தொல் மனதின் சந்தோஷம்

தொல் மனதின் சந்தோஷம்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், பதினோரு கவிதைத் தொகுப்புகள், பதின்மூன்று கட்டுரை தொகுப்புகள் என்று எழுதிக் குவித்தவை ஏராளம். பெற்ற விருதுகளின் பட்டியலும் அதிகம். ஆனாலும் எதையும் சாதிக்காதவர் போல், எளிமையான வார்த்தைகளுடன் பேச்சைத்தொடங்கினார் பாடலாசிரியர் யுகபாரதி.

“என்னுடைய சிறுவயது சூழல் ரொம்பவே நல்ல சூழல். அப்பா பரமசிவம் இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர். நிறையத் தோழர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். அரசியல், சமூகம், இலக்கியம் என ஏதேதோ பேசுவார்கள்,  அதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அவ்வப்போது  தேநீர் கொண்டுபோகும் சாக்கில் நானும் அம்மாவும் (வசந்தகுமாரி) அந்த உரையாடல்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.

 ‘நீங்க என்னவோ பேசுறீங்க, எனக்கு ஒண்ணுமே புரியலனு' அப்பாவிடம் கேட்டதற்கு, மாக்சிம் கார்கி எழுதிய  ‘தாய்' நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படிக்க ஆரம்பித்தால் ஒன்றுமே புரியவில்லை. அப்போது எனக்கு பன்னிரண்டு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார். அது ஏ.கே.கோபாலனுடைய ‘நான் என்றும் மக்கள் ஊழியனே' என்ற புத்தகம். அவர் ஒரு கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர். அந்த புத்தகத்தைப் படித்த பிறகு அப்பா மீதான பார்வை மாறிவிட்டது. லெனின் தேர்வு நூல்கள் எல்லாம் வாங்கி வைத்திருந்தார். அதைப் பார்க்கவே பிரமாண்டமாக இருக்கும்.

 அந்த சமயத்தில், அப்பாவை சந்திக்க செல்லகணேசன் என்ற தமிழ் ஆசிரியர் வருவார். அவருக்கும் இலக்கிய ஆர்வம் உண்டென்பதால், எனக்கு நண்பராகிவிட்டார்.  பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததும், சைக்கிளை எடுத்துக் கொண்டு  அவர் வீட்டிற்கு சென்றுவிடுவேன். அவர்தான் எனக்கு  தமிழ்இலக்கணம் சொல்லிக் கொடுப்பார். அங்குதான் எனக்கு வைரமுத்து, மேத்தா, இன்குலாப், கலாப்ரியா, கல்யாண்ஜி போன்றோரின் எழுத்துகள் அறிமுகமாயின.

செல்லகணேசன் எனக்குச் சொல்லிக்கொடுத்தது யாப்பாக இருந்தாலும், நான் படித்ததெல்லாம் புதுக்கவிதையாக இருந்தது. அவர் என்னை தொடர்ந்து எழுதச்  சொன்னார். பாரதியார், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோரது கவிதைகளைப் படிக்கக் கொடுத்தார்.

சிரமப்பட்டு அவற்றைப் படித்த பிறகு, யாப்பு நன்றாக எழுத ஆரம்பித்துவிட்டேன். கூடவே நிறையப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டேன். படிக்க ஆரம்பித்ததும், எழுத வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது. முதன் முதலாகக் கவிதை ஒன்று எழுதி, அப்பா சார்ந்திருந்த இயக்கம் நடத்திய ‘தமிழர் கண்ணோட்டம்‘என்ற பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். படைப்புகளைத் தேர்வு செய்யும் முகவரிக்கு அனுப்பாமல், நிர்வாக முகவரிக்கு அனுப்பியதால், கவிதை பிரசுரமாகாமல் திரும்பி வந்துவிட்டது. பின்னர் சரியான முகவரிக்கு அனுப்பி வைத்தோம். இதற்கெல்லாம் எனக்கு உறுதுணையாக இருந்தது சீனு அண்ணன்.

