திருமதிகள் தீர்மானிக்கிறார்கள்!

திருமதிகள் தீர்மானிக்கிறார்கள்!

மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களில் அட்லியுடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதிய  ரமண கிரிவாசன், தமிழ்த்  தொலைக்காட்சி சீரியல் உலகில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர். வேறுபட்ட களங்களைச் சார்ந்த கதைகள், பின்னணிகள், பாத்திரங்கள், நடிகர்களை அறிமுகம் செய்த பெருமைக்குரியவர். அவரிடம் பேசியதிலிருந்து...

திருசெந்தூர் சொந்த ஊர். பாளையங்கோட்டையில் பள்ளிப்படிப்பு.  பிறகு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்தபோது கலைநிகழ்ச்சிகளில் ஆர்வம்காட்டினேன். அதன்பின்னர் அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்தேன். இயக்குநர் அழகம்பெருமாளிடம் உதயா படத்தில் உதவி இயக்குநராக இருந்தேன். அதன் பின்னர் விஜய் டிவியில் டாப் டென் ஷோ போன்ற நான்&பிக்‌ஷன் நிகழ்ச்சிகளைப் பண்ணும் வாய்ப்பு கிடைத்து, ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் சீரியல்கள் பக்கம் வந்தேன். முதன்முதலில் நான் செய்தது இது ஒரு காதல் கதை என்ற தொடர். டிவியில் முழுமையாக காதலை மையமாக வைத்து வந்த முதல் தொடர் என்று சொல்லலாம். இது பெரிய ஹிட் என ஆகாவிட்டாலும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

அதற்குப்பிறகு பெரிய திருப்புமுனையாக அமைந்தது கனாகாணும் காலங்கள். இந்த தொடரை எடுப்பதில் எங்கள் டிவி நிறுவனத்திலேயே தயக்கம் இருந்தது. ஏனெனில் முழுமையாக பள்ளிகளில் நடக்கும் கதை. இதன் மீது குடும்பத்தலைவிகளுக்கு என்ன ஆர்வம் இருக்க முடியும்? பார்ப்பார்களா என தயக்கம். அச்சமயம் விஜய் டிவியின் பொதுமேலாளர் ரவி மேனன், துணிந்து ஆதரவளித்தார். அதை எழுதி இயக்கினேன். எதிர்பாராத வெற்றி. இது தந்த துணிச்சலில் மதுரை என்ற தொடரை தொடங்கினோம். இதற்கு முன்பாக சீரியல்கள் எல்லாம் சென்னை சார்ந்தவையாக வீடுகளுக்குள் நடப்பவையாக  இருந்தன. இந்த சீரியல்தான் முழுக்க மதுரையை அடிப்படையாகக் கொண்டது.

காதலிக்க நேரமில்லை சீரியல் முழுக்க சிங்கப்பூரில் செய்தோம். அப்போதெல்லாம் விஜய் டிவியில் வித்தியாச வித்தியாசமாக செய்து பார்த்தோம். பிறகு சரவணன் மீனாட்சி, ஆபீஸ் போன்ற பெரிய சீரியல்களைச் செய்தோம்.

விஜய் டிவியில் 2006& 2016 வரை சீரியல்களுக்கான பொறுப்பில் அதாவது ‘பிக்‌ஷன் ஹெட்' என்று சொல்வார்கள், அந்த பதவியில் இருந்தேன். அப்ப நிறைய முயற்சிகள், புது கதைகள், புது தயாரிப்பாளர்கள், புதிய நடிகர்கள். இயக்குநர்கள் என நிறைய முயற்சிகள் செய்து விஜய் டிவி என்றால் வித்தியாசமாக இருக்கும் என்ன்ற தோற்றத்தை உருவாக்கினோம். 2016இல் அங்கிருந்து வெளியே வந்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களுக்கு அட்லியுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கினேன். இப்போது அவர் அடுத்து பண்ணும் ஷாருக்கான் படத்துக்கு திரைக்கதை வசனம் செய்துகொண்டிருக்கிறேன். இப்போது ஒரே ஒரு சீரியல் மட்டும் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு கதையை செட் பண்ணித் தொடங்கிவிட்டால் போதும். அதன் பிறகு பார்வையாளர்களை ஏமாற்றாமல் நேர்மையாகக் கொண்டுபோனாலே போதும்; எந்த ஒரு சீரியலும் நீண்ட நாட்களுக்கும் வெற்றிகரமாகப் போய்க்-கொண்டிருக்கும். சீரியல்பார்ப்பது அந்த நேரத்துக்கு ஒரு பழக்கமாகிவிடும். அது பார்வையாளர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி விடும். நாமாக எதையும் சொதப்பாமல் இருந்தால் அதைத் தொடர்ந்து பார்ப்பார்கள்.

