்...தொட்ரா பாக்கலாம்' என்ற ஒரு சீன் வரும். அதை எனக்கு போட்டுக் காண்பித்தார்கள். குரலை உயர்த்திப் பேசும் காட்சி அது. அதிலிருந்து தூண்டுதலாகித்தான் ‘நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்' பாடலை எழுதினேன். இருபது நிமிடத்தில் பாடலை எழுதி முடித்துவிட்டேன்.

இன்று வரை ஐம்பது பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன்,நாற்பது பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன், ஆனால் இசையைப் பற்றி ஏ,பி,சி,டி கூடத் தெரியாது. சொல்லிக்கொடுத்தால் செய்வேன், அவ்வளவுதான்.

கொஞ்ச நாள் கழித்து, கிரிக்கெட் பற்றி எதாவது படம் பண்ணலாமா என்று கேட்டார் சிவகார்த்திகேயன். நான் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்து, காலில் அடிபட்ட காரணத்தால் ஆப் - ஸ்பின்னராக மாறினேன். இதுவே கனா படத்திற்கான ஒன் லைனாக அமைந்தது. அதை மேலும் மெருகேற்ற வேண்டும் என்பதற்காக பெண் கிரிக்கெட் வீரரை மையப்படுத்தி எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். அதுவரை பெண் கிரிக்கெட் வீரர் ஒருவரைப் பற்றி எந்தப் படமும் வந்திருக்கவில்லை. இதை வழக்கமான ஸ்போர்ட்ஸ் படமாக இல்லாமல் அப்பா - மகள் உறவு பற்றிப் பேசும் படமாகவும் கதையை உருவாக்கினேன். இதை சிவகார்த்திகேயனிடன் சொன்னேன். வேறு தயாரிப்பாளர் யாரையாவது பரிந்துரை செய்வார் என்று நினைத்தேன். ஆனால், தானே படத்தைத் தயாரிக்கிறேன் என்றது இன்ப அதிர்ச்சி.

‘ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் நீ ஒழுங்கா வேலை பார்த்திருக்க மாட்ட. கதையை முழுசா முடிச்சதும் சொல்லலாம்னு இருந்தேன். நம்ம புரடெக்ஷன்லேயே பண்ணிடலாம்டா' என்றார்.

‘கனா‘ படம் எனக்கு கற்றுக்கொள்ள உதவுவதாகத்தான் இருந்தது. படம் வெளிவந்த பிறகு நிறையப் பேர் வாழ்த்தினர். என்னுடைய அப்பா ஊரில் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பார்த்து, ‘இவர் தான் கனா படத்தை இயக்கியவரின் அப்பா‘ என்று சொல்லி நல்லதொரு மரியாதையும் கொடுத்திருக்கிறார்கள். இதை அப்பா எனக்கு உடனே சொல்லக்கூடவில்லை. கொஞ்ச நாள் கழித்து ஊருக்குச் சென்றபோதுதான் சொன்னார். வீட்டில் எதற்காகப் பயந்து கொண்டு இருந்தார்களோ அது நடக்கவில்லை,' என்றவரிடம் ‘நெஞ்சுக்கு நீதி‘ திரைப்படம் குறித்துக் கேட்டோம்.

“ஒரு நாள் போனி கபூர் அலுவலகத்திலிருந்து அழைத்திருந்தார்கள். நேரில் சென்று சந்தித்தேன். மூன்று படம் வைத்திருந்தார்கள். அதில், எதாவது ஒரு படத்தைத் தமிழில் எடுக்கிறீர்களா? என்றார்கள். அதில் 'ஆர்டிகிள் 15' படமும் இருந்தது. ஏற்கனவே அந்த படத்தைப் பார்த்திருந்ததால், அந்த படம் ஓகே என்றேன்.

