தமிழ் சினிமாவில் பீரங்கி குண்டுகளுக்கே மரியாதை!

தமிழ் சினிமாவில் பீரங்கி குண்டுகளுக்கே மரியாதை!

தீபாவளி மெகா படங்களோடு ரிலீஸாகி, வசூலை அள்ளாவிட்டாலும் பார்த்த மக்களின் மனதை அள்ளிய படம் ‘கிடா'. கிராமத்து வாழ்வியலை, அம்மக்களின் துயரத்தை, மெல்லிய நகைச்சுவை கலந்து செல்லுலாயிடில் கவிதையாக வடித்திருந்தார் அறிமுக இயக்குநர் ரா.வெங்கட். ‘அந்திமழை'க்காக அவருடன் ஒரு பிரத்யேக சந்திப்பு.

“பிறந்தது மதுரையில் என்றாலும் படித்த, வளர்ந்த ஊர் ராமநாதபுரம். சிறு வயதில் எனக்கு சினிமா ஆசையெல்லாம் இருந்ததில்லை. என்னுடைய 15 வது வயதில் அப்பா திடீரென காலமாகிவிட்டார். அம்மா டெயிலர். அவரால் குடும்பத்தைக் காப்பாற்றிவிட முடியும் என்றாலும் ஒரு வைராக்கியத்தில், இனி அப்பாவின் ஸ்தானத்தில் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்று முடிவெடுத்தேன். அப்பா இறந்த மறுநாளே என் தெருவில் பேப்பர் போடும் அண்ணன் ஒருவரை சந்தித்து அவருடைய வேலையைக் கேட்டவுடன் சரி என்று சொன்னார்.

வழக்கமாக 8 மணிக்கு மேல் எழுந்திருக்கும் சோம்பேறி நான். ஆனால் காலையில் வீடு வீடாக பேப்பர் போடுவதென்றால் அதிகாலை மூன்று மணிக்கு எழவேண்டும். ஆச்சரியமாய், அப்படி அதிகாலை எழத்துவங்கி, மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரும் அதிகாலை பஸ்களுக்காக காத்திருந்து, பண்டல் பிரித்து வீடுவீடாக தினத்தந்தி உட்பட்ட நாளிதழ்களைப் போட ஆரம்பித்தேன்.

இங்கேதான் என்னுடைய சினிமா ஆசை துளிர்விட்டது. வீடுகளுக்குப் பேப்பர் போட்டபிறகு ஓய்வு நேரங்களில் பேப்பர் படிக்கத்தொடங்கி, அதில் வந்த சினிமா விளம்பரங்கள் என்னை வசீகரிக்க ஆரம்பித்தன. இந்த சினிமாவில் போய் நாமும் ஏதாவது சாதிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன்.

அப்படி ஒரு ஆசை எழுந்ததே ஒழிய எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது. அப்போது பாலிடெக்னிக் முடித்திருந்தேன். தாம்பரம் அருகே ஒரு கம்பெனியில் என் படிப்புக்கேற்ற வேலை ஒன்று இருக்கவே அதற்கு அப்ளை செய்தேன். உடனே வரச் சொன்னார்கள்.

அந்த வேலையில் இருந்துகொண்டே சினிமாவுக்கு முயற்சி செய்யலாம் என்பது என் பிளான். அதற்கு அதிக நாட்களெல்லாம் ஆகவில்லை. வந்து சேர்ந்த மறுநாளே என் ஊர்க்காரர் ஒருவர் மூலம் ஒரு சினிமா கம்பெனியில் ஆபிஸ் பாயாகசேர்ந்துவிட்டேன்.

இயக்குநர் வெங்கட்
இயக்குநர் வெங்கட்எஸ்.சரவணன்

அந்தப் பயணத்தில் என்னை ரொம்பவும் அரவணைத்துக் கொண்டவர் இயக்குநர் கரு. பழனியப்பன். உதவி இயக்குநர் ஆகும் முன்புஅவர் அலுவலகத்திலும் ஆபிஸ் பாயாகத்தான் பணியாற்றினேன். அங்கிருந்து இன்னொரு இயக்குநரிடம் பணியாற்ற சென்ற சமயம் அவருடைய அசோஸியேட் சூர்யா மூலம், ‘சிவப்பதிகாரம்' ஸ்கிரிப்டை டைப் செய்ய, தமிழ் தட்டச்சு தெரிந்த ஒரு பையன் வேண்டும் என்று தேட, சூர்யா, ‘நம்ம வெங்கடேஷே டைப்பிங் தெரிஞ்சவன் தான் என்று சொல்ல, என்னை உடனே வரச் சொன்னவர், ‘இதை முதல்லயே சொல்லியிருந்தா போன படத்துலயே உன்னை அசிஸ்டெண்டா சேர்த்திருப்பேனே' என்று என்னை தனது உதவியாளர் ஆக்கிக்கொண்டார்.