 “பதின்மூன்று வயது பள்ளி மாணவன் எழுதிய கவிதை' என நான் எழுதிய ‘ஈழ ஏக்கம்‘ கவிதை வெளியாகியிருந்தது. பத்திரிகையில் பெயர் பார்த்ததும் ஆர்வம் அதிகரித்துவிட்டது. என்னென்ன இதழ்களை எல்லாம் படிக்கின்றனோ, அதற்கெல்லாம் கவிதை எழுதி அனுப்பினேன். பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் ஏறக்குறைய ஐந்நூறு கவிதைகளுக்கு மேல் எழுதியிருந்தேன். ஒவ்வொரு இதழும் எப்படி எதிர்பார்க்கிறார்களோ, அதற்கேற்ற மாதிரி கவிதைகளை எழுதி அனுப்புவேன். அம்மா - அப்பா இருவரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

பள்ளியில் நான் தான் மாணவ தலைவன் என்பதாலும், முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன் என்பதாலும் எல்லா ஆசிரியர்களும் என் மேல் அன்பாக இருப்பார்கள். பள்ளியில் ஐம்பது கூட்டம் நடக்கிறது என்றால், அந்த ஐம்பது கூட்டத்திலும் நான் பேசியிருக்கிறேன். பத்தாம் வகுப்பு முடித்ததும் அறந்தாங்கியில் உள்ள அரசுத் தொழில்நுட்பக் கல்லூரியில் பாலிடெக்னிக் சேர்ந்தேன். அங்கு, இக்பால் என்ற பேராசிரியர் எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரே கல்லூரி விடுதியின் வார்டனாகவும் இருந்தார். இரவு முழுக்க நானும் அவரும் இலக்கியம் பற்றி  பேசிக் கொண்டிருப்போம்.

அதேபோல், எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் தலைமையில் வாராவாரம் ஒன்று கூடிவிடுவோம். சங்க இலக்கியம், நவீன இலக்கியம் என அவருடனான பேச்சு  நீளும். தஞ்சாவூரிலேயே தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளைச் சந்தித்துவிட்டேன்.  நல்ல நண்பர்கள், நல்ல புத்தகங்கள், நல்ல சூழல், எல்லோருடைய ஆதரவான வார்த்தைகளும் எனக்கு கிடைத்தது.

பாலிடெக்னிக் முடிக்கும் போது, நான் எழுதிய ஆயிரம் கவிதைகள் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தன.

அப்போது, கரந்தை கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்திருந்த நண்பன் சரவணன் (இயக்குநர் ராஜு முருகனின் அண்ணன்) சென்னை செல்வதாக இருந்தான். நானும் அவனோடு சென்னைக்கு கிளம்புவதாக இருந்தேன். அம்மா, பத்திரிகையில் வெளிவந்திருந்த என்னுடைய கவிதைகளின் ஆல்பத்துடன், பக்கத்து வீட்டு அக்காவிடம் கடன் வாங்கி வைத்திருந்த ஆயிரத்து முன்னூற்று ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டார். எனக்குப் பத்திரிகைத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. அவனுக்கோ சினிமா மீது ஆசை.  சென்னை வந்ததும், அது முற்றிலும் வேறு ஒரு வாழ்க்கையைக் கொடுத்தது.

நான் வேலை தேடி, ஒவ்வொரு பத்திரிகை அலுவலகமாக  ஏறி இறங்கினேன். அப்போதுதான்  தெரிந்தது, பத்திரிகையில் வேலை பார்ப்பதற்கும், கவிதை எழுதுவதற்கும் சம்பந்தமே இல்லை என்று. கட்டுரை எழுதத் தெரியுமா என்று கேட்டார்கள். அதுவரை நான் கட்டுரையே எழுதியதில்லை.

