நான் ராஜாக்கண்ணு ஆன கதை!

நான் ராஜாக்கண்ணு ஆன கதை!

மி மிக்ரி கலைஞராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய  மணிகண்டன் நடிகராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக தனது  திறமைகளை கிளைபரப்பி நிற்கிறார். அவர் இன்று ‘ஜெய் பீம்' படத்தின் மூலம், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ராஜாக்கண்ணு பாத்திரம் மூலமாக பாதிக்கப்பட்ட ஓர் இனத்தின் வலியையே திரையில் காட்டி உள்ளார்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். பள்ளியில் படிக்கும்போதிருந்தே மிமிக்ரி செய்ய ஆரம்பித்தேன். அதிலிருந்து கல்லூரியில் பொறியியல் படிக்கும் வரைக்கும் அது தொடர்ந்தது. படிக்கும்போதே கலக்கப்போவது யாரு விஜய் டிவி நிகழ்ச்சியில்  ரன்னர் அப் ஆக வந்தேன்.

‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரே குழப்பம். அடுத்து என்ன செய்யலாம் என்று. எனக்கு இருக்கும் ஒரே பலம் குரல் தான் என்பதை உணர்ந்து கொண்டு, ரேடியா ஜாக்கியாகலாம் என முடிவெடுத்தேன். நிறைய ரேடியோக்களில் வேலை பார்த்தேன். இந்நிலையில் கல்லூரி இறுதி ஆண்டு வந்துவிட்டது. அதனால் வேலையைவிட்டுவிட்டேன்.

கல்லூரியில் நடக்கும் கேம்பஸ் இண்டர்வியூவில் ஒரு நிறுவனத்தில் வேலைகிடைத்தாலும்,  வேலைக்குச் சேரவில்லை.  திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்தேன். அங்கு எதிர்பார்த்த மாதிரி எதுவும் அமையவில்லை. படமும் வெளியாகவில்லை என்பதால் அவரிடமிருந்து வெளியே வந்துவிட்டேன்.

அதன் பிறகு டிஸ்கவரி சேனலில் வரும் கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கும் குறும்படங்களுக்கும் டப்பிங் பேசினேன். என்னை பொருளாதார ரீதியாக நிலைநிறுத்திக் கொள்வதற்கு இந்த வேலை உதவியது. அதன் பிறகு ஒன்றரை வருடம் ஸ்டேஜ் ஆர்டிஸ்டாக இருந்தேன். அப்போது ‘நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவெடுத்த நண்பர் அருண்ராஜா காமராஜ், குழுவாக சேர்ந்து பணியாற்றலாம் என்று அழைத்தார். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குறும்படம் எடுத்தோம், அது சிறந்த குறும்படமாகத் தேர்வு செய்யப்பட்டது.

அதன் பிறகு,‘ஈசல்', ‘என் இனிய பொன் நிலாவே' போன்ற குறும்படங்களை எடுத்தோம். ‘என் இனிய பொன் நிலாவே' படத்தில்   நடித்ததோடு மட்டுமல்லாமல் வசனமும் எழுதினேன். அந்த படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த வசனகர்த்தா விருதுகளைப் பெற்றேன். அந்த சீசனில் சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு வழங்கினார்கள். இதனால் நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினேன். அதிலும் மிகமோசமான அனுபவம் தான் கிடைத்தது.

பிறகு எழுதுவதிலும் கதைவிவாதங்களில் கலந்துகொள்வதிலும் கவனம் செலுத்தினேன். நிறைய தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களைத் தமிழுக்கு டப்பிங் செய்யும் ஸ்கிரிப்ட் ரைட்டராக வேலை பார்த்தேன். இதற்கிடையே ‘பீட்சா 2 வில்லா' என்ற திரைப்படத்தில் வசன கர்த்தாவாகவும், இணை இயக்குநராகவும் வேலை பார்த்தேன். அந்த படத்தின் வேலைகளை முடித்த பிறகு, தனியாக ஒரு படம் எடுக்கலாம் என்ற ஆசை வந்ததால் ‘நரை எழுதும் சுயசரிதம்' என்ற ஒரு சுயாதீன திரைப்படம் எடுத்தேன். அந்த படத்திற்குத் திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதன்பிறகு நலன் குமாரசாமியின் ‘காதலும் கடந்து போகும்.' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது விஜய்சேதுபதியின் நட்பு கிடைத்து, அவர் மூலமாக விக்ரம் வேதா படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்து சேர்ந்தது.

‘விக்ரம் - வேதா'வின் இறுதிக்கட்ட பணிகள்

சென்றுக் கொண்டிருந்தபோது இயக்குநர்  ரஞ்சித்  அலுவலகத்திலிருந்து அழைத்தனர்.  நான் தொடங்கி நடத்திக் கொண்டிருந்த ‘டீ கடை தாட்ஸ்' என்ற யூடியூப் சேனலின் நிகழ்ச்சிகளைப் பார்த்த ரஞ்சித், ஒரு முறை அழைத்துப் பேசியிருந்தார். அதற்குப் பிறகு அவருடைய அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்ததால் ரொம்ப சந்தோஷப்பட்டேன். பிறகு ரஜினியின் மகனாக காலா படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

ஒருநாள் இயக்குநர் ஹலிதா ஷமீம் அழைத்து,‘சில்லுக் கருப்பட்டி' படத்தின் கதையை சொல்லி, இதில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். அவர்

சொன்ன முகில் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால், ஹலிதா அந்த கதாபாத்திரம் எவ்வளவு வலிமையானது என்று கூறினார். படம் வெளிவந்த பிறகு, முகில் கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், அதே குழு அடுத்த படத்திலும் பணியாற்றலாம் என்று முடிவெடுத்தோம். அந்த படம் தான் ‘ஏலே'. ஹலிதா ஏற்கெனவே படத்தின் கதையை தயாராக வைத்திருந்தார். அந்தப் படத்தில் சமுத்திரக்கனி சாருக்கு மகனாக நடித்தேன். பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இன்று வரை வாழ்த்து செய்தி வந்து கொண்டிருக்கிறது.