இதோ இன்று ‘கிடா' வரை வந்துவிட்டேன். ஆனால் இந்தப் பயணம் அவ்வளவு எளிமையானதல்ல.

ஆபிஸ் பாய், உதவி இயக்குநராக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்து இப்படி ஒரு இடத்தை அடைவதற்குள் நாக்கு தள்ளிவிடும். ஒரு புதுமுக இயக்குநர் இன்று நமது தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி ஓ.கே வாங்குவதற்கான சாத்தியங்கள் குறைந்துவிட்டன. நல்ல கதைகளுக்கான மவுசு மங்கி நம் தமிழ் சினிமாவில் பீரங்கிக் குண்டுகள் முழங்க ஆரம்பித்துவிட்டன.

இந்த ‘கிடா' கதையை நான் எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு சொல்லியும் எடுபடாமல், கடைசியில் தயாரிக்க முன்வந்தவர் தெலுங்கு தயாரிப்பாளர் ரவி கிஷோர் சார்தான். பெருந்தன்மையாக இப்படம் தயாரிக்க முன்வந்த அவர் ஆந்திராவிலிருந்து பணம் அனுப்புவதோடு சரி. ஒருமுறை கூட படப்பிடிப்பு தளத்துக்கு வந்தில்லை.

படம் ரிலீஸாகி தியேட்டர்களில் சுமாராகவே வசூலித்தது என்றாலும் என் மீது அன்பு குறையாமல் நடந்துகொண்டார். அதனால் ஒரு கட்டத்தில் குற்ற உணர்வே வந்து ‘நான் தப்புப் பண்ணீட்டேனா சார்?' என்று வாய்ஸ் மெசேஜ் போட்டேன். உடனே அழைத்துப் பேசிய அவர், ‘வெங்கட் நீ கதை சொன்னப்பவே இந்தப் படம் ஓ.டி.டிக்கான கண்டெண்ட். தியேட்டர்ல நல்லா ஓடுமான்னு தெரியலை சார்னுதான் சொன்னே. இப்பவும் அதுதான் நடக்குது. இந்தப் படம் எனக்கும் என் குடும்பத்துக்கும் ரொம்பப் புடிச்சிருக்குது. எனக்கு பொருளாதார ரீதியா எந்த நஷ்டமும் இல்லே' என்று ஆறுதலாகப் பேசினார்.

15 வயசுலயே குடும்பத்துக்கு உழைக்கத் துணிஞ்ச நான் சினிமாவுக்கு வந்த உடனேயே அப்படியே ரிவர்ஸ் ஆகிட்டேன். இந்த காலகட்டங்கள்ல சம்பாதிச்ச காசுன்னு வீட்டுக்கு எதுவுமே அனுப்புனதில்லை. இத்தனை காலமும் அம்மாவும் அக்காவும் தான் என்னைத் தாங்கிப் புடிச்சிக்கிட்டே இருந்தாங்க. பதிலுக்கு அவங்களுக்கு பொருளாதார ரீதியா எதுவுமே செய்யமுடியலைன்னு ஒரு ஆதங்கம் இருந்துக்கிட்டே இருக்குது. பட ரிலீஸ் அன்னைக்கு அம்மா காசி தியேட்டர்ல வந்து படம் பாத்துட்டு, ‘தம்பி ரொம்பப் பெருமையா இருக்குடான்னு கண் கலங்குனாங்க. ரிவியூ பண்ண வந்த யூடியுபர்கள் கிட்ட ‘டைரக்டர் என் மகன்னு பெருமையா சொன்னாங்க. அப்பவும் அம்மா கண்ணுல ஆனந்தக் கண்ணீர். அடுத்த படத்துல பொருளாதார ரீதியாகவும் ஜெயிச்சி. அம்மாவுக்கும் அக்காவுக்கும் நிறைய செய்யணும்.'

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com