 நம்ம டெக்னிக் என்னான்னா முதல் இரண்டு மாதத்தில் கதாபாத்திரங்களை ஸ்ட்ராங்கா பில்ட் பண்ணிருவோம். அதன் பின்னர் குட்டி குட்டியான விஷயங்கள் பண்ணிகிட்டே இருப்போம். தொடர்ந்து போய்கிட்டிருக்கிற கதை ஒரு பக்கம் இருக்கும். அதில் ஒரு இருபது எபிசோட்கள் வரை போறமாதிரி குட்டியா ஒண்ணு ப்ளான் பண்ணுவோம். ஒவ்வொரு இருபது எபிசோடும் ஒரு படம் மாதிரி இருக்கும். அது முடிஞ்சதும் வேற பிரச்னை ஆரம்பிக்கும். அப்படியே போய்கிட்டே இருக்கும்.

காக்கி என்ற சீரியலை மிகவும் நம்பி பண்ணினோம். நான்கு போலீஸ்காரர்களின் கதை. ஆனால் அது சரியா போகலை. முடிஞ்சதும் அது ஆண்களின் கதை அதனால் எடுபடலை என்று சொன்னார்கள். சர்வதேச அளவில் ஸ்டார்வேர்ல்டு போன்ற சானல்களில் ஹிட் ஆன கதைகள் வெவ்வேறு வகைகளைச்

சேர்ந்தவையாக இருக்கும். அதே மாதிரி தர்மயுத்தம் சீரியல். அதுவும் நீதிமன்ற கதை. ரொம்ப எதிர்பார்த்து பண்ணினோம். அரவிந்த் கிருஷ்ணா தயாரிப்பு. கிட்டி, கார்த்திக் என அருமையான தயாரிப்பு. ஆனால் அதுவும் சரியா க்ளிக் ஆகலை. இதெல்லாம் நாங்கள் ஏமாற்றம் அடைந்த சீரியல்கள். அதே சமயம் சாதாரணமா ஆரம்பிச்சு ஹிட் அடிச்சதும் நிறைய இருக்கும்.

எல்லாருமே டிவியில் வேலை செய்யும்போது அதிகமாக செஞ்சுதான் ஆகணும். இரண்டு சீரியல் ஒரே சமயத்தில் எழுதினால் இன்னும் அதிகமாக எழுதித்தான் ஆகணும். ஆனால் அது ஒரு பழக்கமாக மாறிவிடும். என்னைப் பொறுத்தவரை நான் சானலில் பணிபுரிந்த காரணத்தால் சீரியலுக்காக யாரிடமும் போய் அனுமதி வாங்கவேண்டிய தேவை இல்லை. அதே சமயம் வெளியே இருக்கும் ஒரு தயாரிப்பாளர் எனில் அவர் ஒன்றைத் தயார் செய்து, சேனலுக்குப் போய் ஒப்புதல் வாங்கிவரவேண்டிய அவசியம் இருக்கும். அதேசமயம் எனக்கு மேலே இருந்தவர்க்ளும் ஆதரவாக இருந்தார்கள். என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக மூன்று சீரியல்கள் எழுதி இருக்கிறேன். வசனங்கள் எல்லாம் நான் பேசிவிடுவேன். உதவியாளர்கள் அதைப் பதிவு செய்து, டைப் பண்ணி தாள்களாக எடுத்துவிடுவார்கள். நடிகர்களுக்கு வழங்கப்படும்.

சீரியலில் இருக்கும் முக்கியமான அம்சம் அது தரமாக இருக்கவேண்டும். அதே நேரம் அது பட்ஜெட்டுக்குள்ளும் இருக்கவேண்டும். இரண்டுக்கும் இடையில் ஓரிடத்தை நாம் தெரிவு செய்வது முக்கியமான அம்சம். ரொம்ப  போட்டு சுத்துசுத்துன்னு சுத்தினாலும் அந்த சீரியல் பார்வையாளர்களுக்குப் பிடிக்காது. ஆனால் நீங்கள் நினைக்கிற அனைத்து நேர்த்தியையும் இதில் புகுத்தமுடியாது. ஏனெனில் பட்ஜெட் பத்தாது. இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு தயாரிப்பாளராக செயல்படுவதுதான் இதில் சவால்.

ஒரு ஆர்டிஸ்ட் திடீரென்று ஒரு நாள் சொல்றார். நான் சினிமாவுக்கு பதினைந்துநாள் கால்ஷீட் கொடுத்திட்டேன். அதனால் இன்னும் 15 நாள் வரமுடியாதுன்னு. என்ன செய்றது? கதையில் அந்த பாத்திரம் ஒரு நாள் ஒரு ரூம்ல போய் பூட்டிக்கிடறமாதிரி பண்ணியாச்சு. அவர் திரையில் இருக்கமாட்டார். எல்லாரும் அவரைப் பத்தி பேசுவாங்க. அவர் இல்லாதது தெரியாமலே ஒரு மாதம் ஓட்டினோம். இப்பல்லாம் அவருக்குப் பதில் இவர்னு போட்டுடறது எளிதாகிடுச்சு.

