‘நமக்குப் பிடிபடாத ஏதோ ஒரு மர்ம முடிச்சு!’

‘நமக்குப் பிடிபடாத ஏதோ ஒரு மர்ம முடிச்சு!’

கோடம்பாக்கத்தில் தம்பிக்கு எந்த ஊரு என்று விசாரித்தால் மதுரையிலிருந்து 150 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளவர்கள் கூட நான் மதுரைக்காரன் என்பார்கள். நானும் மதுரைக்காரன் தான். கே.கே.நகரில் பிறந்த அக்மார்க் மதுரைக்காரன்' என்று சிரிக்கிற தாஸ் என்கிற அருள்தாஸ், பெரிய கேமராமேன் ஆகவேண்டும். பாரதிராஜா, பாலா படங்களுக்கு ஒளிப்பதிவாளராக ஆகவேண்டும் என்கிற கனவோடு வந்து, இன்று தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத வில்லன், குணச்சித்திர நடிகராக மாறி மிரட்டுகிறார்.

கமல், ரஜினி, பா.ரஞ்சித், பாலா போன்றவர்களின் பெரிய படங்களில் நடிக்கிற தாஸை மிக குறைந்த பட்ஜெட் படங்களிலும் அதிகம் பார்க்க முடிவது சற்றே வியப்பை உண்டாக்கும் விஷயம்.‘ரொம்ப அடிமட்டத்துலருந்து வந்தவங்கிறதால சின்ன பட்ஜெட் படங்கள் என்னைத் தேடி வர்றப்ப, அவங்களால எவ்வளவு குடுக்க முடியுமோ அதை சந்தோஷமா வாங்கிட்டு நடிப்பேன்' என்று இயல்பாகப் பேசியவர், தனது ஃப்ளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பித்தார்.

‘நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முக்கியமான தாக்கமா இருந்தவர் பாரதிராஜாதான். ஸ்கூல் படிக்கிறப்பவே நிறைய படங்கள் பாக்க ஆரம்பிச்சதுனால பத்தாம் கிளாஸுக்கு மேல படிப்பு ஏறலை.மேல படிக்க விருப்பமில்லாம வெட்டியா மதுரையைச் சுத்தி வந்துக்கிட்டிருக்கப்ப, திடீர்னு ஒருநாள் கோபால்னு  பக்கத்து வீட்டு போட்டோகிராபர் கம் வீடியோகிராபர் என் கூட வந்து கூடமாட ஒத்தாசையா லைட் புடிச்சியினா செலவுக்கு காசு தருவேன்னு கூப்பிட்டார். உற்சாகமா போக ஆரம்பிச்சேன். அப்ப எனக்கு அவர் தந்த சம்பளம் ஒரு நாளைக்கு 30 ரூபா. அன்னைக்கு தேதிக்கு பெரிய பணம் அது. அந்தக் காசுல 3,4 படம் பாத்துரலாம்.

அவர் கூட சேர்ந்த கொஞ்ச நாள்லயே கல்யாண வீடுகள், வளைகாப்பு, பிறந்தநாள் பார்ட்டிகள் கவரேஜ்கள் பயங்கர பிசி ஆயிட்டேன். நிறைய நிகழ்ச்சிகளுக்கு என்னைத் தனியா அனுப்பவும் ஆரம்பிச்சார்.

அந்த சமயத்துலதான் அண்ணன்கள் பாலா, அமீரெல்லாம் தனியா படங்கள் இயக்கப்போறதா செய்தி வர ஆரம்பிச்சிருந்தது. அவங்க ரெண்டுபேருமே ஓரளவு பழக்கம்ங்கிறதால, ‘அடடே இனிமேலயும் மதுரையில வீடியோ கவரேஜ் பண்ணிக்கிட்டிருந்தா நாம என்னைக்கு பெரிய கேமராமேன் ஆகுறதுன்னு யோசிச்சி, தடாலடியா சென்னைக்கு கிளம்பி வந்துட்டேன்.

