‘பாட்ஷா படம் பார்த்துவிட்டு ஆட்டோ ஓட்ட விரும்பினேன்!’

‘பாட்ஷா படம் பார்த்துவிட்டு ஆட்டோ ஓட்ட விரும்பினேன்!’

நடிகர் குரு சோமசுந்தரம், கூத்துப்பட்டறையின் மாணவர். நடிப்பின் நுட்பங்களை அறிந்தவர். மலையாள இயக்குநர்களால் வலைவீசித் தேடப்படும் நடிகர்.   ‘மின்னல் முரளி‘ என்ற மலையாள படத்தில் நடித்ததற்காக ஆசியன் அகாடமியால் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அந்திமழைக்காக சந்தித்துப் பேசினோம்.

‘நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் மதுரைதான். வருடம் முழுவதும் திருவிழாக் கோலம் பூணும் நகரம். கோவிலுக்குப் பக்கத்திலேயே வீடு. வாகன நெரிசலற்ற தெருக்கள். கிட்டிப்புள், பம்பரம், கோலி, எரிப்பந்து, பட்டம் என ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு விளையாட்டு. இரவுகளில் மொட்டை மாடியில் வானத்தைப் பார்த்துக்கொண்டே தூங்கிவிடுவோம்.பால்ய காலத்து மதுரை வீதிகள் இன்னும் நினைவில் நிழலாடுகின்றன.

ஆறாம் வகுப்பு படிக்க, அம்மா ஊரான ஆத்தாலூருக்கு (பேராவூரணி அருகே) சென்றுவிட்டேன். அங்குள்ள அரசுப் பள்ளியில் தான் பத்தாம் வரை படித்தேன். என்னுடைய மாமா ஆத்தாலூர் கி.சோமேஸ்வரன், வானொலியில் நாடகங்களைப் போடுபவர். அவர் பேசும் வசனங்களைக் கேட்பேன். அதுபோல பேச வேண்டும் என நினைத்தேன்.

ஒரு முறை மதுரை வானொலி நிலையத்தில், நாடகங்களுக்கான குரல் தேர்வு நடைபெற்றது. அதற்கு ஒரு முறை சென்று வந்திருக்கிறேன்.

மீண்டும் மதுரை. அங்குள்ள சௌராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தேன். பள்ளிக்கு அருகிலேயே அபிராமி, அம்பிகா, அம்பிகை, மதி, மது, நர்த்தானா, அலங்கா, ஷா, ஆஜீரா, சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்பிரியா என பன்னிரண்டு திரையரங்குகள். திரையரங்குகளில் பேசும் வசனங்கள் அருகிலுள்ள வீடுகளுக்கே கேட்கும். படிக்கும் போது மட்டும் சுமார் ஐந்நூறு படங்களுக்கு மேல் தியேட்டரில் பார்த்திருப்பேன் ‘பாட்ஷா' படம் பார்த்துவிட்டு ஆட்டோ ஓட்டச் செல்கிறேன் என்றேன். வீட்டில் மறுத்துவிட்டார்கள்.  ‘ராக்கெட் பற்றிய படம் வந்தால் ராக்கெட் ஓட்டுவாயா' என அண்ணன் கிண்டல் செய்தான்.

மதுரையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் முடித்துவிட்டு, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றினேன். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், வேலையெல்லாம் விட்டுவிட்டு, சுய மதிப்பை நோக்கி ஓடினேன். வீட்டில் சொல்லிவிட்டு, எந்த நோக்கமும் இல்லாமல் சென்னை வந்துசேர்ந்தேன். அந்த சமயத்தில், ‘பொன்னியின் செல்வன்' நாடகம் பற்றிய கட்டுரை ஒன்று படித்தேன். அதில் கூத்துப்பட்டறையை சேர்ந்த நடிகர்கள் நடித்ததாகவும், கமல்ஹாசன், நாசர் ஆகியோர் வந்து பார்த்ததாகவும் எழுதியிருந்தார்கள். சரி, கூத்துப்பட்டறையில் சேரலாம் என முடிவெடுத்து, நாசர் வீட்டுக்கு சென்றேன். என்னுடைய அதிர்ஷ்டம், அப்போது தான் அவர் மாடியில் இருந்து இறங்கி, காரில் ஏற வந்தார். நேராக அவரிடம் சென்று, ‘கூத்துப்பட்டறையில் சேர வேண்டும்'என்றேன். ‘அதற்கு ஏன் இங்கு வந்தீங்க'என்றார். ‘இல்லை... நீங்கள்தான் கூத்துப் பட்டறை நடத்துவதாக நினைத்தேன்' என்றேன். கூத்துப்பட்டறை முகவரியைக் கொடுத்து, ‘நிறைய வருஷங்கள் இருக்கணும். அப்போ தான் கற்றுக்கொள்ள முடியும்' என்று கூறி அனுப்பி வைத்தார்.