நாம் இருவர் சீரியலில் நடிச்ச  ஒரு நடிகர்  தன் மகளுடைய பிரசவத்துக்காக மனைவியுடன் லண்டன் போகறமாதிரி ஆயிடுச்சு. ரொம்ப தரமான நடிகர் அவர். இப்ப, அவர் மூணுமாசம் இல்லை. அவர் இல்லைங்கிறது தெரியாதமாதிரியே சீன்களை மாத்தி எடுத்தோம். அவர் எங்கேன்னும் கேப்பாங்க. அவர் வயலுக்குப் போயிருக்காரு.. வெளியே போயிருக்காருன்னு, அப்பா தூங்கிட்டு இருக்காருன்னு சொல்லிடுவாங்க. அப்படி வெச்சு சமாளிச்சோம்.

நீண்ட நாட்கள் இந்த சீரியல்களில் நடிக்கும்போது ஒரு மாதிரி பந்தம் எல்லாரிடமும் உருவாகிடும்.

சரவணன் மீனாட்சி சமயத்தில் ராஜசேகர் சார்கிட்ட செந்தில் அவருடைய உண்மையான மகன் என நினைத்துக்கொண்டு எல்லோரும் பேசுவது உண்டு. ராஜசேகர் சாருக்கு பையன் கிடையாது. சீரியலைத் தாண்டி செந்திலும் அவரும் அப்பா பையன் மாதிரியே இருப்பாங்க. எல்லோருமே குடும்பமாகப் பழகுவார்கள். அதுவும் கடைசிநாள் படப்பிடிப்பு என்றால் கண்ணீர்க் காட்சிகள் நிறைய இருக்கும். ஒரு குடும்பம் பிரிந்துசெல்லும்போது என்னமாதிரி இருக்குமோ அப்படி இருக்கும்.

செவன் சி சீரியல் ஷூட்டிங் கடைசி நாளில்  பசங்க அழுத அழுகை மறக்கவே முடியாது. தொலைக்காட்சித் தொடர் என்பது எழுத்தாளரின் மீடியம்தான். இயக்குநர் என்பவர் முக்கியம்தான். யார் எழுதினாலும் இயக்குநர்தான் உயிர் கொடுக்கிறார். இருந்தாலும் பாத்திரங்களை எப்போ எப்படி ஏற்றி இறக்குவது, திருப்பங்களை கொண்டுவருவது என்பதெல்லாம் செய்வது அதன் திரைக்கதை எழுத்தாளர்தான். எனவே டிவி சீரியல்கள் என்பவை எழுத்தாளரின் மீடியம்தான். இப்போது ஒரே கதையை வங்கமொழி, தெலுங்கு, மலையாளம் என்று எடுக்கிறார்கள் இல்லையா...  தேவையான கதையை ஒரு மொழியில் வலுவாக செட் செய்துவிட்டால் எல்லா இடத்துக்கும் போகும். இதற்கெல்லாம் காரணமாக அமைவது கதையை அமைக்கும் எழுத்தாளர்தான்.

டிவியில் வரும் சீரியல்களுக்கு பெண்கள்தான் இலக்கு. பெண்களுடன் சீரியல்கள் தொடர்புடையவையாக இருந்தால்தான் பார்ப்பார்கள். உறவுகள் தொடர்பான விஷயம் முக்கியம். ஒரு அப்பா தன் ஐந்து பெண்களுக்கு கஷ்டப்பட்டு கல்யாணம் செய்துவைத்த மெட்டி ஒலி கதை மாதிரி.. இந்த உறவுகள் தொடர்பான விஷயங்களில் சொல்லப்படாத ஒரு அம்சத்தைப் பிடித்து நல்லா எடுத்தால் அந்த சீரியல் வெற்றி பெற வாய்ப்பு இருக்கு. சரவணன் மீனாட்சி முழுக்க முழுக்க கணவன் மனைவி இடையில் இருக்கும் புரிதல்& புரிதல் இல்லாமை தொடர்புடையது. எல்லாமே உறவுச்