 வலம்புரிஜான் ஆசியராக இருந்த ‘ராஜரிஷி' பத்திரிகையில் வேலைக் கேட்டு சென்றிருந்தேன். அங்கு, துரை பொறுப்பாசிரியராக இருந்தார். அவர் வித்யாஷங்கர் என்ற பெயரில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அந்த தொகுப்பை நன்றாகப் படித்திருந்ததால், அவரின் கவிதைகளை மனப்பாடமாகச் சொன்னேன். அவர் உற்சாகமாகிவிட்டார். பிறகு என்னைப் பற்றி கேட்டுக் தெரிந்து கொண்டார். ‘சரி நாளைக்கு வா' பேசலாம் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு தொடர்ந்து பத்து நாட்கள் அலுவலகத்திற்குச்

செல்வேன், சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவேன். ஒரு நாள் என்னை அழைத்து, ‘நீ என்ன அலுவலகத்திலேயே அமர்வதில்லையெனப் புகார் வருகிறதே' என்றார். ‘நான் எதுக்கு சார் அலுவலகத்துக்கு வரனும்?' என்றேன். “உன்னை வேலைக்குச் சேர்த்து பத்து நாட்கள் ஆகிடுச்சிப்பா' என்றார்.

என்னை வேலைக்கு சேர்த்ததை என்னிடம் அவர் சொல்லவேயில்லை. பிறகு தான் எனக்கு என்ன வேலை என்பதை சொன்னார். அந்த சமயத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டிருந்தார். அதைப் பற்றி கட்டுரை எழுதச் சொன்னார். முதல் முதலாக பத்திரிகை அலுவலகத்தில் உட்கார்ந்து நான் எழுதிய கட்டுரை அது. ஒரு மாபெரும் அரசியல் கட்சித் தலைவரைக் காத்திரமான சொற்களால் என்னாலும் கண்டிக்க முடிந்தது. கட்டுரையை முடித்து அவரிடம் நீட்டினேன். ஒரே மூச்சில்  வாசித்து பெரிதாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பாராட்டுவது போலச் சின்னப் புன்முறுவல்கூட அவரிடமிருந்து வெளிப்படவில்லை. ‘நாளை வருகிறீர்களா?' என்று மட்டும் கேட்டார்.

 அதேபோல், நான் முதன் முதலாக ரிப்போர்டிங் சென்ற நிகழ்வு, மதுரையில் லீலாவதி படுகொலை. அவர் தங்கியிருந்த சிறிய வீட்டில் பாரதியாரின் சிலை ஒன்று இருந்தது. அதை வைத்து தான் முழுக்கட்டுரையையும் எழுதினேன். அந்த கட்டுரை அனைவரது கவனத்தையும் பெற்றது. ஒன்றரை வருடத்தில் ‘ராஜரிஷி‘ பத்திரிகை நின்றுவிட்டது. பொறுப்பாசிரியராக இருந்த வித்யாஷங்கர் விகடனில் வேலைக்கு சேர்ந்துவிட்டார். “உனக்கு வேலை கிடைக்க ஓரிரு மாதங்கள் ஆகும். எழுதி வைத்திருக்கிற கவிதைகளை எல்லாம் சேர்த்து ஒரு தொகுப்பு கொண்டு வா' என்றார். அப்படித்தான் என்னுடைய முதல் கவிதை தொகுப்பான ‘மனப்பத்தாயம்' வந்தது. அதற்கான உரிய அங்கீகாரமும் கிடைத்தது.

 ‘ராஜரிஷி' பத்திரிகையில் வடிவமைப்பாளராக இருந்த மதிராஜ், கணையாழியின் வடிவமைப்பாளராகவும் இருந்தார். ‘கணையாழியில் ஆள் தேவைப்படுகிறது நீ வர்றீயா?' என்றார். உடனே வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். ஆறு வருடங்கள் அங்கு வேலைப்பார்த்தேன். கணையாழி அலுவலகத்திற்கு பக்கத்திலேயே பாலன் இல்லம் இருந்ததால், நல்லக்கண்ணுவைப் பார்க்க தினந்தோறும் செல்வேன். நிறையப் புத்தகங்கள் கொடுத்து படிக்கச் சொல்வார். அரசியல் பற்றி நிறையப் பேசுவார்,' என்றவர், முதல் பாடல் எழுதும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை சொல்லத் தொடங்கினார்.