2002ஆம் ஆண்டு என்னுடைய 27வது வயதில் கூத்துப்பட்டறைக்குள் நுழைந்தேன். அங்கு கலைராணி அக்காவைப் பார்த்ததும், ‘இவர்தானே முதல்வனில் அர்ஜுன் அம்மாவாக நடித்தவர்! அவரெல்லாம் இங்குதான் இருக்கிறாரா?' என ஆச்சரியப்பட்டேன். நவீன நாடகம் பற்றிய ஒரு புரிதலும் அப்போது இல்லை.

கூத்துப்பட்டறைக்குச் சென்ற மூன்றாவது நாளில், ‘ஒரு வொர்க் ஷாப் இருக்கிறது போய் வாருங்கள்'என்றார் நா.முத்துசாமி சார். ‘வொர்க் ஷாப்பா?... எஞ்சினீயரிங் தானே ஏற்கெனவே முடித்தேன். மறுபடியும் வொர்க் ஷாப் செல்ல வேண்டுமா?' எனயோசித்தேன். அது ஒரு மேடை நாடகத்திற்கான வொர்க் ஷாப் என்பது பின்னர்தான் தெரிந்துகொண்டேன் (குலுங்கக் குலுங்க சிரிக்கிறார்).

நான் நடித்த முதல் மேடை நாடகம் ‘சந்திரஹரி'. பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகம் அது. அதை ‘கைதி'படத்தில் நடித்த ஜார்ஜ் அண்ணனே இயக்கி நாயகனாகவும் நடிக்க இருந்தார். ‘நண்பன்' படத்தில் ஜீவாவின் அம்மாவாக நடித்த சந்திரா அக்கா தான் ஹீரோயின். நான், விமல், விதார்த், ஆனந்த்சாமி என பலரும் புதுமுகங்கள். நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு, முத்துசாமி சாரிடம் ஒத்திகையை நிகழ்த்திக் காட்டினோம். ‘இவன் புது பையன்... நான் இயக்க வேண்டி இருந்ததால், ரிகர்சலில் இவனை ஹீரோவாக வைத்தேன். அரங்கேற்றத்தின்போது நான் ஹீரோவாக நடிக்கிறேன்' என்றார் ஜார்ஜ் அண்ணன். ‘ஜார்ஜ்... நீங்கதான் நிறைய நடிச்சிட் டீங்களே. அந்த பையனே நடிக்கட்டும். இன்னும் சில நாட்கள் ரிகர்சல் கொடுங்க' என சொல்லிவிட்டார் முத்துசாமி. கூத்துப்பட்டறைக்கு வந்த நான்கு மாதங்களிலேயே முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய வசன உச்சரிப்பு நன்றாக இருந்ததால் வாய்ப்பு எளிமையாகக் கிடைத்துவிட்டது. அதன்பிறகு படுகளம், பிரகலாத சரித்திரம், அர்ஜுனன் தபசு  உள்பட நிறைய நாடகங்களில் நடித்தேன்.

கூத்துப்பட்டறை என்பது ஒரு ஆய்வகம் போல. அங்கு இருக்கும் அனைவருக்கும் நாடகத்தின் அனைத்து பணிகளும் தெரிந்திருக்க வேண்டும் என முத்துசாமி நினைப்பார். களரி, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளையும் கர்நாடக இசையின் அடிப்படைகளையும் கற்றுக்கொண்டேன். நிறைய வெளிநாட்டுக் கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றவும் அங்கு வாய்ப்புக் கிடைத்தது.