சிக்கல்கள்தான். பெரும்பாலான கதைகளில் ஒருவரை பிடிக்காத இருவர் ஒன்றிணைந்து ஒருவரை ஒருவர் எப்படி புரிஞ்சிகிறாங்க என்பதுதான் அடிநாதமாக அமைந்திருக்கும். அண்ணன் தம்பி பிரச்னைகள். குண்டாக இருக்கிற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும் சிரமங்கள், கறுப்பாக இருக்கும் பெண்ணின் சிரமங்கள் போன்ற நம் வாழ்வில் பார்க்கும் சின்ன சின்ன விசயங்கள்தான் சீரியல். இப்போது பாக்ய லட்சுமி என்ற சீரியல் ஹிட் ஆக உள்ளது. வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவியை பெரிதாக எந்த விஷயத்திலும் ஈடுபடுத்தமாட்டோம். அந்த மாதிரி ஒரு பெண் எல்லா விஷயத்தையும் சமாளிக்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இதன் கதை. பாண்டியன் ஸ்டோர்ஸ் &ஒன்றாக இருக்கும் நான்கு அண்ணன் தம்பிகள் எப்படி ஒன்றாக இருக்கிறார்கள்? பாரதிகண்ணம்மா &சந்தேகப்படும் கணவனிடம் இருந்து பிரியும் மனைவி எப்படி வாழ்கிறாள்?

எல்லாமே நாம் பார்ப்பதுதான். திரைக்கு ஏற்றமாதிரி ட்ராமா சேர்த்து செய்யும்போது ரசிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு சீரியல் பத்தி மீம்ஸ் நிறைய வந்தால் சீரியல் நல்லா போகுது என்று அர்த்தம்.

ராகவேந்திரர் என்று ஒரு சீரியல் செய்தோம். அதில் தினேஷ் என்ற நடிகர் நடித்தார். சீரியல் முடியும்வரை அவரும் விரதம் இருந்தார். ஒருமுறை அவரை மந்திராலயத்திற்கு அழைத்துப் போனோம். பார்த்தால் அங்கே இருந்த எல்லாரும் வந்து அவர் காலில் விழ ஆரம்பித்துவிட்டனர். திரையில் பார்த்த விளைவு அது.

ஆபீஸ்  என்ற தொலைக்காட்சி தொடரில் விஸ்வ  நாதன் என்றொரு பாத்திரம் உண்டு. அவரை எல்லோருக்கும் அட்வைஸ் பண்ணுவார். அவருக்கு நிஜமாகவே பல தொழிலதிபர்கள் அழைத்து, நீங்கள் சொல்லும் ஆலோசனைகளைப் பின்பற்றுகிறோம் என்பார்கள். இவர் திரைப்படம் ஒன்றில் சின்ன பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வரவே சிவகாசியில் படப்பிடிப்புக்குச் செல்கிறார். அங்கே அச்சகம் ஒன்றில் படப்பிடிப்பு. ஹீரோ& ஹீரோயினுக்கு கேரவான் வழங்கப்பட்டுள்ளது, இவர் ஒரு ஓரமாக நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார். அப்போது அந்த பிரஸ் ஓனர் அங்கே வருகிறார். இவரைப் பார்த்ததும் பதறிப்போய், அழைத்துப்போய் ஏசி ரூமில் அமர வைத்து, படப்பிடிப்பு நடந்த ஐந்து நாட்களும் வீட்டில் இருந்து சாப்பாடு வர வைத்து உபசரித்துள்ளார்.

கனாகாணும் காலங்கள் சீரியலில் சங்கவை என்ற பாத்திரத்தில் நடித்த பெண் இறப்பதுபோல் வரும். உடனே சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களில் இருந்து துக்கம் தாளாமல் அழுதுகொண்டிருப்பதாக தொலைபேசி அழைப்புகள். அதனால் அவர்களை அழைத்து அந்த பெண்ணுடன் ஒரு சந்திப்பு நடத்தி, அவங்க சாகலை.. இது நடிப்புதான் என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தோம்.

டிவி சீரியல்கள் என்னமாதிரி மாறுதல் அடையும்னு என்னைக் கேட்கிறீங்க. எனக்கெல்லாம் இதில் ஏமாற்றம்தான். ஏதாவது மாறும் என்றுதான் நான் எதிர்பார்த்திருந்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அன்றாட மனிதர்களின் தேவைகள் எளிய கதைகளைத் தான் சார்ந்திருக்கின்றன என்பதே திரும்பத் திரும்ப உண்மையாகி இருக்கிறது. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் இன்னும் மாமியார் மருமகள் கதைகளில் இருந்து வெளியே வரமுடியவில்லை. 2006&இல் மாறுதலான கருக்களை எடுத்து செய்தபோது நாங்கள் பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்த்தேன். அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை.

டிவி பார்க்காவிட்டாலும் மொபைலில் பார்க்கிறார்கள் என்பதுதான் மாற்றம். ஆனால் அடிப்படையான உள்ளடக்கம் மாறவில்லை. ஒருவேளை ஏராளமான எபிசோட்கள் செய்வதால் இப்படி இருக்கிறதோ? சினிமா போல் மூன்று மணி நேரமோ வெப்சீரீஸ் போல் எட்டு எபிசோட்கள் எனவோ இருந்தால் மாறுமோ? தெரியவில்லை.

(நம் செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

ஆகஸ்ட், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com