‘என்னுடைய முதல் கவிதை தொகுப்பு பலராலும் அறியப்பட்டதால், கணையாழி வாசிக்கிற இயக்குநர் லிங்குசாமியின் உதவி இயக்குநர் தியாகு என்பவர், என்னை லிங்குசாமியிடம் அறிமுகப்படுத்தினார். ஒரு ரூபாய்க்கான சூழலைச் சொல்லி, பாடல் எழுதச் சொன்னார் லிங்குசாமி. எனக்கு எப்படிப் பாடல் எழுதுவது என்றே தெரியவில்லை. ஒரு இரவு முழுக்க பாடலை எழுதினேன். ஒப்பிட்டு ஒப்பிட்டுத்தான் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்' பாடலை எழுதி முடித்தேன். பாடல் வரியில் லிங்குசாமிக்கு பெரிய விருப்பம் இருப்பதாகக் காட்டவில்லை. என்றாலும், எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு அவ்வரிகள் மிகவும் பிடித்திருந்தன. படம் வெளியாகிப் பாடல் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை எனில்,இரண்டொரு நாளில் படத்திலிருந்து அப்பாடலை நீக்கிவிடும்படி அதன் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரி சொன்னதாக லிங்குசாமி தெரிவித்தார். ஆனால், பாடலும் படமும் மக்களால் கொண்டாடப்பட்டதால் அப்படியே விட்டுவிட்டார்கள்.

அப்போது எங்கள் வீட்டில் ஒரு நல்ல டேப் ரெக்கார்டர் கூட இல்லை என்பதால், பக்கத்து வீட்டிற்குச்  சென்று பாடலைக் கேட்ட அம்மா உணர்ச்சி வயப்பட்டு மயங்கிவிழுந்துவிட்டார். நான் தொடர்ந்து பாடல் எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பிறகு எட்டு மாதங்கள் எந்த பாடலும் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த இடைவெளியில் யாப்பை எப்படிப் பிரித்து எழுதுவது, தத்தகாரத்தை எப்படிப் பிரிப்பது, டியூனுக்கு ஏற்றார் போல் எப்படி எழுதுவது என பழைய பாடல்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். பக்தி இலக்கியம், சித்தர் பாடல் ஆகியவற்றை அந்த சமயத்தில் முழுவதுமாக வாசித்து மனனம் செய்தேன். இன்றைக்கு நான் எழுதிக் கொண்டிருக்கும் பாதி பாடல்கள் அன்று கேட்ட பாடல்களின் தாக்கத்தால் எழுதுபவைதான்.

இரண்டாவது பாடலான ‘காதல் பிசாசு‘-வை பதினைந்து நிமிடங்களில் எழுதி முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் வித்யாசாகர் வியந்துவிட்டார். அவர் தான் என்னை வளர்த்தவர். தொடர்ந்து இருநூறு பாடல்கள் வரை எழுத வாய்ப்புக் கொடுத்தார். அதன் பிறகு நிறைய பேருக்கு பாடல் எழுத ஆரம்பித்துவிட்டேன். இப்பொழுதெல்லாம், டியூன் போடும் போதே பாடலை எழுதிவிடுகிறேன். பாடல் எழுதுவது  சிரமம் நிறைந்த ஒன்றாக எனக்கு  இருக்கவில்லை.

