சூப்பர் ஹீரோ ஆசை இல்லை

சூப்பர் ஹீரோ ஆசை இல்லை

பால்ய காலத்தில்  மிடுக்காக காக்கி யூனிஃபார்ம் அணிந்து காவல்துறை அதிகாரியாகவேண்டும் என்கிற எண்ணமே பெரும் கனவாக இருந்தது. பின்னர் அடுத்தடுத்த நாட்களில் வாரங்களில், மாதங்களில் லட்சியக் கனவுகள் மாறிக்கொண்டே இருந்தன. ஒரு திருநாளில் நண்பனொருவன் ‘டேய் மாப்ளே பேசாம நடிகனாயிடு. வாழ்க்கையில எல்லா கேரக்ட்ராவும் வாழ்ந்துரலாம்' என்று சொன்னது மந்திரச் சொல்லாக மாறிப்போனது'' பொதுவாகவே கொஞ்சம் செலக்டிவாக படங்கள் செய்யும் அசோக் செல்வனுக்கு, சமீபத்தில் ரிலீஸாகி ஹிட்டடித்திருக்கும் ‘போர் தொழில்' இன்னும் கொஞ்சம் அந்தஸ்தைக் கூட்டியிருக்கிறது. அவருடன் ‘அந்திமழை'க்காக ஒரு பிரத்யேக சந்திப்பு.

‘‘பிறந்தது ஈரோடுன்னாலும் குழந்தைப் பருவத்திலருந்தே சென்னை வாசி நான். போலீஸ் மேன் ஆகணுங்குறதுதான் நீண்ட கால லட்சியமாயிருந்தது. அப்புறம் ஐ.ஏ.எஸ். ஆக ஆசைப்பட்டேன். அடுத்து கிரிக்கெட்டர் ஆகணும்னு மனசு மாறி ஸ்கூல் டீம்ல ஆடினேன். அந்த ஆசையும் கொஞ்ச நாள்தான். அப்புறம் அனிமேட்டர் ஆகணும்னு நினைச்சு லயோலால விஸ்காம் சேர்ந்தேன். ரெண்டே மாசத்துல மறுபடியும் குழப்பம். காலம் பூரா கம்ப்யூட்டர் முன்னாடி நிக்கிறதான்னு ஒரு கேள்வி. அந்த சமயத்துலதான் ஒரு ஃப்ரண்டு பேசாம நடிகனாக டிரை பண்ணுன்னு நாக்குல தேனைத் தடவி விட்டான்.

அவ்வளவு ஈஸியா நடிகனாக முடியுமா என்ன? கிடைச்ச வாய்ப்புகள் எதையும் தவறவிடாம நிறைய குறும்படங்கள்ல நடிச்சேன். நானே குறும்படங்கள் இயக்கவும் செஞ்சேன். அந்த டிராவல்லதான் கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி மாதிரியான இயக்குநர்கள் நட்பு கிடைச்சது. அந்த நட்பின் நிமித்தமா கிடைச்சபெரிய திரை வாய்ப்புதான் நலன் குமாரசாமி சார் இயக்கின ‘சூது கவ்வும்'.

2013ல அப்பிடி முதல் வாய்ப்பு கிடைச்சு தமிழ் சினிமாவுல பத்தாவது வருடத்தை கடந்திருக்கேன். எல்லாமே நேத்து நடந்தது போல இருக்கு. இப்ப நான் இங்கே சொல்லிக்கிற மாதிரி ஒரு இடத்துல இருக்கேன்னா அதுக்கு நிச்சயமா என்னோட நண்பர்கள் தான் காரணம். இப்ப எனக்கு ஒரு நல்ல பிரேக்கிங் கொடுத்திருக்கிற ‘போர் தொழில்' பட இயக்குநர் விக்னேஷ் கூட என்னோட நீண்டகால நண்பர்தான். குறும்படங்கள் பண்ணிக்கிட்டிருந்த காலத்து நண்பர். அவர் இந்த ஸ்கிரிப்டை சொன்னவுடனே  இது நிச்சயம் ஜெயிக்கும்னு ஒரு ஸ்ட்ராங்கான நம்பிக்கை இருந்துச்சி. டிகிரி முடிச்ச, எந்த ஃபீல்டு அனுபவமும் இல்லாத ஒருத்தனை ஸ்ட்ரெயிட்டா ஒரு கேஸ் விசாரணையில தூக்கிப் போட்டா அவன் என்ன பாடுபடுவான்கிற அனுபவத்தை அவ்வளவு பிரமாதமா எழுதியிருந்தார்.

எல்லா ஹீரோக்களுக்குமே ஒருமுறையாவது போலீஸ் யூனிஃபார்ம் போடணும்ங்கிற ஆசை நிச்சயம் இருக்கும். அது இந்தப்படத்துல நிறைவேறுனது மட்டுமல்லாம, அதை மக்கள் ஏத்துக்கிட்டாங்கங்குறதுல எனக்கு அளவு கடந்த சந்தோஷம். ஆனா அதுக்காக அடிக்கடி போலீஸ் ரோல் பண்ணவே மாட்டேன்.