நானொரு நாடகத்தை இயக்கினேன். அது முத்துசாமி சார் எழுதிய தெனாலிராமன் என்ற நாடகம்.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஏழு வருடம் நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறேன்,' என்றவரிடம், பொருளாதாரத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்து கொண்டீர்கள் என்றோம்.

‘அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி சம்பாத்தியம். கூத்துப்பட்டறையில் இருந்து என்ன சம்பாதிக்கப் போகிறாய் என்பார்கள். கொலம்பியாவிலிருந்து ஐரோ என்பவர் எங்களுக்குப் பயிற்சி அளிக்க வந்திருந்தார். அரங்க செயல்பாட்டினால் நாங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து அவரிடம் புலம்பிக் கொண்டிருந்தோம். அமைதியாகக் கேட்டவர், ‘நீங்கள் எல்லோரும் ஏழையாக இறக்க அச்சப்படுகிறீர்கள்'என்றார். அவர் சொன்னது கன்னத்தில் அடித்ததுபோல் இருந்தது. ஏழையாக சாக பயந்தால் ‘மாற்றாக' (Alternative) எதையும் செய்ய முடியாது என்று நினைத்தேன். நான் நீண்ட காலம் கூத்துப்பட்டறையில் இருந்தேன். அங்கேயே உணவும், தங்குமிடமும் கிடைத்துவிட்டதால் பொருளாதாரத்தைப் பற்றி யோசித்ததில்லை. சினிமாவிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் அப்போதில்லை' என்றவர் முதல்பட வாய்ப்பு குறித்து சொல்லத் தொடங்கினார்.

‘யோசிக்கவே இல்லை. தியாகராஜன் குமாரராஜா என்னை வற்புறுத்தி அழைத்துவந்துவிட்டார். 2003இல் ‘சந்திரஹரி' நாடகத்தைப் பார்த்தவர், ‘நானொரு படம் எடுப்பேன். அதில் நீங்க நடிக்க வேண்டும்' என்றார். ஐந்து வருடங்கள் கழித்து 2008இல் தான் அழைத்தார். ‘உங்களைத் தவிர வேறு யாரும் இந்த கேரக்டருக்கு செட்டாகமாட்டாங்க. அதில் நீங்க தான் நடிக்க வேண்டும்' என்றார். அது தான் காளையன் கதாபாத்திரம். படத்தை பார்த்துவிட்டு ‘யார் இந்த குருசோமசுந்தரம்‘ என தேடுமளவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. உதயம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறேன், ரசிகர் ஒருவர் என்னைப் பார்த்துவிட்டு, அருகே வந்தார் ‘உங்களைப் போல ஒரு அப்பா இருந்தால் நான் பெரிய ஆளாகி இருப்பேன்' என கண்ணீர் சிந்தினார். அதுவே எனக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.

தியாகராஜன் குமாரராஜா நேர்த்தியாக திரைப்படம் எடுக்கக்கூடியவர். ஒரு காட்சியில் தவறு நிகழ்ந்துவிட்டால் உடனே கட்சொல்லமாட்டார். அந்தக் காட்சியை முழுவதுமாக எடுத்துவிட்டு மீண்டும் ரீ டேக் போவார். அவரிடம் கற்றுக் கொண்டது ஏராளம். அதன் பின்னர், நானும் இயக்குநர்களிடம் மூன்று, நான்கு டேக் கேட்பேன். இயக்குநர் மணிரத்னத்தின் ‘கடல்' திரைப்படப் படப்பிடிப்பின் போது, நானொரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை. அது யாருக்கும் தெரியவில்லை. மணிசார் அடுத்த காட்சி எடுக்க ஆயத்தமானார். நான், ‘ஒன் மோர்' என்றேன்.  எல்லோரும் ‘என்ன மணி சார் ஒகே சொன்ன சீனையே ரீ டேக் கேட்கிறீங்க' என்றனர். மணிசார் மீண்டும் அந்த காட்சியை எடுத்தார். நான் செய்த தவறு எனக்குத்தான் தெரியும். எனக்கு என்னுடைய நடிப்பு நேர்த்தியாக இருக்க வேண்டும்.