 பத்திரிகையில் வேலை பார்த்ததால், எனக்கு உரைநடை எழுதப் பிடிக்கும். இரண்டாவது பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்க ஆறேழு மாதங்கள் ஆன காலத்தில் பழைய பாடல்களைக் கேட்டேன். பாடலை ஒருவர் எழுதியிருப்பார், ஆனால், இணையத்தில் வேறு ஒருவரின் பெயர் இருக்கும். உண்மையில் யார் அந்தப் பாடலை எழுதியிருப்பார் என்று தேடத் தொடங்கியபோது, பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதை வைத்துத்தான் ‘கல்கி' இதழில்  ‘நேற்றைய காற்று' என்ற தொடரை எழுதினேன். அதேபோல், திரைப்படப் பாடல்களை எப்படிப் புரிந்துகொள்வது என்ற குழப்பம் எனக்குள் இருந்தது. தமிழில் அதிகம் பாடல் எழுதியவர்கள் மா.பொ.சி கட்சியிலிருந்த பாடலாசிரியர்கள் தான். கா.மு.ஷெரீப், கு.சா. கிருஷ்ணமூர்த்தி, மருதகாசி, கே.டி.சந்தானம் என அந்தப் பட்டியல் பெரியது. இடதுசாரிகளில் பட்டுக்கோட்டையார் மட்டும் தான். திமுக- அதிமுக வரிசையில் கண்ணதாசன் வருவார். பெரியாருடன் பாரதிதாசன் இருந்தார். பெரியாரின் இலக்கிய முகமாக பாரதிதாசன் இருக்க, அவரின் வெகுஜன முகமாக உடுமலை நாராயண கவி இருந்தார். கலைவாணரின் பாதி பாடல்கள் உடுமலையார் எழுதியவை தான். உடுமலையாரிடம் இருந்த மருதகாசி, திராவிட இயக்கத்துக்கு எதிராக சிந்திக்கிறார். இது எப்படி நிகழ்கிறது என்ற தேடல் தான் ‘தத்தகாரம்' புத்தகம் எழுதியதற்கு காரணம். இதுபோன்ற தேடலின் தொடர்ச்சியாகவே அடுத்தடுத்த புத்தகங்களை எழுதினேன். கட்டுரை எழுதுவது, ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவது போன்றவை மிகவும் விருப்பமானவை. அதை வேகமாகவும் செய்வேன்.

இப்போதுதான் என்னை எல்லோருக்கும் தெரிகிறது. ஆரம்ப நாட்களில் அப்படி இல்லை. ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து திண்டுக்கல் போயிருந்தேன்.  நண்பர்களுடன் டீ கடையில்  பேசிக் கொண்டிருந்த போது, முதியவர் ஒருவர் வந்து, ‘சார் நீங்க யுகபாரதிதானே. சினிமா பட்டெல்லாம் எழுதுவீங்கதானே. உங்களைத்தான் சார் பார்க்கனும்னு இருந்தேன்' என்றார். ‘பிரிவோம் சந்திப்போம்' படத்தில் ‘அந்தாதி‘ பாடலை நினைவுபடுத்திப் பேசினார். அந்த பாடலில் ‘மறைபொருள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பேன். ‘அதற்கான அர்த்தம் மறைந்திருப்பதா? அல்லது கடவுளைக் குறிப்பதா?' என்று கேட்டார். அப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவேயில்லை. அவருடன் நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். நம் பாடலை யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை உணரத் தொடங்கினேன். நான் எந்த பாடலை எழுதத் தொடங்கினாலும் அவரின் முகம் ஞாபகத்திற்கு வந்துவிடும்.

அதேபோல், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கிய ‘குக்கூ' படத்திற்கு குடும்பமாக சென்று படம் பார்த்து வந்தோம். என்னுடைய மனைவி அன்புச் செல்வி மட்டும் முகத்தை ஒருமாதிரி வைத்துக் கொண்டிருந்தார். ‘என்னாச்சி' என்று கேட்டேன். ‘எனக்கு படம் பிடித்திருக்கிறது. ஆனால், பாடல் தான் தவறா எழுதியிருக்கீங்க' என்றார். ‘என்ன தப்பு' என்று கேட்டேன்,‘பொட்ட புள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிடுச்சி'னு பாடல் எழுதியிருக்கீங்க. படத்தில் இருவருக்குமே கண்பார்வை கிடையாது, ‘பொட்ட' என்பதற்கு கண்பார்வை இல்லாதவர் என்றும் ஓர் அர்த்தம் இருக்கிறது. கண் தெரியாத பெண் தொட்டால் கொட்டம் அடங்கிடுமா?' என்று கேள்வி எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்வி, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