மத்தவங்களோட கம்பேர் பண்றப்ப பத்து வருஷங்கள்ல ரொம்ப குறைவான படங்கள்தான் பண்ணியிருக்கேன். இந்த குறைவான எண்ணிக்கைக்கு காரணம் நானே தான். ஒரு சமயத்துல ஒரு படம் நடிச்சாதான் சரியா இருக்கும். கவனமும் சிதறாம இருக்கும்னு நான் நம்புனேன். அதனால ஒரு படம் கமிட் ஆன உடனே இன்னொரு படத்துக்கு கதை கேட்கிறதையே கூட அவாய்ட் பண்ணியிருக்கேன். ஆனா அந்த முடிவு தப்பானது. நீ நடிக்கிற படம் எல்லாம் சரியான நேரத்துக்கு ரிலீஸாகாது. அப்புறம் திடீர்னு ஒரு பெரிய கேப் விழுந்துரும். அதனால கிடைக்கிற வாய்ப்பை விடாம நிறைய படங்கள்ல நடின்னு விஜய் சேதுபதி அண்ணாதான் எனக்கு அட்வைஸ் பண்ணார்.

என்னோட முதல் படமான ‘சூது கவ்வும்' தொடங்கி ‘தெகிடி' வழியா ‘ஓ மை கடவுளே', ‘சில நேரங்களில் சில மனிதர்கள்' வழியா ‘போர் தொழில் வரைக்கும் ரொம்ப மசாலாத்தனம் இல்லாத ஃபீல் குட் படங்கள்ல மட்டுமே நடிச்சிருக்கேன்ங்குறதுல எனக்குக் கொஞ்சம் பெருமை. பெரிய ஆக்ஷன் ஹீரோவாகி கோடி கோடியா சம்பாதிக்கணுங்குற பேராசையெல்லாம் எனக்கு எப்பவுமே இல்லை. மக்கள் என்னை இந்த அளவுக்கு அங்கீகரிச்சிருக்கிறதே எனக்குப் போதும்.

இப்ப பா.ரஞ்சித் சார் தயாரிப்புல என்னோட ஃபேவரிட் களமான கிரிக்கெட்டை மையமா வச்ச ‘ப்ளூ ஸ்டார்' படத்துல நடிச்சுட்டிருக்கேன். 'சபா நாயகன்' ஷூட்டிங் முடிஞ்சி ரிலீஸுக்கு தயாராகிக்கிட்டிருக்கு. அடுத்து ‘போர் தொழில் பார்ட் 2' வை சுடச்சுட ஆரம்பிக்கப்போறோம்.

நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் எந்த கிசுகிசுக்கள்லயும் மாட்டாம நிம்மதியா போய்க்கிட்டிருக்கேன். என்னோட நண்பர்கள் வட்டமும் ரொம்பச் சின்னது. ஆனா யார் கூட சேர்ந்து வொர்க் பண்ணாலும் அவங்க ரிலேஷன்ஷிப்பை தவறவிடமாட்டேன். நம்மள பழையபடி அவங்க நடிக்கக்கூப்பிடணும்னு ஆசைப்படுவேன். தியாகராஜன் குமாரராஜா சாரோட தயாரிப்புல மாடர்ன் லவ் பண்ணுனது சமீபத்திய சந்தோஷம்.

வெங்கட் பிரபு சார் டைரக்ஷன்ல ‘மன்மத லீலை' பண்ணினப்போ அவ்வளவு ஜாலியா இருந்தது. நான் வேலை செஞ்ச டைரக்டர்கள்லயே மிஸ்டர் கூல்னா அது வெங்கட் பிரபு சார்தான். என்கிட்ட மட்டுமில்ல ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் கிட்ட கூட அவர் லேசா கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் கூட படம் பண்றது ஜாலியா கிரிக்கெட் மேட்ச் ஆடுற மாதிரியே இருக்கும். 

இப்ப அவர் அடுத்து விஜய் சாரை வச்சு ‘தளபதி 68' பண்ண கமிட் ஆகி இருக்கிறதால நானும் அதுல நடிக்கப்போறதா எல்லாரும் எழுதுறாங்க. என்கிட்ட கேக்கவும் செய்யிறாங்க. இதுவரைக்கும் ‘தளபதி 68' சம்பந்தமா வெங்கட் பிரபு சார் கிட்ட இருந்தோ புரடக்‌ஷன் தரப்பிலோ எனக்கு எந்த அழைப்பும் வரலை. அப்படி வந்தா அது சின்ன ரோலா இருந்தாலும் வெங்கட் பிரபு சாருக்காகவே நிச்சயம் நடிப்பேன்''

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com