மறுபடியும் திடீரென்று ஒரு நாள் அழைத்து, உதயநிதி ஸ்டாலின் 'ஆர்டிகிள் 15' படத்தில் நடிக்க இருக்கிறார், உங்களால் இயக்க முடியுமா என்று கேட்டார்கள். ‘கனா‘ படத்திற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலினுக்கு கதை எழுதி, அவரை சந்திப்பதற்காக அலைந்திருக்கிறேன். அப்போது அவரை பார்க்க முடியாமல் போனது. அவரே இப்போது நம்மை தேர்வு செய்திருக்கிறாரே என்று சந்தோசப்பட்டேன். அப்படித்தான் 'ஆர்டிகிள் 15', ‘நெஞ்சுக்கு நீதி‘யாக மாறியது.

தமிழுக்கென்று புதிதாக சேர்க்கப்பட்ட, அம்பேத்கர், பெரியார் சிலைகள் கூண்டுடன் காணப்படுவது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது, டாக்டர் அனிதா, இந்தி மொழி போன்ற சில விஷயங்களை சேர்த்தேன். இவற்றை உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் இரவு படத்தைப் பார்த்தார். வெளியே வந்ததும் எல்லோருக்கும் கைகொடுத்தார். எனக்கும் கைகொடுத்து ‘படம் ரொம்ப பவர் ஃபுல்லாக‘ வந்திருக்கிறது என்றார். பிறகு வீட்டிற்குக் கிளம்பும் போது, மீண்டும் வந்து கைக்குலுக்கிவிட்டுச் சென்றார். அவர் கூறிய ஓரிரு வார்த்தைகளை விட, அவர் கைக்குலுக்கியதை ரொம்ப ‘பவர் ஃபுல்லாக‘ உணர்ந்தேன். சொன்ன வார்த்தைகளை, மற்றவர்களிடம் சொல்லும் போது, இதைச் சொன்னார், அதைச் சொன்னார் என்று சொல்லிவிடலாம். ஆனால் அந்த கைக்குலுக்கலில் இருந்த பிடிப்பும், இறுக்கமும் அவருடைய மனதிற்கு இந்தப் படம் எவ்வளவு நெருக்கமாக இருந்தது என்பதை உணர முடிந்தது' என்றவர்,தான் மதிக்கும் இரண்டு நபர்கள் யார் என்பதையும், சிறிது மௌனத்திற்குப் பிறகு சொல்லத்தொடங்கினார்.

 “அசோக், என்னுடைய காலேஜ் சீனியர். கிரிக்கெட் டீமின் கேப்டன். சென்னையில் வந்து சுற்றிக் கொண்டிருந்த போது, என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவரை சந்திப்பதற்கு முன்னால் ‘புறக்கணிப்பு' என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. புறக்கணிப்பைப் பார்த்துப் பயப்படக்கூடாது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தவர் அவர் தான். அதேபோல், என்னுடைய மனைவி சிந்துஜா, நாளைக்கு என்ன என்பதை இன்றே யோசிக்க கற்றுக் கொடுத்தவர். நாளையைப் பற்றிய சிந்தனை அதிகம் உள்ள நபர் அவர். வெற்றிக்களிப்பில் தேங்கிவிடக் விடக் கூடாது என்பார்,' என்றவரின் குரல் கொஞ்சம் தழுதழுக்கத் தொடங்கியது.

 “என்னுடைய முதல் திரைப்படம் கனா. அது ஒரு பெண்ணுடைய கனவைப் பற்றிப் பேசிய படம். இப்போது வந்திருக்கிற ‘நெஞ்சுக்கு நீதி‘ சாதி வன்கொடுமை பற்றியது. ஆனால் அடுத்தடுத்த படைப்புகள் அப்படிப்பட்டதாக இருக்காது. எனக்கு எல்லாவிதமான படங்களையும் இயக்க வேண்டும் என்பது தான் விருப்பம்,' என்றார் நம்பிக்கையுடன்.

ஜூன், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com