இயக்குநர் ராஜ்குமார்
இயக்குநர் ராஜ்குமார்

நான் வளர்த்த மாடு என்னைக் குத்தி கையை உடைத்துவிட்டது!

பேட்டைக்காளி ராஜ்குமார்

 நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். என் முதல் பட (அண்ணனுக்கு ஜே) வெளியீட்டுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள ஊர் ஊராகச் சுற்றினேன். அந்தப் பயணம் தருமபுரி தொடங்கி, ராமநாதபுரம் வரை சென்றது. ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களில், மக்களிடம் பேசிப்பழகி படுத்துறங்கியிருக்கிறேன். அது என்னை ஜல்லிக்கட்டு பற்றிய ஆவணப்படம் எடுக்கத் தூண்டியது. அந்தப் பயணம் என்னை வேறொரு திசைநோக்கி நகர்த்தியது. பெண்ணுக்காக மாட்டைப் பிடிக்கும் ஒருவனின் கதையை ஏன் படமாக எடுக்கக் கூடாது என்று நினைத்து, என்னுடைய முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக இரண்டு வருடம் ஒரு படத்துக்குத் தேவையான காட்சிகளைப் படம் பிடித்தேன்.

அப்போது ஆஹா ஓ.டி.டி.யிலிருந்து தொடர்பு கொண்டு, ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்க என்றார்கள். எடுத்து வைத்திருந்த காட்சிகளை அவர்களுக்குக் காட்டினேன். ‘இதை அப்படியே இணையத் தொடராக எடுக்க முடியுமா?' என்று கேட்டார்கள். எனக்கும் அப்படியொரு விருப்பம் இருந்தது.

ஜல்லிக்கட்டுடனான எனது பயணம் பல சம்பவங்களையும் நினைவுகளையும் கொண்டிருந்தது. அது கதையை விரிவுபடுத்தி எழுதுவதற்கு உதவியது. இதனால், கிளைக்கதைகள் அதிகமானது, எழுதப்பட்ட கதாபாத்திரங்கள் விரிவடைந்தன, மேலும் சில கதாபாத்திரங்களும் வந்து சேர்ந்தன. ஜல்லிக்கட்டு மாதிரியான ஒரு பெரிய வாழ்க்கையைச் சொல்வதற்கு இணையத் தொடர்தான் சரியாக இருக்கும் என்ற என் முடிவு மேலும் உறுதியானது.

கடலுக்கு மீன் பிடிக்க சென்று, முத்தெடுத்து வந்தது மாதிரிதான் பேட்டைக்காளி தொடருக்கு கதை எழுதிய அனுபவம். பேட்டைக்காளியின் கதை ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கிறவனுக்கும், அதை பிடிக்கின்றவனுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பேசுவதாக இருந்தாலும், உழுபவனுக்கே நிலம்

 சொந்தம் என்ற விஷயத்தை பேசுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது காலங்காலமாக இருந்து வரும் பிரச்னை தானே! படத்தில் வரும் கதாபாத்திரங்களை சாதியாகப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, இரு குழுவையும் பாண்டியர்களின் காலாட் படையிலும், அமைச்சரவையிலும் இருந்தவர்கள் என்று கூற வேண்டி இருந்தது.

தொடரில், மாடு பிடி வீரர்களையே பெரும்பாலும் நடிக்க வைத்தேன். அவர்களுக்கும் பயிற்சி கொடுத்தேன். கலையரசன், ஆண்டனி இருவரும் மாடி பிடி வீரர்களுடன் பயணப்பட்டு, மாடு பிடிக்கப் பழகிக் கொண்டனர். ஷீலாவும் பயிற்சி எடுத்தார். கிஷோர் கதாபாத்திரத்தைக் கச்சிதமாக உள்வாங்கி நடித்தார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட நூற்றைம்பது நாள்களுக்கு மேல் நடந்தது. படப்பிடிப்புக்காக நாங்கள் சென்ற ஜல்லிக்கட்டு போட்டிகளே நூறுக்கு மேல் இருக்கும். போட்டிகளை நேரடியாகவும், செட்போட்டும் காட்சிப்படுத்தினோம். போட்டிகளைப் படம்பிடிக்க எட்டு காமிராக்கள் வரை பயன்படுத்தினோம். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் வாழ்வா? சாவா என்பதுதான். எனக்கு மாடு குத்தி ஆறு தையல் போட்டார்கள். நான் வளர்த்த மாடும் என்னை குத்தியதோடு, என் வலது கையும் உடைந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை உடைந்த கையோடுதான் எடுத்தேன். வேறு யாருக்கும் சின்ன கீறல் கூட கிடையாது. ஒவ்வொரு காட்சிகளையும் எடுப்பதற்கு மிகுந்த மெனக்கெட்டோம். படத்தில் சி.ஜி.யே கிடையாது.