 ஆரண்ய காண்டம், பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு ஊர்ப்பெரியவர், பஞ்சா யத்துத் தலைவர், கதாநாயகனின் அண்ணன் போன்ற கதாபாத்திரங்கள் வந்தன. எதிலும் நடிக்கவில்லை. நல்ல கதாபாத்திரத்திற்கு காத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் ‘ஜிகர்தண்டா'வில் நடிக்க வாய்ப்பு வந்தது. கார்த்தி சுப்புராஜ் நீண்ட நாள் நண்பர். பாபி சிம்ஹா என்னுடைய மாணவர். அதனால், அந்தப் படத்தில் ஈஸியாக நடித்தேன். படத்தில் பதின்மூன்று நிமிடங்கள் மட்டுமே வருவேன். ஆனால், படம் முழுக்க இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவேன். ஜிகர்தண்டா மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தினாலும், மீண்டும் நல்ல பாத்திரத்திற்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

அப்போதுதான் ஜோக்கர் பட வாய்ப்பு. மன்னர் மன்னன் கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்க இருந்ததாக கேள்விப்பட்டேன். என்னை மு.ராமசாமி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டார் ராஜு முருகன். வயதான வேடம் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மு.ராமசாமியை பரிந்துரை செய்தேன். பிறகு தான் ராஜு முருகனிடம் கேட்டேன். ‘நீங்கள் எப்படிப்பட்ட ஹீரோவை எதிர்பார்க்கறீங்க. நான் ஏன் நடிக்கக்கூடாது, போட்டோ ஷூட், டெஸ்ட் ஷூட் பண்ணுங்க, அதில் திருப்திவந்தால் ஹீரோவாக வைத்து படமெடுங்கள்'என்றேன்.  அவருக்கு மனம் மாறி என்னையே ஹீரோவாக நடிக்க வைத்தார். நன்றாக ஒத்திகைப் பார்த்துவிட்டுத்தான் படப்பிடிப்பிற்குச் சென்றோம். ஐம்பத்தைந்து நாட்களில் படப்பிடிப்பு முடிந்தது. அந்தப் படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இரண்டு தேசிய விருதுகளும் பெற்றது.

அதற்குப் பின்னர் வஞ்சகர் உலகம், பேட்டை உள்ளிட்ட நிறையப் படங்களில் நடித்தேன். தமிழ்ப் படம் ஒன்றின் படப்பிடிப்பில் இருந்தபோது ‘மின்னல் முரளி‘படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் பசில் ஜோசப் படப்பிடிப்பு தளத்திற்கே வந்துவிட்டார். ‘மின்னல் முரளி' க்கு முன்னால் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்‘படத்தில் என்னைத்தான் நடிக்கக் கேட்டார்கள். சுராஜ் வெஞ்சரமூடு நடிச்ச பாத்திரத்தில் நான் நடிக்க வேண்டியது. கண்ணூர் வழக்கு பேசி நடிக்கணும். கதையை கேட்டதும், இதில் மொழி தெரிந்தால் தான் நடிக்க முடியும் என்று சொல்லிவிட்டு. அந்தப் படத்தில் நடிக்கவில்லை

  ‘மின்னல் முரளி' படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே ஷிபு கதாபாத்திரம் பற்றி இயக்குநர் சொல்லிவிட்டார். அதனால் யூடியூப் மூலமாகவும் புத்தகம் மூலமாகவும் மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். தினமும் ஒரு மணி நேரம், குழந்தைகள் மாதிரி நோட்டு வைத்து எழுதிப் படிக்க ஆரம்பித்தேன். படப்பிடிப்பு போகும் போது மலையாளம் ஓரளவு பேசினேன். இப்போதுவாசிக்கவும் கற்றுக்கொண்டேன். தற்போது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக் ஷன் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்தியன்&-2 படத்திலும் உள்ளேன். இந்த சூழலில் தான்  ஆசியன் அகாடமியின் சிறந்த நடிகர் விருது அறிவிப்பு. ‘மின்னல் முரளி‘ படத்தில் ஷிபு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக ‘ஏசியன் அகடமி கிரியேட்டிவ்' இந்த விருதை அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற உள்ள விழாவில் விருதைப் பெறப்போகிறேன்,' என்றார் உற்சாகமாக. நாங்களும் வாழ்த்து சொல்லி விடை பெற்றோம்.

நவம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com