என்னுடைய மகள் இந்துஸ்தானி இசை கற்றுக் கொண்டிருப்பதால், தமிழ்ப் பாடலை விட இந்திப் பாடல்களைத்தான் அதிகம் கேட்பார். ‘என்னைப் பத்தியெல்லாம் பாட்டு எழுதியிருக்கீங்களா?' என ஒரு முறை கேட்டார். இதை இசையமைப்பாளர் இமானிடம் சொன்னேன். அவருக்கும் இரண்டு மகள்கள். அவருடைய மகள்களும் இதையே கேட்டிருக்கின்றனர். அதற்காகத்தான் ‘கண்ணம்மா... கண்ணம்மா‘ பாடலில், ‘பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்‘ என்ற வரியை எழுதினேன். பாடலை மற்றவர்கள் கேட்டு சொல்வதற்கும் வீட்டில் மனைவியோ, மகளோ கேட்டு சொல்லும் போது, பாடல் ரசிக்கப்படுமா? படாதா? என்று முதலிலேயே தெரிந்துவிடும்,' என்றவரிடம் உங்களின் வரியில் வாணிஜெயராம் பாடவுள்ளாரே? என்றோம்.

‘வாணிஜெயராம், சுசிலா, ஜானகி, ஜெயச்சந்திரன் இவர்கள் பாடலுக்குள் பயணிப்பவர்கள். உதாரணத்திற்கு ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி‘ படத்தில் வரும் ‘என்னுள்ளில் எங்கோ‘ பாடல் இடம்பெறும் சூழலை வாணிஜெயராமுக்கு விவரித்திருப்பார்களா என்று தெரியாது. படத்தின் ஒட்டுமொத்த உணர்வையும் அந்த ஒரு பாடல் கொடுத்துவிடும். சில குரலுக்கு மட்டுமே அந்தத் தன்மை உண்டு. பாடலுக்குப் பாவம் என்ற ஒன்று உண்டு. ஒரு பாடல் வெற்றி பெறுவதற்கு வரிகளோ, மெட்டோ முழுக்காரணம்கிடையாது. என்னைப் பொருத்தவரை குரல்தான் முதன்மையானது. சிறந்த குரல் தான் பாவத்தை, உணர்வைக் கடத்தும்.

முதன் முதலில் காட்டில் பூத்த மல்லிகையை யாரோ ஓர் ஆதிப் பெண் தலையில் வைக்க ஆரம்பித்திருப்பார். இப்போது நாம் எத்தனை நூற்றாண்டு தாண்டி வந்திருக்கிறோம். ஆனால், காடு, மலை கடந்து இன்றைக்கு நகரத்தில், பஜாரில் பூ விற்றுக் கொண்டிருக்கும் அம்மாவிடம் பூ வாங்கிக் கொடுத்தால், பெண்கள் எவ்வளவு சந்தோஷப்படுகிறார்கள்! அந்த சந்தோஷம் என்பது தொல் மனதின் சந்தோஷம். இது தான் கலையின் அடிப்படை. அதை கண்டுபிடிக்கும் வேலையைத் தான் சினிமா பாடல் செய்கிறது என்று நம்புகிறேன். நீங்கள் என்ன மனநிலைக்குச் செல்ல விரும்புகிறீர்களோ, அந்த மனநிலைக்கு சினிமா பாடல் கொண்டு  சென்றுவிடும்,' என்று, கவிஞருக்கே உரிய நேர்த்தியுடன் நேர்காணலை நிறைவு செய்தார்.

செப்டம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com