வந்தபிறகுதான் ஒரு கடலுக்குள்ள குதிச்சிருக்கோம். அதுல நீந்திக் கரையேறுறது அவ்வளவு ஈஸி இல்லைன்னு புரிஞ்சது.

பாலா அண்ணன் ‘சேது' படத்தை நடிகர் விக்னேஷை நாயகனாக வைத்து ‘அகிலன்' என்ற பெயரில் இயக்கத்தயாராகிக்கொண்டிருந்தார். அமீர் அண்ணனும் கதை சொல்லிக்கொண்டு வாய்ப்பு தேடித்தான் அலைந்துகொண்டிருந்தார். அவர்களே போராட்டத்தில் இருந்ததால் நமக்கெல்லாம் உதவ முடியாது என்கிற யதார்த்தத்தை புரிந்துகொண்டு, நானே உதவி ஒளிப்பதிவாளர் வேலை தேடி பல கேமராமேன்களை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தேன். அப்படி ஒன்றிரண்டு கேமராமேன்களிடம் உதவியாளராய்ப் பணி புரிந்து ஒளிப்பதிவாளராய் முதல் படம் கிடைத்தபோது பத்து ஆண்டுகளுக்கும் மேல் கடந்திருந்தது.

அப்படி ஒளிப்பதிவாளராய் நான் முதன்முதலாய் பணியாற்றிய படம் இயக்குநர் நாராயணமூர்த்தியின் ‘ஒரு பொண்ணு ஒரு பையன்'. இந்தப்பட வாய்ப்பு வந்தபோது கூடவே ஒரு சோதனையும் வந்தது.

அமீர் தனது முதல் இரண்டு படங்களை இயக்கிவிட்டு ‘பருத்தி வீரன்' படம் இயக்க தயாராகிக்கொண்டிருந்தார். திடீரென என்னை அழைத்தவர், ஒரு கேரக்டர் உள்ளது நீதான் பண்ணவேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டார். சரவணன் நடித்தாரே சித்தப்பு கேரக்டர்... அதுதான் .

ஒரு கேமராமேன் ஆவதற்காக பத்து வருடங்களுக்கும் மேல் போராடி முதல் பட வாய்ப்பு வந்திருக்கும் நிலையில் இப்படி ஒரு சோதனையா என்று குழம்பி, முடிவில் கேமராமேன் ஆவதற்குத்தானே இத்தனை காலப்போராட்டம். நடிப்பெல்லாம் நமக்கு செட் ஆகாது என்று ‘பருத்தி வீரன்' படத்தில் நடிப்பதை தவிர்த்து ஒளிப்பதிவாளராக முதல் அடியை எடுத்து வைத்தேன்.

விதி வலியது என்று சொல்வார்களே..அதுதான் என் வாழ்க்கையிலும் நடந்தது.

நான் ஒளிப்பதிவாளராக வேலை செய்த முதல் படம் மட்டுமல்ல அடுத்த இரண்டு படங்களும் சோபிக்காத நிலையில், ஒருநாள் இயக்குநர் சுசீந்திரன் என்னை அழைத்தார்.

அந்த அழைப்புதான் என் முதல் படமான ‘நான் மகான் அல்ல'. அவர் சொன்ன கேரக்டரில் நல்லபடியாக நடித்துவிட முடியுமா என்ற பயம் கொஞ்சம் இருந்தாலும், ‘பருத்தி வீரன்' என்ற கார்த்தி படத்தை மறுத்த நமக்கு மறுபடியும் ஒரு கார்த்தி படமே கிடைக்கிறதென்றால்? இதில் நமக்குப் பிடிபடாத ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருக்கிறதென்று குழம்பி அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அப்படம் வெளியானதும் கிடைத்த பாராட்டு வார்த்தைகளை இன்றும் மறக்க முடியவில்லை. அடுத்தடுத்த வாய்ப்புகள், குறிப்பாக நண்பர்களால் கிடைத்தன. அதே சுசீந்திரன் ‘அழகர்சாமியின் குதிரை'யில் அழைத்து வாய்ப்புக் கொடுத்தார். நண்பர் சீனு ராமசாமி ‘தென் மேற்குப் பருவக் காற்று'க்காக அழைத்து பெரிய வாய்ப்பைக்கொடுத்தார். அப்படி துவங்கிய பயணம் இன்று ஓய்வெடுக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