அடுத்ததாக ‘நெற்றிக்கண்' படத்தில் நடிப்பதற்காக இருபது நாட்கள் கேட்டிருந்தனர். ஒரே கட்டபடப்பிடிப்பில் என்னுடைய காட்சிகள் படமாக்க இருந்ததாலும், அந்த கதாபாத்திரத்தில் நகைச்சுவை இருந்ததாலும் நடித்தேன். அந்த கதாபாத்திரம் தான் எஸ்.ஐ.மணிகண்டன்.

‘நெற்றிக்கண்' படப்பிடிப்பு முடிந்ததும் ‘ஜெய் பீம்' படத்தின் கதை விவாதத்திற்கு இரண்டு நாள் வரச்சொல்லியிருந்தார்கள். கதைவிவாதம் முடிந்து கிளம்பும் போது, ராஜாகண்ணு கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களா என ஞானவேல் சார் கேட்டார். அவர் கேட்டதும் எனக்கு ஒரே சந்தோஷம்.

அந்த சமயத்தில் மற்ற வேலைகள் அதிகமாக இருந்தது. ஆனாலும் எப்படியாவது ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தேன். அதற்காக மற்ற வேலைகளை எல்லாம் மூன்று மாதத்திற்குத் தள்ளிவைத்துவிட்டேன்.

ராஜாக்கண்ணு மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. எல்லா நடிகர்களுக்கும் செஞ்சியில் நாற்பது நாட்களுக்கு பயிற்சி வைத்திருந்தார்கள். இருளர் மக்களுடனே தூங்குவது, எழுவது, சாப்பிடுவது என அந்த பயிற்சி நாட்கள் கடந்தன. பயிற்சி முடிப்பதற்குள் மொசக்குட்டி அண்ணன், லிஜோமோள் மிகுந்த சிரமப்பட்டனர்.

பயிற்சி முடிந்து முதல் நாள் படப்பிடிப்பைப் பார்த்த போது எல்லோருக்கும் மகிழ்ச்சி. நடிகர்கள் தான் கொஞ்சம் பயத்திலிருந்தோம். அவரவருக்கான கதாபாத்திரத்தில் ஒழுங்காக நடித்திட வேண்டும் என்று. படப்பிடிப்பில்  பிடித்த விஷயமே என்னவென்றால், அனைவரும் குழுவாக சேர்ந்து வேலை பார்த்ததுதான். இது அவருக்கான வேலை, இதை அவர் தான் பார்க்க வேண்டும் என யாருமே நினைக்கவில்லை. இந்த உணர்வு தான் ‘ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன்.

அதேபோல், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மிகவும் சவாலானதாக இருந்தது. டப்பிங் எல்லோரும் கஷ்டப்பட்டுத் தான் பேசினார்கள். டப்பிங்கில் சின்ன திருத்தங்கள் இருந்தால் கூட, டப்பிங் பேசியவரை மீண்டும் அழைத்துப் பேச வைப்போம். அதற்காக யாரும் வருத்தப்பட்டது கிடையாது. இந்த படத்திற்காக வேலை செய்ய யாரும் அலுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் இருந்ததால் தான், படம் இந்த அளவிற்கு வந்திருக்கிறது.

படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கூட, படம் உருவாகும் விதத்தைப் பார்த்து படத்துடன் ஒன்றிணைந்துவிட்டார்கள். இந்த விஷயம் ரொம்பவே எனக்கு பிடித்திருந்தது.

இருளர் ஒருவரின் தோற்றத்தை வைத்துத்தான் என்னுடைய தோற்றத்தை வடிவமைத்தார்கள். சுருள் முடி, பற்களின் பழுப்பு நிற கறை, லுங்கி, பனியன், செருப்பு போடாத கால்கள், துண்டு போன்றவை தோற்ற உருவாக்கத்திற்கு முக்கியமானதாக இருந்தது.

துண்டை எப்படிப் போடுவார்கள், லுங்கியை எப்படிக் கட்டுவார்கள் என்பதையெல்லாம் அவர்களிடம் நெருக்கமாகப் பழகியதால் தெரிந்துகொண்டேன்.

நாற்பது நாட்கள் பயிற்சியில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் முடிந்ததும் வருத்தமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் ஒழுங்காக நடித்திருக்கிறேனா என்று. சில நேரங்களில் என் மீதே நான் கோபமாக இருப்பேன். பிறகு, நான்  நடித்த காட்சிகளைப் படத்தொகுப்பின்போது பார்த்தபோதுதான் கொஞ்சம் ஆறுதலடைந்தேன்.

கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டாலும், இதற்குக் கிடைத்த அங்கீகாரம் ரொம்ப முக்கியமானதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கே என் மீது நம்பிக்கை வரவைத்திருக்கிறது. 2007இல் மிமிக்ரி ஆர்டிஸ்டாக ஆரம்பித்த என்னுடைய கலை வாழ்க்கை 2021இல் ராஜா கண்ணு என்ற கதாபாத்திரத்தில் வந்து நிற்கிறது,'' என்றார் நம்பிக்கையுடன்.

டிசம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com