லேபில் இணையத்தொடர்
லேபில் இணையத்தொடர்

பத்து வருடங்கள் கழித்துகூட ஹிட்டாகலாம்!

அருண்ராஜா காமராஜ்

திரைப்படமா? இணையத் தொடரா? என்பதை கதைதான் தீர்மானிக்கும். ஒரு கதையை எவ்வளவு நேரம் சொல்ல முடியும் என்பதைப் பொறுத்து தளத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  நான் இயக்கிய முதலிரண்டும் திரைப்படத்துக்கான கதை என்பதால், அதைத் திரைப்படமாகவே எடுத்தேன்.

‘லேபில்' அப்படியானது கதை அல்ல; அந்தக் கதையை எப்படி வேண்டுமானாலும் விரித்துச் சொல்ல முடியும் என்பதால், கதைக்குள் சில கதாபாத்திரங்களை விவரித்து எழுதினேன். அதை இணையத் தொடருக்கு ஏற்ற மாதிரி பிறகு மாற்றிக் கொண்டேன். இதுவரை ‘லேபில்' நான்கு அத்தியாயம் (நவம்பர் 15) வெளிவந்திருக்கிறது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பத்து அத்தியாயங்களும் வெளிவந்தால்தான் அதன் வெற்றி என்னவென்று தெரியும்.

முன்பெல்லாம், மூன்று மணிநேரப் படம் என்பது ரொம்ப சாதாரணம். ஆனால், இப்போது அப்படியே இல்லை. படத்தின் நீளம் குறைந்து கொண்டே வந்துவிட்டது. இணையத் தொடர் அதன் பிரதிபலிப்பு. டி.வி., மொபைல் முன் உட்காருபவர்களுக்கு முக்கால் மணிநேரத்தில் ஒரு சுவாரஸ்யமான கதையைச்சொல்லிவிட வேண்டும். ஆனால், அதற்கான வரவேற்பு திரைப்படத்துக்குப் போன்று கிடைக்காது. திரைப்படம் என்றால், முதல் காட்சியிலேயே வெற்றி, தோல்வி தெரிந்துவிடும். இணையத் தொடருக்கு அனைத்து அத்தியாயங்களும் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும். அதை குறையாகப் பார்க்க முடியாது. ஏனெனில், நாம் கொரோனாவுக்கு பிறகுதான் ஓ.டி.டி. பக்கம் வந்திருக்கிறோம். காலம் செல்ல செல்ல இணையத் தொடருக்கான வரவேற்பு அதிகரிக்கலாம். இனி ஓ.டி.டி.தான் எதிர்காலம்.

அருண்ராஜா காமராஜ்
அருண்ராஜா காமராஜ்

இதில் கவனிக்கப்பட வேண்டியது, இணையத் தொடர் அதிக உழைப்பைக் கோரக்கூடியது. ஏறக்குறைய மூன்று படத்துக்கு செய்யக் கூடிய வேலையை ஒரு இணையத் தொடருக்குச் செய்ய வேண்டும். ஆனால், ஒரு படத்தை இயக்குவதற்கான நேரம்தான் கிடைக்கும். அதிலும் வெளியீட்டுத் தேதி எல்லாம் முடிவாகிவிட்டால் இரவு, பகலாக உழைக்க வேண்டி இருக்கும். இயக்குநர் மட்டுமல்ல ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் என எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் மூன்று படத்துக் கான உழைப்பைக் கொடுக்க வேண்டி இருக்கும்.

இணையத் தொடருக்கு தணிக்கை இல்லையென்று சொன்னாலும் அதை ஓ.டி.டி. நிறுவனங்களே செய்து கொள்கின்றன. கதையில் ஏதேனும் சட்டச் சிக்கலுக்கு உள்ளாகக் கூடிய விஷயங்கள் இருந்தால், அதை அவர்களே நீக்கச் சொல்கிறார்கள். இருந்தாலும், படைப்பு சுதந்திரம் இணையத் தொடரில் மட்டும்தான் உண்டு. திரைப்படங்களில் சொல்ல முடியாத விஷயங்களை இங்கே சொல்லலாம்.

திரைப்படங்களுக்கான ஆயுட்காலம் குறைவு; ஆனால் இணையத் தொடருக்கு அப்படி இல்லை. பத்து வருடங்கள் கழித்துகூட ஹிட்டாகலாம். ஓ.டி.டி. தளங்கள் எவ்வளவு வருடம் இருக்கிறதோ, அவ்வளவு காலத்துக்கு மக்கள் இணையத் தொடர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ‘மணி ஹெய்ஸ்ட்' இணையத் தொடர் அப்படித்தான் ஹிட்டானது. அந்த தொடர் வந்தபோது அதற்குப் பெரிய வரவேற்பு இல்லை.

மாற்றத்தை யாரெல்லாம் உள்வாங்கிக் கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்கிறார்கள். முன்னர் திரையரங்கு, இப்போது ஓ.டி.டி., நாளை இவற்றை விட அதிநவீனமாக வேறு எதாவது வரலாம். கலை சாகாது. அது ஒவ்வொரு வடிவத்தையும் உள்வாங்கிக் கொண்டு பயணிக்கும்!

(சந்திப்பு: தா.பிரகாஷ்)

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com