‘நான் மகான் அல்ல',‘தென்மேற்குப் பருவக்காற்று' ஆகிய இரு படங்களைப் பற்றி குறிப்பிட்டேன் அல்லவா? இந்த இரு படங்களுக்கும் பொதுவான மிக சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது.

‘நான் மகான் அல்ல' படத்தில் நான் நடித்தபோது அப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி ஒரு தம்பியாக எனக்கு அறிமுகம். இன்னொரு பக்கம்  தென் மேற்குப் பருவக்காற்று படத்துக்காக ஹீரோக்களைத் தேடித்தேடி டயர்டாகி இருந்தார் சீனு ராமசாமி. அடுத்துநான் சொல்லப்போகும் சம்பவம் ஒரே நாளில் நடந்தது.

ஒருநாள் காலை 6 மணிக்கு சீனு தனக்கு ஹீரோக்கள் சரியாக அமையாதது குறித்து வருத்தமாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் விஜய் சேதுபதி குறித்து சொல்லி வந்து பாக்கச்சொல்லட்டுமா என்று கேட்டவுடன் 9 மணிக்கு என்னை ஆபிஸில் வந்து பாக்கச்சொல்லுங்க என்றார். அப்போது என்னிடம் வி.சே.வின் எண் கூட இல்லை. உடனே நான் மகான் அல்ல படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய லெனின்பாரதியிடம் அவரது எண்ணை வாங்கி தகவலைச் சொன்னேன். 9 மணிக்கு சீனு ராமசாமி விஜய் சேதுபதி சந்திப்பு. 10 மணிக்கு அலுவலகம் வந்த ஒளிப்பதிவாளர் செழியனுக்கும் விஜய் டபுள் ஓ.கே. பல மாதங்களாக ஷூட்டிங் போக முடியாமல் காத்திருந்த உதவி இயக்குநர்களும் அவர் சூப்பர் சாய்ஸ் என்கிறார்கள். அன்று இரவே மதுரைக்கு டிக்கெட் போட்டு மறுநாள் ‘தென் மேற்குப் பருவக்காற்று'படத்தின் ஹீரோவாக படப்பிடிப்பில் பங்கெடுக்க ஆரம்பித்துவிட்டார் வி.சே.

அவர் கமிட் ஆகி சில நாட்களுக்குப் பிறகுதான் நானே அப்படத்தில் கமிட் ஆனேன். இதை எதற்கு சொல்ல வருகிறேனென்றால் திரையில் காண்கிற சினிமா மட்டுமல்ல... திரைக்குப் பின்னால் இருக்கிற சினிமாவும் பல மாய முடிச்சுகள் கொண்டது.

இன்று ஒருகாலத்தில் நான் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதை எனது நெருங்கிய நண்பர்கள் தவிர அத்தனை பேருமே மறந்துவிட்டார்கள். ஆனால் நான் என்னை ஒரு ஒளிப்பதிவாளராக இன்றும் உயிர்ப்போடுதான் வைத்திருக்கிறேன். புதிய தொழில் நுட்பங்கள் அத்தனையும் அத்துப்படி. இன்றும் நான் நடிக்கிற சில படங்களை, ஒளிப்பதிவாளர் ஓய்வு எடுக்கும் வேலைகளில் நானே ஒளிப்பதிவு செய்கிறேன். ஆனால் நடிப்புதான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது என்பதே யதார்த்தம்,' என முடிக்கிறார் அருள்தாஸ்.

நவம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com