மாடும் நல்ல பாம்பும் ஒன்று என்பார்கள். எந்த நேரத்தில் எப்படிப் பாயும் என்றே தெரியாது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அண்ணன் நூறு மாடுகளுக்கு இடையில் காமிராவை வைப்பார். கிஷோர் தொடர்பான காட்சிகளை எடுக்க, ஏழெட்டு மணி நேரம் காட்டுக்குள் நடந்து சென்று எடுப்போம். டெய்லி சவால்தான். மொத்த படக்குழுவும் துணையாக நின்றார்கள். குறிப்பாக மாடு பிடி வீரர்கள்.

இவ்வளவு பெரிய உழைப்புக்கான அங்கீகாரம் தொடர் வெளிவந்ததும் கிடைத்தது. மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆஹா ஓ.டி.டி. தளத்தின் நிறுவனர் அல்லு அரவிந்த், “பேட்டைக்காளியால் தான் ஆஹா ஓ.டி.டி.யே மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது,' என்றார். எல்லா கிராமங்களுக்கும் பேட்டைக்காளி சென்று சேர்ந்திருக்கிறது. இன்று வரை யாராவது தொடரைப் பார்த்துவிட்டுப் பேசுகிறார்கள்.

மற்றொரு பக்கம் தொடரில் ஏன் சாதியை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்று கேட்டார்கள். என்னைப் பொறுத்தவரை ஜல்லிக்கட்டு விளையாட்டில் சாதி இல்லை. எல்லா சாதியிலும் மாடு பிடி வீரர்கள் உள்ளனர். கீழ் சாதிக்காரன் மாட்டைப் பிடித்தான் என்பதற்காக மாட்டை வெட்டிக் கொன்ற சம்பவம் கடந்த சில ஆண்டுகளில் நடந்துள்ளதா? ஜல்லிக்கட்டில் ஏதாவது சாதி பிரச்னை நடந்து, அதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? இல்லை. காலங்காலமாக இருந்துவரும் வர்க்கப் பிரச்னையைத்தான் பேட்டைக் காளி பேசுகிறது.

இணையத் தொடர் இயக்குவதில் நிறைய சுதந்திரம் உள்ளது. இந்த சுதந்திரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டு. நான் எடுக்கும் படங்களை முதலில் என் மகள்களுக்குத்தான் காட்டுவேன். படம் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பதறிவிடுவேன். நான் எடுக்கும் படம் என் குடும்பத்தினருக்கு பிடித்திருந்தால்தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும். இது என் தனிப்பட்டப் பார்வை.

பேட்டைக்காளிக்குப் பிறகு மூன்று ஓடிடி  தளங்களில் இருந்து இணையத் தொடர் இயக்க கேட்டார்கள். அடுத்தடுத்து இரண்டு படங்கள் இயக்க உள்ளதால், அந்தப் பக்கம் செல்லவில்லை. இரண்டு படங்களும் முடிந்த பிறகுதான் பேட்டைக்காளி -2. அதற்கான கதை இருக்கிறது.

வரும் பொங்கலுக்கு ‘ஒரு தாய் மக்கள்' என்ற பெயரில் ஜல்லிக்கட்டு பற்றிய ஆவணப்படத்தை வெளியிடுகிறேன். அதில், பேட்டைக்காளி தொடரில் இடம்பெறாத பல அம்சங்கள் இருக்கும். வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

எனக்கு இணையத் தொடரின் மீது தனி விருப்பம் உண்டு. என்னுடைய அவதானிப்பில் இணையத் தொடருக்கான இலக்கணத்தை உருவாக்கிய தொடர் என்றால், கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones) என்பேன். அதற்கென தனி ஸ்டைலை உருவாக்கிய தொடர் ப்ரேக்கிங் பேட் (breaking bad). இணையத் தொடரை வணிக ரீதியான வெற்றிக்கு அழைத்துச் சென்ற தொடர் மணி ஹெய்ஸ்ட். நம் நிலம் சார்ந்த கதைகள் சொல்லப்பட வேண்டும். அப்படியான கதைகள் இங்கு கொட்டிக்கிடக்கின்றன!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com